ஜேர்மனி அதிபர் அங்கெலா மெர்கலின் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (Christian Democratic Union) தலைவராக கட்சியின் மூத்த பிரமுகர் ஆர்மின் லாசெற் (Armin Laschet) தெரிவு செய்யப் பட்டிருக்கிறார்.
வரலாற்றில் முதல் முறையாக கட்சித்தலைவர் தெரிவு அங்கு டிஜிட்டல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றிருக் கிறது. ஒன் லைனில் நடந்த கட்சியின் மாநாட்டில் ஆர்மின் லாசெற் 521 வாக்குகள் பெற்று தலைவராகத் தெரிவானார்.
59 வயதான மையவாதி ஆர்மின் ஜேர்மனியின் மக்கள் தொகை கூடிய North Rhine-Westphalia மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஆவார். அவர் அங்கெலாவின் இடத்துக்கு அதிபர் வேட்பாளராக வருவாரா என்பதை நிச்சயிக்க இன்னமும் பொறுத்திருக்க வேண்டும்.
உலகின் சக்தி மிக்க நாடுகளில் ஒன்றான ஜேர்மனியின் தலைமைப்பதவிக்கு வரக்கூடிய செல்வாக்கு மிக்கவர்களில் கூட்டணிக் கட்சியான கிறிஸ்தவ சமூக யூனியனின் (Christian Social Union) தலைவர் மார்கஸ் சோடர்(Markus Soeder) அவர்களும் உள்ளார்.
பவாறியா (Bavaria) என்ற பெரிய மாநிலத்தின் ஆளுநராக அவர் பதவி வகிக்கிறார். ஜேர்மனியில் சான்சிலர் எனப்படும் நாட்டின் அதிபர் பதவியில் கடந்த 16 ஆண்டுகள் நீடித்துவந்த அங்கெலா மெர்கல் அம்மையார் வரும் செப்ரெம்பர் மாதம் பதவிவிலகுகின்றார்.
2005 முதல் அதிபர் பதவியில் நீடித்துவரும் அவர் செப்ரெம்பர் 26 இல் நடைபெறவுள்ள தேர்தலில் ஐந்தாவது தவணைக்காலத்துக்கும் போட்டியிடப் போவதில்லை என்பதை ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
மைய வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின்(CDU) தலைவர் பதவியில் இருந்தும் விலகி உள்ளார்.இடையில் நடைபெற்ற கட்சித்தலைவர் தெரிவில் வெற்றியீட்டிய கிறம்ப் கரம்போவர் (Kramp-Karrenbauer) அம்மையார் கட்சிக்குள் ஒற்றுமையை நிலைநாட்ட முடியாத சிக்கலில் பதவி விலகி இருந்தார்.
இப்போது கட்சி அதன் தலைவராக ஆர்மின் லாசெற் (Armin Laschet) அவர்களைத் தெரிவு செய்துள்ளது.வைரஸ் நெருக்கடி, அதை கையாண்ட விதம், அதற்குப் பிந்திய பொருளாதார நிலைவரம் என்பன அடுத்த செப்ரெம்பர் தேர்தலில் தாக்கம் செலுத்தும் முக்கிய விடயங்களாக இருக்கும்.
குமாரதாஸன். பாரிஸ்.16-01-2021