Home இலங்கை பாதுகாக்கப்பட வேண்டிய மாகாண சபைகள் – கலாநிதி நிர்மலா சந்திரகாசன்!

பாதுகாக்கப்பட வேண்டிய மாகாண சபைகள் – கலாநிதி நிர்மலா சந்திரகாசன்!

by admin


(கலாநிதி நிர்மலா சந்திரகாசன் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு “தி ஐலண்ட்” நாளிதழில் 28.12.2020 அன்று பிரசுரமாகியிருந்த இந்த அரசியலாய்வுக் கட்டுரையானது குளோபல் தமிழ்ச் செய்திகளால் தமிழாக்கம் செய்யப்படுகிறது.)


கெவன்ரேயின் டொன் குயிசொட்டில் (மேற்குலகின் முதலாவது நவீன நாவல் எனக் கூறப்படும் நூலில் சொல்லப்படும் கதையில், டொன் குயிசொட் காற்றாலைகளைப் பார்த்து அவை இராட்சதர்கள் என நினைத்து அவற்றுடன் சண்டையிடச் செல்வார். அவை வெறும் காற்றாலைகளே என அவருக்குச் சொல்லப்பட்டும் அதை அவர் நம்பவில்லை) வரும் காற்றாலைகள் போன்ற நிலையிலுள்ள மாகாண சபைகள் மீது விமர்சனங்களும் எதிரான வெறுப்புக் கருத்துகளும் வீசப்படுகின்றன.

மாகாண சபைக்கு எதிரான சில விமர்சனங்களுக்கு இந்தக் கட்டுரையில் பதிலளிக்க நான் விரும்புகிறேன். மாகாண சபைத் தேர்தலுக்கான கள நிலைவரம் தயார் நிலைக்கு வந்ததும், மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் என பிரதமர் அறிவித்தமையை, இந்தப் பத்தி எழுத முன்பாக கவனத்தில் எடுக்கிறேன். பிரதமர் அனுபவமிக்க ஒரு முழுமையான அரசியல்வாதியாக இருப்பதால், நாட்டின் அரசியற் சூழலை அறிந்து அதற்கமைய செயற்படுவார் என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில், இந்த வரவேற்பு அறிக்கையானது எல்லா விமர்சனங்களுக்கும் திடீரென ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.


மாகாண சபைகள் முறைமையானது இலங்கை அரசியலின் மீது இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட திணிப்பு என்பது மாகாண சபைகள் குறித்து அடிக்கடி கூறப்படும் விமர்சனங்களில் ஒன்றாக இருக்கிறது. நிகழ்வுகளின் தொடர்ச்சியைத் தொகுத்து நோக்கில், நாட்டின் தமிழ்க் குடிமக்களுக்கு எதிரான 1983 ஜூலை கலவரம் மற்றும் நாட்டில் உருவாகிய அமைதியின்மையைத் தொடர்ந்து, நாட்டினை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் வழிகளைக் கண்டறியும் இராசதந்திர முயற்சியின் ஒரு பகுதியாக அப்போதைய இந்தியப் பிரதமர் சிறிமதி இந்திராகாந்தி அவர்கள் ஒரு தூதுவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். நடந்துகொண்டிருந்த தமிழ்ப்போராளிகளின் கிளர்ச்சியையும் இலங்கைத்தீவின் இனச்சிக்கலையும் அரசியலமைப்பு மூலமாகத் தீர்ப்பதற்காக, தமிழ்க் கட்சிகளையும் இலங்கை அரசாங்கத்தையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரும் பங்களிப்பைச் செய்யுமுகமாக இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைச் செயன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவே அமைதியையும் இயல்புநிலையையும் நிறுவுவதற்கான இந்திய- இலங்கை ஒப்பந்தம். அதாவது, அ987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொண்டுவரப்பட்ட இந்த இந்தியா- இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் மூலமாகவே அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதோடு 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 42 ஆம் பிரிவாக மாகாண சபைகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த இரண்டு சட்டங்களின் படி மாகாண சபைகள் அமைக்கப்பட்டன.


