Home இலங்கை நடைமுறைகளைப் பின்பற்ற முடியாவிடின் பட்டமளிப்பு விழாவைப் பிற்போடுங்கள்

நடைமுறைகளைப் பின்பற்ற முடியாவிடின் பட்டமளிப்பு விழாவைப் பிற்போடுங்கள்

by admin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கோவிட் 19 நிலமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம் என வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

யாழ். பல்கலைக் கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில்,
பட்டமளிப்பு நிகழ்வை கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துமாறு கோரி, அந் நடைமுறைகளைப் பட்டியலிட்டு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் வருமாறு:

நாட்டில் எழுந்துள்ள கோவிட் 19 பரவல் அபாயத்தை அடுத்து, பரவலைத் தடுக்கும் வகையில் பொது நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் அடிப்படையில், இந் நிகழ்வு பற்றி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடனும், தொற்று நோயியல் பிரிவின் தொற்று நோயியல் நிபுணருடனும் நாம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின், பின்வரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரே அமர்வில் பங்குபற்றுபவர்களின் ஆகக் கூடிய எண்ணிக்கை 150 ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் அமர்வுகள் மீள் பட்டியலிடப்பட வேண்டும். மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் உட்பட வேறு எவரும் பல்கலைக்கழக வளாகத்தினுள் அனுமதிக்கப்படக் கூடாது.

முன்னைய அமர்வில் பங்கு பற்றியவர்கள் வெளியேறிச் சென்ற பின்னர் மட்டுமே அடுத்த அமர்வுக்கு உரியவர்கள்
 மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் தங்களுடன் தனிப்பட்ட படப்பிடிப்பாளர்களை அழைத்து வருவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.

ஒவ்வொரு அமர்வின் போதும், மண்டபத்தினுள் நுழையும் சகலரது பெயர், பாலினம், வயது, தேசிய அடையாள அட்டை இலக்கம், முகவரி, தொடர்பு இலக்கம் உட்பட்ட விபரங்கள் மண்டப நுழைவாயிலில் வைத்துப் பதிவு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் பதிவு செய்யப்பட்ட அந்தந்த அமர்வுக்குரிய விபரங்களை நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடம் கையளித்தல் வேண்டும்.

ஒவ்வொரு அமர்வின் போதும், மண்டபத்தினுள் நுழையும் சகலருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு,
காய்ச்சல் போன்ற நோய் நிலைகள் காணப்படின் அவர்கள் மண்டபத்தினுள் நுழைய முடியாதவாறு தடை செய்யப்பட வேண்டும்.

மண்டபத்தினுள் நுழையும் சகலரும் தமது கைகளைக் கழுவுவதற்கான வசதிகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்படுத்துவதுடன், ஒவ்வொருவரும் கைகளைக் கழுவிய பின்னர் உள் நுழைவதை உறுதிப்படுத்துவது பல்கலைக்கழக நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

மண்டபத்தினுள் முகக்கவசம் அணிந்து உள் நுழைவதையும், தொடந்து அணிந்திருப்பதையும் உறுதிப்படுத்துவது நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

இரண்டு நபர்களுக்கிடையிலான சமூக இடைவெளியாக ஒரு மீற்றர் தூரம் பேணப்படுவதை உறுதி செய்வதும் நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

நிகழ்வு இடம்பெறும் சுற்றாடலில் உள்ளும், வெளியும் உணவுப் பொருள்கள், நீராகாரங்கள் எந்தவொரு வடிவத்திலும் கையாளப்படுவதற்கு அனுமதியளிக்கப்படக் கூடாது.

மேலதிகமாக நிகழ்வுக்கு முறையான அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடம் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

அனுமதிக்கு மேலதிகமாக, நிகழ்வைத் திட்டமிடும் போதும், நிகழ்வின் போதும் நல்லூர் பிரதேச வைத்திய அதிகாரியின்
 பிரசன்னத்துடன் அவரது ஆலோசனைகளை ஏற்று, ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இந்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் சிக்கல்கள் காணப்படுமாயின் கோவிட் 19 பெருந்தொற்று அபாயம் இயல்பு நிலைக்கு வந்த பின்னர் புதிய நாள் ஒன்றுக்கு நிகழ்வைப் பிற்போடுவது உகந்ததாகுமென ஆலோசனை வழங்கப்படுகிறது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட செயலாளர், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் உள்பட 11 பேருக்கு அந்தக் கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன #சுகாதார_நடைமுறை #பட்டமளிப்புவிழா #பிற்போடுங்கள் #கேதீஸ்வரன் #யாழ்_பல்கலை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More