யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தால் அழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று இரவு வேளையில் (08.01.21) JCP இயந்திரத்தின் மூலம் இடித்தழிக்கப்படுவதை அறிந்து, பல்கலைக்கழக முன்னாள், இன்னாள் மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பகுதியில், கோப்பாய் காவற்துறையினரும் இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய எவருக்கும் பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினர் அனுமதியளிக்கவில்லை எனவும், அதன் பின் அவ்விடம் சென்ற காவற்துறையினரும் எவரையும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் நினைவாக, 2018ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.