மாகாண சபைகள் முறைமையானது உள்நாட்டிலிருந்து உருவானதொன்றல்ல என்றும் அது வெளிச்சக்தி ஒன்றினால் திணிக்கப்பட்டதொன்று என மாகாண சபை எதிர்ப்பாளர்கள் வாதாடுகின்றனர். “13 ஆம் திருத்தச் சட்டத்தின் கருத்து மற்றும் உருவாக்கம் ஆகியவற்றின் மூலம்” என தலைப்பிட்டு ஆழமாக ஆய்வுசெய்து தகவல் பொதிந்ததாக பேராசிரியர் காமினி கீரவெல்ல 2020.09.16 அன்று வெளியான “த ஐலண்ட்” நாளிதழுக்கு எழுதிய ஆய்வுக்கட்டுரையை நான் இது தொடர்பாக வாசிக்க வேண்டியதொன்றாக வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறேன். 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலிருந்து, 1956 ஆம் ஆண்டு பண்டா- செல்வா உடன்படிக்கையின் பிரதேச சபைகள் ஊடாக, டட்லி- செல்வா உடன்படிக்கை, 1974 ஆம் ஆண்டு காங்கேசன்துறையில் நடந்த இடைத்தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளிக்கப்பட்ட ஆனால் நடைமுறைக்கு வராமல் போன விடயமான அதிகாரப் பகிர்வு தொடர்பான திட்டம் என்பனவற்றின் ஊடாக மாகாண சபைகள் உருவாக்கத்தின் மூலத்தை இந்தக் கட்டுரையில் பேராசிரியர் காமினி கீரவெல்ல தேடுகிறார்.

அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாண சபைகள் என்பன இந்த நாட்டில் மிக நீண்டகாலமாக அரசியல் தளத்தில் இருந்துவரும் விடயம் என்பதையும் இது வெளிச்சக்தியால் திணிக்கப்பட்டதல்ல மாறாக உள்நாட்டிலிருந்து உருவான அரசியல் விடயம் இதுவென்பதையும் அந்த ஆய்வுக்கட்டுரை உறுதிப்படுத்துகிறது. உண்மையில், இந்த 13 ஆம் திருத்தச்சட்டமானது, ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கத்திற்கும் திரு.அமிர்தலிங்கத்தினால் தலைமைதாங்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையில் 1986 ஆண்டு ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாத காலப்பகுதியில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடல்களின் விளைவாகவே ஏற்பட்டது. ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளராகவிருந்த பெலிக்ஸ் டயஸ் அபேயசிங்க என்பவரே இந்தக் கலந்துரையாடலிற்கு செயலாளராகவிருந்தார். அதற்கு ஓராண்டின் பின்னர் 1987 ஆம் ஆண்டு ஜூலையில் இந்த இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த 13 ஆம் திருத்தச்சட்டம் மற்றும் மாகாணசபைகள் சட்டம் ஆகியன 1987 ஆம் ஆண்டு நவம்பரில் நிறைவேற்றப்பட்டது. அதிகாரப் பரவலாக்கத்தை வழங்கிய 13 ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற இந்திய- இலங்கை ஒப்பந்தம் வழியமைத்ததெனச் சொல்லலாம். பேச்சுவார்த்தைகளில் ஜே. ஆர். ஜெயவர்த்தன தந்திரமாக பயனடைந்தது போல தமிழர் விடுதலைக் கூட்டணியின் பேச்சுவார்த்தைக் குழு விவேகமாக செயற்படவில்லை.

