கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை காலமும் வைத்தியசாலைப் பணிப்பாளராக பணியாற்றிய வைத்தியர் கலைநாதன் இராகுலன் மருத்துவ நிர்வாக உயர் படிப்புக்காக செல்கின்ற நிலையில், வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்கொண்டு செல்லக்கூடிய நிரந்தர பணிப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.
மேலும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் பிரதான வைத்தியசாலையாகவுள்ள கிளிநொச்சி வைத்தியசாலை தனது சேவைக்காலத்தில் கொரோனா நோய்தொற்று நெருக்கடியின் மத்தியிலும், பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து மாவட்ட மக்களுக்கு சிறப்பாக சேவை பெறக்கூடிய வைத்தியசாலையாக முன்கொண்டு சென்றதுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்க வகையில் செயற்படுத்தப்பட்டிருந்தது.
மாவட்ட பொதுவைத்தியசாலையை நோயாளரது எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய வைத்தியசாலையாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன், பல புதிய துறைசார் வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்பட்டதுடன் (இருதய நோய் மருத்துவ நிபுணர் புற்றுநோய் மருத்துவ நிபுணர் அகஞ்சுரப்பு மருத்துவ நிபுணர் மூட்டுவாத மருத்துவ நிபுணர்) வைத்தியசாலையில் பெரும் பிரச்சனையாக இருந்த வைத்தியர்கள் பற்றாக்குறையும் வைத்திய ஆளணியை அதிகரித்ததன் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டது.
45 வரையான மருத்துவர்களே பணிபுரிந்த கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது 70இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் பணியாற்றுவதுடன் 25இற்கும் அதிகமான வைத்திய நிபுணர்கள் பணியாற்றுகின்றனர்.
மேலும் பெண்களுக்கான “மகப்பேற்றிற்கான சிறப்பு மருத்துவப்பிரிவு” இன் நிர்மாணப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டதுடன், S.K.நாதன் எனும் நன்கொடையாளரது நிதிப்பங்களிப்புடன் 52மில்லியன் பெறுமதியான கண் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை விடுதி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவுறும் தறுவாயில் உள்ளது.பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட வெளிநோயாளர்பிரிவு (OPD) தொடர்பான முறைப்பாடுகள் சீர்செய்யப்பட்டதுடன்,வைத்தியசாலையின் நீண்டகால குறைபாடாக காணப்பட்ட வைத்தியசாலை கழிவுநீர் சீராக்கல் பொறிமுறை தற்காலிகமாக சீர்செய்யப்பட்டு சூழலுக்கும் அருகிலுள்ள மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் மாற்றியமைக்கப்பட்டது.
வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்ந்தும் ஆரோக்கியமான வழியில் முன்கொண்டு செல்லவும், 2021இல் பிரேரிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை தொடர்பான பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மற்றும் நிர்மாணப்பணிகள் தடையற்று இடம்பெறவும் நிரந்தர பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதே மாவட்ட சுகாதார திணைக்களத்தின் எதிர்பார்ப்பாகும்.மாவட்டபொது வைத்தியசாலையை கிளிநொச்சி மாவட்ட மக்களுக்குரிய வைத்தியசாலையாக மாத்திரம் வைத்திருக்காமல் வடமாகாண மக்கள் பயன்பெறும் வைத்தியசாலையாக முன்கொண்டு செல்லும் பொருட்டு தன்னுடைய ஆளணி மற்றும் சேவை வழங்கலை வேறு மாவட்ட மக்களும் பயன்பெற வைத்த பணிப்பாளராக காணப்பட்ட வைத்திய கலாநிதி க.ராகுலன் அவர்கள் பட்டப்படிப்பு நிறைவு செய்ததும் மீண்டும் எமது வைத்தியசாலைக்கே பணிப்பாளராக நியமிக்கப்படவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் #கிளிநொச்சி #பொதுவைத்தியசாலை #வைத்தியர் #வடமாகாண #நிபுணர்கள்