அறிமுகம்
இலங்கையின் கால்பந்தாட்ட வரலாற்றில் மட்டக்களப்பிற்கெனத் தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. கிழக்கிலங்கையின் கால்பந்தாட்டம் முகிழ்த்த நகரமாக மட்டக்களப்பே விளங்கியுள்ளது. இற்றைக்கு ஏழு தசாப்தங்களுக்கு முன்னரேயே அங்கீகாரம் பெற்ற கால்பந்தாட்டத்தை முன்னெடுத்த கிழக்கிலங்கையின் தாய்ச்சங்கமாக மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் திகழ்ந்துள்ளது. மட்டக்களப்பில் இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கும் அரைநூற்றாண்டு கால வரலாற்றைக் கடந்த கழகங்களான மைக்கல்மென் கழகம், பாடுமீன் பொழுதுபோக்குக் கழகம் என்பன மட்டக்களப்பின் விளையாட்டுத்துறையினதும் குறிப்பாகக் கால்பந்தாட்ட வரலாற்றினதும் நீண்ட செழுமையான மரபினை வெளிப்படுத்தும் சாட்சிகளாக உள்ளன.
மட்டக்களப்பு பாடுமீன் பொழுதுபோக்குக் கழகம் மட்டக்களப்பின் பன்மைப்பண்பாடுகளை அலங்கரித்த ஒரு தனித்துவமான கழகமாக விளங்கி வந்துள்ளது. மட்டக்களப்பில் வாழும் பல்லின, பல்மத, பல்சமூக குழுமங்களைச்சேர்ந்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் அவர்களுடைய திறமைக்கேற்ப வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் ஆற்றுகைகளை இவ்வுலகத்தில் நிகழ்த்திட களமமைத்த கழகமாக அதன் வரலாற்றில் தடம்பதித்துள்ளது. மட்டுநகர் பாடுமீன் கழகத்தின் வெற்றியைத் தம்முடைய வெற்றியாகக் கருதி ஆடிப்பாடிய தமிழ் இசுலாமிய பறங்கி இன இரசிகர்களை நாங்கள் வெபர் அரங்கிலே பார்த்திருக்கிறோம்.
இத்தகைய பெருமைகள் கொண்ட பாடுமீன் கழகத்தின் நிகரில்லா வீரனாகவும், பயிற்றுவிப்பாளராகவும் திகழ்ந்த நபர்களுள் ஒருவரே ரெட்ணா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் மதிப்பிற்குரிய திரு.மா.ரெட்ணசிங்கம் ஆவார். கிழக்கிலிருந்து தேசிய கால்பந்தாட்ட அணிக்கு விளையாட வேண்டிய அனைத்து தகுதிப்பாடுகளும் இருந்தும் அத்தகைய வாய்ப்புக் கிடைக்காத ஒரு வீரனாகவே அவர் தனது காலத்தில் கால்பந்தாட்டத்தை ஆடியுள்ளார்.
கிழக்கிலங்கையில் பின்னாட்களில் கால்பந்தாட்டத்தில் பிரபல்யமடைந்த பல வீரர்களை, கால்பந்தாட்டத்தை நோக்கி இழுத்த ஓர் ஆதர்ச கால்பந்தாட்ட நாயகனாக இவர் களமாடியுள்ளார். இத்தகைய வீரர்கள் தாங்கள் பாடுமீன் கழகத்தின் ரெட்ணாவைப் பார்த்து அவரைப்போல சிறந்த வீரனாக ஆகவேண்டும் என்று கால்பந்தாட்டம் ஆடியதாக கூறியுள்ள கூற்றுக்கள் ரெட்ணா எனும் கிழக்கின் கால்பந்தாட்ட ஜாம்பவானைப் புரிந்து கொள்ளப் போதுமானது.
ஆரம்ப காலம்
திரு.மா.ரெட்ணசிங்கம் அவர்கள் 1950.01.16 ஆந் திகதி மட்டுநகரில் மாணிக்கசிங்கம் வள்ளிநாயகி தம்பதிகளுக்கு நான்காவது பிள்ளையாகப் பிறந்துள்ளார். இரண்டு பெண், நான்கு ஆண் சகோதரர்களைக் கொண்ட அழகான குடும்பத்தில் வளர்ந்துள்ளார். இவருடைய குடும்பமே விளையாட்டுத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டதாக இருந்துள்ளது. குடும்பத்தில் இவரைத்தவிர ஏனையோர் அனைவரும் மைக்கல்மென் கழகத்தின் அங்கத்தவர்களாக இருக்க இவர் மாத்திரம் பாடுமீன் கழகத்தின் அங்கத்தவனாகவே வாழ்ந்து வருகின்றார்.