வரையப்பட்ட சட்டங்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளிற்குக் கீழே இருப்பதை பின்னரே உணரத் தலைப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியானது இந்த முன்னெடுப்பிலிருந்து முழுமையாக தூர விலகிக்கொண்டார்கள். மாகாண சபைகள் தொடர்பான அத்தியாயமானது மாகாண சபைகளுக்கு நம்பகமான சுயாட்சியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதற்கு முரணாக, தற்போதய சட்டமானது மாகாணங்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் கூட பாராளுமன்றமும் மத்திய நிறைவேற்றதிகாரமும் அதிகாரம் செலுத்தவல்லதான வழியைக் கொடுக்கிறதெனக் கூறி, இந்த இரண்டு சட்டங்களின் மீதான தனது ஏமாற்றத்தை குறிப்பிட்டு ராஜீவ் காந்திக்கு 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒரு கடிதத்தை அமிர்தலிங்கம் எழுதினார். 13 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பல செயலுறுத்தும் வலுவற்றதாக இருப்பதே மாகாண சபைகள் சட்டம் தொடர்பான சிக்கல் என்பது எனது பார்வை. இது அவ்வாறு இருந்திருக்கலாம் என்பதுடன் மாகாண சபைகள் சட்டத்திற்கு ஒரு சில சட்டத்திருத்தங்கள் செய்வதன் மூலம் இதனைச் சரி செய்யலாம். இது தொடர்பில் மீண்டும் குறிப்பிடுவேன்.


நாட்டில் தமிழ்பேசும் மக்களின் பகுதியான வடக்கு கிழக்கில் தொடர்ந்துகொண்டிருந்த ஆயுத மோதலைத் தீர்க்கும் நோக்கில் மாகாண சபைகள் மற்றும் அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், ஜெயவர்த்தன அரசாங்கமானது மாகாண சபைகள் முறைமையை நாட்டின் எல்லா மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தியது. எனவே, தற்போதய மாகாண சபை முறைமையானது எந்தவொரு குறிப்பிட்ட பிரதேசத்தையோ அல்லது இனத்தையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, நாட்டின் எல்லா மக்களுக்கும் (அது யாழ்ப்பாணமாக இருக்கலாம் அல்லது மாத்தறையாக இருக்கலாம்) தமது சொந்தப் பகுதிகளில் அதிகாரமளிக்கப்பட்டவர்களாக வழிசெய்யும் வகையில் இது அதிகாரமளிக்கிறது. மாகாணங்கள் தொடர்பான முடிவுகளை அர்சியல்வாதிகள் மற்றும் கொழும்பிலுள்ள அதிகாரத் தரப்புகள் மட்டும் எடுக்காமல், அந்த முடிவுகளை உள்ளூர் மக்கள் மற்றும் சமூகங்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொள்ள இந்த முறைமையானது அனுமதிக்கிறது. அதாவது இதைக் குறிக்க காமினி தயசிறி “Colombites” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்.

எனவே, நாட்டிற்கும் நாட்டின் அனைத்துச் சமூகங்களிற்கும் நன்மைபயக்கக் கூடியதொரு விடயத்தையே இந்தியத் தலையீடு கொண்டுவந்தது என நாம் கூறலாம். இருப்பினும், வெளிநாட்டுத் தலையீடு எப்போதும் நல்ல முடிவுகளைத் தருமென்றில்லை. இந்த அத்தியாயத்திலிருந்து கற்றுக்கொள்ளப்பட வேண்டியது என்னவென்றால், நீங்கள் உங்கள் வீட்டை ஒழுங்காக வைத்திருக்கவில்லை என்றால், அதாவது அங்கே குழப்பங்களும் அதிருப்திகளும் நிலவினால், அயலாரும் மிகவும் அயலில் இல்லாதவர்களும் கூட தமது சொந்த நலன்களுக்காக அதில் நிச்சயமாகத் தலையிடப் பார்ப்பார்கள். தீவிர தேசியவாதிகள் மற்றும் சர்வாதிகாரப் போக்குள்ள தரப்புகள் போன்ற ஒரு சிலரின் விருப்பின்படி, நாம் நாட்டிலிருக்கும் அரசியல் முறைமையைக் குழப்புவதோடு சிறுபான்மைச் சமூகங்களுக்கு அவர்களின் பாதுகாப்பற்ற நிலையை உணரச்செய்து அவர்களைக் கிளர்ச்சியடையைச் செய்து, மீண்டுமொரு தடவை மூன்றாம் தரப்பினர்களின் தலையீட்டுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட அது ஈற்றில் வழிவகுக்கும். மூழ்கும் நிலையிலிருந்து காப்பாற்ற, குறிப்பாக நிலவிவரும் நெருக்கடியான பொருளாதாரச் சூழலில், மாகாண சபைகள் முறைமையை இல்லாதொழிப்பதன் மூலம் அரசியல் கட்டமைப்பை உறுதிகுலையச் செய்யாமல் இருப்பதே சிறந்த கொள்கையாக இருக்கும் என சில பகுதிகளில் ஆலோசிக்கப்படுகிறது.


