ஆதி லிங்கேஸ்வரர் கோவிலில், தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தொல்பொருள் திணைக்களத்தால் வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் கடந்த 22.01.21ல் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கோவில் பூசகர் உட்பட மூவரும், இன்று (27.01.21) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் சின்னங்களைச் சேதப்படுத்தியதாகத் தெரிவித்து, தொல்பொருள் திணைக்களத்தால் கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவித்து, கடந்த 22ஆம் திகதிய வழக்கில் முன்னிலையாகியிருந்த பூசகர் உட்பட்ட மூவரையும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு, இன்று (27.01.21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
இந்த வழக்கின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த சுமந்திரன், இந்த வழக்கானது, ஆரம்பத்தில், குற்றவியல் சட்ட கோவையின் 106ஆவது பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதான வழக்காகவே ஆரம்பிக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர், தொல்லியல் பணிப்பாளர் நாயகம் ஒரு சான்றிதழ் கொடுத்திருந்தார் எனவும் கூறினார்.
‘இன்றைய வழக்கில் காவற்துறையினர் சார்பில் குற்றப்பத்திரிகை ஒன்று நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது வழக்கு தொடுனர் அல்ல. வழக்கு தொடுனர் அதனை வரைந்து நீதிமன்றத்துக்கு கொடுத்தால் கூட அதன் முழுப்பொறுப்பு நீதிமன்றத்தையே சாரும். நீதவான் அவ்வாறு ஒருவரை குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரம் இருந்தால் மாத்திரமே அந்த குற்றப்பத்திரத்தை கையொப்பம் இட்டு அவருக்கு வழங்குவார்.
‘ஆனால், இந்த வழக்கிலே ஆதிலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் என்ற காரணத்தால் அவர்களுக்கு எதிராக இந்தக் குற்றப்பத்திரிகை வரையப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாக நாங்கள் மன்றுக்கு தெரிவித்திருந்தோம்.
‘இதையடுத்து, வழக்கினை தொடர்ந்து புலன்விசாரணை செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அவர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
‘இதேவேளை வழக்கு விசாரணை, மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ எனவும், சுமந்திரன் தெரிவித்துள்ளார்.