மட் புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் தரம் மூன்று வரை கற்றதன் பின்னர் மட் புனித மிக்கேல் கல்லூரியில் இணைந்த இவர் எஸ்.எஸ்.சி வரை அங்கேயே கல்விப்பயணத்தைத் தொடந்துள்ளார். புனித மிக்கேல் கல்லூரியில் கற்ற காலத்தில் பாடசாலையின் கால்பந்தாட்ட அணிகளில் முக்கியமான வீரனாகவும், அணித்தலைவராகவும் இவர் தனது ஆற்றுகைகளை நிகழ்த்தியுள்ளார். 14,15,16,17,19 வயதுப்பிரிவுகளுக்கான கால்பந்தாட்ட அணிகள் யாவற்றிலும் தொடர்ச்சியாக இடம்பெற்றதுடன் மாகாண மட்டத்தில் சம்பியனாகவும், இரண்டாவதாகவும் பல விருதுகளைப் பெற்று புனித மிக்கேல் கல்லூரியின் கால்பந்தாட்ட அணிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இக்காலத்தில் கால்பந்தாட்டத்தில் மட்டுமன்றி உயரம்பாய்தல், கோலூன்றிப்பாய்தல், கூடைப்பந்தாட்டம், கடினபந்து கிரிக்கட் முதலிய விளையாட்டுக்களிலும் முன்னணி வீரனாக இவர் பிரகாசித்துள்ளார். 1958 – 1967 வரை புனித மிக்கேல் கல்லூரியில் இவர் ஒரு சகலதுறை விளையாட்டு வீரராக மிளிர்ந்துள்ளார்.
18 வயதிற்குட்பட்டோருக்கான கனிஸ்ட தேசிய கூடைப்பந்தட்டப் போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி அணி தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுக்கொண்ட போது அவ்வணியில் திரு.மா.ரெட்ணசிங்கமும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக் காலத்தில் உடற்கல்வி ஆசிரியரான எஸ்.அந்திரேயஸ், இயேசுசபைத் துறவியர்களான வணக்கத்திற்குரிய ஜோசப்மேரி, வணக்கத்திற்குரிய டேனியல், வணக்கத்திற்குரிய போல்சற்குணநாயகம் அடிகளார்களிடமிருந்து விளையாட்டுப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார். வணக்கத்திற்குரிய அடிகளார் வெபர் அவர்கள் பாடசாலையில் விளையாடும் வீரர்களில் அகக்கூடியது மூன்று வீரர்கள் மாத்திரமே வெளியில் ஒரு கழகத்தில் விளையாட அனுமதிக்கப்படுவர் என்ற நிபந்தனையினை நடைமுறைப்படுத்தியதனால் இவருடன் கற்ற வீரர்களான டெஸ்மன், ஜோசப், றொசைறோ ஆகிய மூவரும் மைக்கல்மென் கழகத்திற்குச் சென்றமையால் தான் பாடுமீன் கழகத்தைத் தெரிவு செய்ய வேண்டி வந்ததாகக் கூறுகின்றார். இவர் மைக்கல்மென் கழகத்தில் வரவேண்டும் என்பதை பாதர் வெபர் விரும்பியிருந்தார் எனவும் இறுதிவரை பாதர் தன்னை மறக்காது அவ்வப்போது தனக்கு உதவிகள் புரிந்துள்ளார் எனவும் நெகிழ்வுடன் கூறுகிறார்.
பாடுமீன் கழகத்தில்…
பாடுமீன் கழகத்தின் கால்பந்தாட்ட அணியில் பல வருடங்கள் தொடர்ச்சியாகப் பங்குகொண்டு மகத்தான பல வெற்றிகளின் பங்குதாரனாக திரு ரெட்ணா திகழ்ந்துள்ளார். பாமீன் கழகத்தில் பல தலைமுறைகளுடன் இவர் களமாடியுள்ளார். க.ஜெயராஜா, க.ஆனந்தராஜா, திருச்செல்வம், ஜெயசூரியம், சவரிமகேசன், சல்மான், ஹஸன், கமலநாதன், பத்மநாதன், பரீட், ஹஸ்மீர், ஹெனடி, தயானந்த, பெனாண்டோ, ராஜா, மேனன், பிரபா முதலான இன்னும்பல பெயர்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களுடன் பங்குபற்றியுள்ளார்.