மாகாணமானது அதிகாரப்பகிர்விற்கான பொருத்தமான அலகு அல்ல என மற்றுமொரு விமர்சனம் இருக்கிறது. நானும் ஒரு உறுப்பினராக அங்கம் வகித்திருந்த அரசிலமைப்பு மாற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக அப்போதைய சனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை நான் இத்தகைய விமர்சனத்திற்கு நேர்மாறானதாக மக்களுக்குப் பரிந்துரைப்பேன். “அதிகாரப் பகிர்வு அலகு” என்பதனை நான் அந்த அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். பல்வேறு தெரிவுகள் மற்றும் வேறுபட்ட தெரிவுகளின் இயல்புகள் என்பன குறித்து விரிவான கலந்துரையாடல்களை அந்தக் குழு செய்தது. அதிகாரப் பகிர்வு அலகு என்பது நடைமுறையில் புவியியல் ரீதியாக தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்டதாகவும், சரிசமனான பிராந்திய அபிவிருத்திக்கு உகந்ததாகவும், நிருவாக வினைத்திறனை மேம்படுத்த வகைசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நாம் கொண்டிருக்கிறோம். அலகுகளின் அளாவு வேறுபாடுகள் எதிர்பார்க்கப்பட வேண்டும். இந்தச் சூழலில், அதிகாரப் பரவலாக்கத்திற்குப் பொருத்தமான அலகாக மாகாணம் அமையும் என இக்குழு கருதுகிறது. அந்த நிபுணர் குழுவில் எந்தவொரு அரசியல் கட்சி உறுப்பினர்களும் இடம்பெறவில்லை என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும். சட்டவாளர்கள், கல்வியாளர்கள், நீதி மற்றும் நிர்வாக சேவைகளில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்போரே அந்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்தனர். உண்மை மற்றும் இடவசதி குறித்த கருத்தாய்வுகளின் அடிப்படையிலே அந்தக் கலந்துரையாடல்கள் அமைந்தன.


மாகாண சபைகள் வீண்செலவு வைக்கும் பயனற்றதொன்று எனவும் மற்றும் மக்களிற்குச் சேவைகளைச் செய்வதில் அவை விளைதிறனானதாக இருக்கவில்லை என்பதோடு மாகாண சபைகளை இயக்குவதற்கு அரசு கூடுதலான செலவுகளை வீணாகச் செய்ய வேண்டியிருக்கின்றது என்பது மற்றுமொரு விமர்சனம். இந்த விமர்சனம் சில பொருள்களைக் கொண்டுள்ளது மற்றும் சேவைகளை வழங்குவதில் அதன் இயலாமை குறித்து நாட்டிலுள்ள ஏனைய ஒத்த அமைப்புகளுடன் ஒப்பிட்டு ஆராய வேண்டியுள்ளது.

