பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே சிறந்த தீர்வாக அமையும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று (31.01.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் றாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முக்கிய 3 பிரேரணைகளை முன்வைத்திருந்தேன். இதில் குறிப்பாக சம்பள விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்பதனை இரு பிரேரணைகள் வலியுறுத்தின. அந்த கோரிக்கை தற்போது வெற்றியளித்துள்ளது. இதன்காரணமாகவே கால்நூற்றாண்டு காலமாக பாராமுகம் காட்டிய அரசாங்கம், இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் தலையிட்டுள்ளது.
சம்பள விவகாரத்தில் அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் அவை நடைமுறைக்குவருவதில் தொடர்ச்சியாக தோல்விகளே ஏற்பட்டுள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என நிறைவேற்று அதிகார ஜனாதிபதியே கட்டளையிட்டிருந்தார். அந்த கட்டளைகூட நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு செய்வதற்கு தடையாக கூட்டு ஒப்பந்த முறைமையே இருக்கின்றது.
எனவேதான் தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்ற யோசனையையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்தேன். தென்பகுதி மக்களைப்போல மலையக மக்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே சகல வழிகளிலும் சாத்தியமான தீர்வாக அமையும் என நம்புகின்றேன்.
அதேவேளை, தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து நான் ஒதுங்கியுள்ளேன். ஆனாலும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளராக நானே செயற்படுகின்றேன். யாப்பை எழுதி, அதனை பதிவு செய்து, ஸ்தாபக பொதுச்செயலாளராக நானே செயற்படுகின்றேன்.
தேர்தலொன்று அறிவிக்கப்பட்டு, அதில் தொழிலாளர் தேசிய சங்கம் தனித்து போட்டியிடும் பட்சத்தில், அப்போது அரசியல் பிரிவு குறித்து தீர்மானம் எடுக்கப்படும். தேர்தலொன்று அறிவிக்கப்படாத காலக்கட்டத்தில் அது பற்றி கதைப்பது பயனில்லை.” – என்றார். #பெருந்தோட்டத் தொழிலாளர்கள் #தொழிலாளர்தேசியசங்கம் #திலகராஜ்
(க.கிஷாந்தன்)