தன்னுடன் பாடுமீன் கழகத்தில் களமாடிய திறமையான வீரர்களுள் ஹெனடியைப் பற்றி புகழ்ந்து பேசுகின்றார். ஹெனடியின் அலாதியான ஆட்டத்தை மைதானத்திலேயே தான் இரசிப்பதாகவும் தான் மத்திய கள வீரராக ஆடிய நாட்களில் தன்னால் பரிமாற்றப்பட்ட பந்தை ஹெனடி தவறாமல் பேறாக்கி மகத்தான, மறக்கமுடியாத பல வெற்றிகளைப் வெற்றதை பெருமையுடன் நினைவுபடுத்துகின்றார். இதேபோல் ஏனைய வீரர்கள் பற்றியும் சிலாகித்துக் கூறுகின்றார்.
மாவட்ட கால்பந்தாட்ட வீரனாக…
திரு மா.ரெட்ணசிங்கம் அவர்கள் 1970 – 1975 வரை மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட அணியின் தலைவராகச் சிறந்த ஆற்றுகையினைச் செலுத்தியுள்ளார். இக்காலத்தில் ரெட்ணசபாவதி, அந்திரேயஸ், சௌந்தரராஜன், சிங்கராஜா ஆகியோரிடம் கால்பந்துப் பயிற்சிகளைப் பெற்றதுடன் 1982 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் இரண்டாமிடம் பெற்ற மாவட்டத் தெரிவு அணியிலும் விளையாடியுள்ளார்.
அக்காலங்களில் உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்டக் கழகங்கள் பல இலங்கைக்கு சுற்றுலா விஜயம் செய்த போது மட்டக்களப்பிற்கும் வந்துள்ளன. உதாரணமாக இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைட்டட், சீனநாட்டு அணி, பிரான்ஸ் நாட்டு அணி, இந்தியன் ரெயில்வே அணி முதலிய அணிகள் மட்டக்களப்பு வந்து மட்டக்களப்பு மாவட்டத் தெரிவு அணியுடன் வெபர் மைதானத்தில் போட்டியிட்ட போது அப்போட்டிகளில் முக்கிய வீரராகக் களமாடியதுடன் மன்செஸ்டர் யுனைட்டட், சீன நாட்டு அணிகளுக்கு எதிராகக் கோல் போட்ட மட்டுநகர் வீரராகவும் திரு ரெட்ணா அவர்கள் முத்திரை பதித்துள்ளார்.
இத்துடன் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணி சீனாவிற்குச் செல்வதற்காக உள்நாட்டில் பயிற்சிகளை நிறைவு செய்து மாவட்டத் தெரிவு அணிகளுடன் போட்டியிட்ட காலத்தில் அந்தத் தேசிய அணி மட்டக்களப்பு கால்பந்தாட்ட அணியிடம் 2:0 எனும் பேறினால் தோல்வி கண்டிருந்தது. அப்போது அந்த தேசிய அணியை வெற்றி கொண்ட மட்டக்களப்பு அணியில் ரெட்ணா முக்கிய பங்காற்றியிருந்தார். தனது தகுதிக்கேற்ப தேசிய அணியில் வாய்ப்புக் கிடைக்காதமை பெரும் வருத்தமாகவே உள்ளதாக இன்றும் தனது அதங்கத்தைக் கூறுகின்றார்.
1979 ஆம் ஆண்டு மட்டக்களப்பின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கால்பந்து பயிற்றுவிப்பாளராக..
மாவட்ட கால்பந்தாட்ட அணியின் தலைவராகப் பல போட்டிகளில் தலைநகர் கொழும்பில் பங்குபற்றியதால். தேசியப் பயிற்றுவிப்பாளர்களிடம் கால்பந்து நுட்பங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் இவருக்குக் கிடைத்துள்ளன. உதாரணமாக திரு கிங், நடராஜா, லோரன்ஸ் பெர்ணாண்டோ, ஜோ.ஆரியபால, நாமேஸ், அல்பட் பெர்ணாண்டோ, ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த வேக்அட்பாபே ஆகியோரிடம் பயிற்சிகள் பெற்று அவற்றினை மட்டக்களப்பில் உள்ளுர் வீரர்களுக்குப் பரிமாற முடிந்ததாகக் கூறுகின்றார்.