ஒற்றையாட்சி முறைமையில் இருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் இதேபோன்ற அதிகாரங்கள் வெவ்வேறு இனப் பிராந்திய அலகுகளிற்குப் (ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து (இது உல்ஸ்டர் மாகாணாத்தின் ஒரு பகுதி))பகிரப்பட்டுள்ளன. இந்த அலகுகள் அனைத்தும் அவற்றிற்கென சொந்தமாக சட்டசபைகளைக் கொண்டுள்ளன. ஸ்கொட்லாந்தினைப் பொறுத்தவரை அதற்கென தனியான பாராளுமன்றம் உண்டு என்பதுடன் அவர்கள் West Minster இலுள்ள பாராளுமன்றத்திலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.

ஓரளவுக்கு கூட்டாட்சி அரசியலமைப்பைக் கொண்ட இந்தியாவில் கூட மாநிலங்களுக்குத் தனித்தனியாக ஆளுநர்களும் சட்டசபைகளும் உண்டு என்பதுடன் அந்த அதிகாரங்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனவற்றிலிருந்து பெரிதும் வேறுபட்டனவல்ல. மேற்கூறிய எல்லாச் சந்தர்ப்பங்களிலும், அதிகாரப் பகிர்வு முறையானது வினைத்திறனுடன் செயலாற்றியுள்ளது என்பதுடன் மக்களுக்குத் தேவையான சேவைகளை ஆற்றுவதில் பிராந்திய மற்றும் மாகாண அலகுகள் வினைத்திறனுடன் செலாற்றியிருக்கின்றன. ஆகவே, இலங்கையில் உள்ள மாகாண சபைகள் ஏன் அவ்வளவு சிறப்பாகச் செயற்படவில்லை என நாம் நோக்க வேண்டும்.


வினைத்திறனாகச் செயற்படுவதற்கு போதுமான நிதியளிப்புத் தேவைப்படுகிறது. மாகாணங்களின் நிதி தொடர்பான விடயங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமானது மாகாண சபைகள் சட்டத்தின் சரத்துகளின் கீழ் ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வரியையும் விதிக்கவோ அல்லது இரத்துச் செய்யவோ கோரி நியதிச் சட்டங்களை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாகாண சபைகள் நிறைவேற்றமுடியாது. இந்த விடயத்தில் ஆளுநர்கள் ஒத்துழைக்கவில்லை. எனவே மாகாண சபைகள் பெருமளவில் மத்திய அரசின் மானியங்களிலே தங்கியிருக்க வேண்டியுள்ளது.

மாகாணங்களுக்குள்ள வரையறுக்கப்பட்ட வரி அறவிடும் அதிகாரமானது மாகாணங்கள் கடன்களையும் முதலீடுகளையும் பெறுவதில் தடையாக இருக்கின்றது என்பதுடன் வெளிநாட்டு உதவிகள் மற்றும் முதலீடுகளால் நிதியளிக்கப்படும் திட்டங்களை நிர்வகிப்பதில் கூடத் தடையாக இருக்கின்றது என மத்திய சுற்று உறவுகள் தொடர்பான பாராளுமன்ற உபகுழுவானது 2016 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. “பற்றாக்குறையானதும் முறையான கொள்கைகளற்ற நிதி ஏற்பாடுகளால் விளையும் பாதகமான விளைவுகளானவை மாகாண சபைகளின் சேவையாற்றும் தன்மையைப் பலவீனமாக்குகின்றது என்பதோடு, இது அரசியலமைப்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட சனநாயக நிறுவனங்கள் மீது நம்பிக்கையிழப்பு ஏற்பட இது வழிசெய்கின்றது” என இந்தக் குழு முடிவுசெய்தது.


மாகாண பொது சேவை மற்றும் மாகாண பொதுசேவைகள் ஆணையகத்தின் கட்டுப்பாட்டை மாகாண சபைகள் சட்டம் ஆளுநருக்கு வழங்குகின்றது. இவை தேசிய பொதுச் சேவையில் சனாதிபதி கூட வைத்திருக்காத அதிகாரங்களாகும். மத்தியில் ஆளும் கட்சியே மாகாண சபையின் அதிகாரத்திலும் இருக்குமாறான மாகாணங்களில், ஆளுநர் தமக்கான சிறப்பு அதிகாரங்களை திடசங்கற்பமாகப் பயன்படுத்தும் தன்மை குறைவாக இருக்கும் என்பதோடு, அத்தகைய இடங்களில் முதலமைச்சர்கள் வினைத்திறனுடன் செயற்பட முடிந்திருக்கிறது. இருந்தபோதும், வடக்கு மற்றும் கிழக்கின் மாகாண சபைகளுக்கு இந்த வகையில் குறைந்தளவு வழிவகையே உள்ளது. மறுபுறம் இந்தியாவில், மாநிலங்களின் ஆளுநர்கள் அரசியலமைப்புத் தலைவர்கள் போல செயற்படுகிறார்கள், ஆனால் அவர்கள் நிறைவேற்றுச் செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை.


மீளமைப்புத் தேவைப்படும் மற்றொரு பகுதியானது மாகாணத்தின் நிர்வாக சேவையாகும். அதிகாரப் பரவலாக்கமானது விளைதிறனாக அமைய வேண்டுமெனில் மாகாண சபைகள் இருமைத் தன்மையற்றனவாக இருக்க வேண்டுமெனவும், அதனால் மாகாணங்களின் நிர்வாகம் மறுகட்டமைப்புச் செய்யப்பட வேண்டுமெனவும் 2006 ஆம் ஆண்டின் நிபுணர் குழுவின் அறிக்கை பரிந்துரை செய்தது. அடுத்த கரிசனையான விடயம் என்னவெனில் விடயங்களின் ஒதுக்கீடு என்பதாகும். மாகாணத்திற்கும் மத்தியிற்கும் இடையிலான விடயங்களின் ஒதுக்கீடுகள் பற்றி இரண்டு பட்டியல்களும் பொதுப்பட்டியலும் 13 ஆம் திருத்தச் சட்டத்தில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அதிகாரங்களின் இடையீட்டினால் மாகாணங்களின் செயற்பாட்டு எல்லை மட்டுப்படுத்தப்படுவதாகவிருக்கிறது. மாகாணங்கள் திறம்பட செயற்படுவதற்கு விடயங்களின் ஒதுக்கீடுகளில் தெளிவு இருக்க வேண்டும். இதுவும் நோக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

மாகாண சபையின் வினைத்திறனான செயற்பாடுகளுக்குத் தடையாகவுள்ள மாகாண சபை முறைமையின் குறைபாடுகளை நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இந்தக் குறைபாடுகளில் பெரும்பாலானவை மாகாண சபைகள் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டவை. சாதாரண பாராளுமன்றப் பெரும்பான்மையினால் இந்தச் சட்டத்தைத் திருத்த முடியும். மாகாணங்களின் நிர்வாக மாற்றங்கள் மற்றும் நிர்வாக சேவை மீள்கட்டமைப்பு ஆகியனவற்றை 13 ஆம் திருத்தச் சட்டத்தின் படி வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் சனாதிபதியால் செய்ய முடியும். இதற்குப் பெரிய அரசியலமைப்பு மாற்றங்கள் எதுவும் தேவையில்லை.
அதன் குறைபாடுகள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் எல்லை மீறல்கள் அதன் மீது இருந்தபோதும், மாகாண சபை முறைமையானது நாட்டில் வேரூன்றிவிட்டது.

மாகாண மட்டத்தில் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் இது வழிவகுக்கிறது. உள்ளூர் மட்டத்தில் அரசியல் சிக்கல்களில் அனுபவத்தைப் பெற்ற நபர்கள் இதன் வாயிலாகத் தேசிய மட்டத்திற்கு ஈர்க்கப்படவும் முடியும். தமது சொந்த விவகாரங்கள் மற்றும் வட்டாரங்களுக்குட்பட்ட விடயங்களை ஓரளவு தம்மால் நிர்வகிக்க முடியுமென சிறுபான்மைத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் உணர இது வழிவகுக்கிறது. ஸ்கொட்டிஸ், வேலிஸ் மற்றும் வட ஐரிஸ் போன்ற இனங்களுக்கு அவர்களின் பகுதிகளுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டிருக்கும் ஐக்கிய இராச்சியம் போல, பல்லின மக்கள் வாழும் எந்தவொரு நாட்டிற்கும் இந்த அதிகாரப் பரவலாக்கப் பாதுகாப்பு ஏற்படுவது இன்றியமையாதது.

மாகாண சபை முறைமையை அகற்ற முயற்சிக்காமல், தேவையான மாற்றங்களைச் சட்டத்திருத்தங்கள் மற்றும் நிருவாக நடவடிக்கைகள் மூலம் செய்துகொண்டு மாகாண சபை முறையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மக்களுக்கு அவர்கள் வாழும் பகுதிகளில் சேவைகளைத் திறம்பட வழங்க வல்ல வகையில் மாகாண சபை முறைமையை உருவாக்க வேண்டும்.
மாகாண சபைகள் இலங்கை அரசியலமைப்பின் பகுதியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன.

கொழும்பிலுள்ள அதிகாரத் தரப்புகள் மற்றும் அமைச்சர்கள் இதனை சந்தேகத்துடன் விரோதப்போக்குடனும் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்த நாட்டை ஆளுவதற்குத் துணைபுரியும் நிறுவனங்களாக மாகாண சபைகளைக் கருதி, அதனை மேலும் வினைத்திறனான நிர்வாகமாகவும் முழுநாட்டையும் மேலும் சனநாயகத்தன்மையுடன் ஆளுவதற்கான நிறுவனங்களாகவும் மாற்ற வேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் மற்றும் மாகாண மற்றும் உள்ளூர் அதிகாரங்களை நோக்கிச் செயற்படுவதன் மூலமாக, தமிழ்க் கட்சிகளானவை தமிழ் பேசும் மக்களின் வேணவாக்கள் மற்றும் நலன்களை ஊக்குவிப்பதோடு தேசிய நலனுக்கான செயன்முறையிலும் ஈடுபட இயலும்.

மாகாண சபைத் தேர்தல்கள் வருகின்ற ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் எனவும் தற்போதுள்ள அரசியலமைப்பின் தொடர்ச்சி பேணப்படும் எனவும் நம்பலாம்.

(கலாநிதி நிர்மலா சந்திரகாசன் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு “தி ஐலண்ட்” நாளிதழில் 28.12.2020 அன்று பிரசுரமாகியிருந்த இந்த அரசியலாய்வுக் கட்டுரையானது குளோபல் தமிழ்ச் செய்திகளால் தமிழாக்கம் செய்யப்படுகிறது.)


Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran December 31, 2020 - 5:56 pm

மாகாண சபை தொடர்பான மாற்றங்களை செய்ய அரசாங்கம் பின்வருவம் பணிகளை ஓரளவாவது செய்து முடிக்க வேண்டும்.

1. மற்றவர்களின் வளர்ச்சியால் சிங்களவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
2. அதிகாரம் பெற்ற மாகாண சபையின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.
3. மேலாதிக்க சிந்தனை மற்றும் பேரினவாத சிந்தனையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்.
4. ஸ்ரீலங்கா ஒரு பன்முக கலாச்சார நாடு என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
5. ஸ்ரீலங்காவின் உண்மையான வரலாற்றை எழுதி குடிமக்களுக்கு கற்பிக்க வேண்டும்.
6. அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள அரசியல் விருப்பம் உடையவர்களாக வேண்டும்.
7. குடிமக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும்.

இவற்றுக்கான அழுத்தத்தை எல்லோரும் கொடுத்தால் மாகாண சபைகளை பாதுகாத்து மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More