1982 ஆம் ஆண்டு அங்கீகாரம் பெற்ற கால்பந்தாட்டப் பயிற்றுனராக நியமிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை மட்டக்களப்பின் கால்பந்தாட்டத்தில் சிறந்த பயிற்றுனராக இவர் தனது பங்களிப்பை வழங்கி வந்துள்ளார். இத்தோடு கால்பந்தாட்ட நடுவராகவும் பங்குபற்றி கால்பந்தாட்டத்தை கிராம மட்டத்திலிருந்து வளர்க்க உழைத்துள்ளார்.
பாடுமீன் கழகமூடாகவும், மாவட்டத் தெரிவு அணியூடாகவும் இவரிடம் பயிற்சிகள் பெற்ற வீரர்கள் பலர் சிறந்த கால்பந்து வீரர்களாகவும், கால்பந்து நடுவர்களாகவும், விளையாட்டுத்துறைசார் உத்தியோகத்தர்களாகவும,; உடற்கல்வி ஆசிரியர்களாகவும், கால்பந்து பயிற்றுனர்களாகவும் பரிமாணம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய மட்டக்களப்பின் கால்பந்தாட்டம் குறித்து…
முதுபெரும் கால்பந்தாட்ட ஆளுமையான இவர் மட்டக்களப்பின் கால்பந்தாட்டம் குறித்து பின்வருமாறு காத்திரமான ஆலோசனைகளை முன்வைக்கிறார்.
‘அந்தக் காலத்தில் கால்பந்தாட்டத்தைப் பொறுத்த வரையில் வசதிகளும் வாய்ப்புக்களும் மிக மிகக் குறைவாகவே இருந்தன, ஆனாலும் நாங்கள் கிடைத்தவற்றைக் கொண்டு முயன்று சாதித்தோம். எங்கள் வீடுகளில் குடும்பத்தினர் விளையாட்டை ஊக்குவித்தனர், பெற்றாரும் உறவினரும் பிள்ளைகளின் விளையாட்டு ஆற்றல்களைக் கொண்டாடினார்கள். பாடசாலைகள் விளையாட்டை ஊக்குவித்தன நாங்கள் வளர்க்கப்பட்டோம், வளர்ந்தோம், சாதித்தோம்.
தற்போதைய காலத்தில் வளங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன ஆனால் ஆர்வம் அற்ற நிலைமையே பெருவாரியாகக் காணப்படுகின்றது. பெரும்பாலான பெற்றார்கள் பிள்ளைகளின் விளையாட்டை ஊக்குவிப்பதில் அக்கறையற்றுக் காணப்படுகின்றார்கள். படிப்பு மட்டுமே பிரதானம் பெறுகின்றது. எங்களது காலத்தில் படிப்பும் விளையாட்டும் இரு கண்களாக இருந்தன, விளையாடியவர்கள் எல்லோரும் பரீட்சைகளில் தேறினார்கள். படிப்பை விளையாட்டு வளர்க்குமே தவிர ஒருபோதும் பாதிக்காது எனவே நமது இளந்தலைமுறையினரும் பெற்றாரும் விளையாட்டுக்களை நேசிக்க வேண்டும்.
கால்பந்தாட்டத்தைப் பொறுத்த வரையில் அன்றைய நாட்களில் மட்டுநகரில் மைக்கல்மென், பாடுமீன், வீ.ஆர்.சி, அந்தனீஸ், டைனமோஸ் என ஐந்து கழகங்களே இயங்கின இந்த ஐந்து கழகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல ஐந்தும் முன்னணியிலேயே திகழ்ந்தன. ஐந்து கழகங்களும் எஃப்.ஏ கிண்ணத்திற்கான தேசியமட்டப் போட்டிகளுக்குச் சென்றன.
இன்று கழகங்கள் அதிகரித்து விட்டன எல்லாக் கழகத்திலும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். நான் போட்டிகளில் மிகச்சிறந்த வீரர்களைக் காணுகின்றேன். இத்தகைய சிறந்த திறமையான வீரர்கள் ஒன்றிணைந்து விளையாடும் நிலைமைகள் தற்போதைக்கு மிகவும் அவசியம் என நான் உணர்கிறேன். நல்ல திறமையான பயிற்றுனர்களின் பயிற்றுவிப்பில் தற்போதைய சிறந்த வீரர்கள் சேர்க்கப்பட்டு தொடர்ச்சியாகக் கால்பந்துப் போட்டிகளில் பங்குபற்றினால் மட்டக்களப்பு அன்றைய நிலையினை மீண்டும் எட்டிப்பிடிக்க முடியும். இதை எப்படிச் சாத்தியமாக்குவது என்பதே கேள்வி.
அன்று தரமான வீரர்கள் இயல்பாகவே ஐந்து கழகங்களுக்குள் இணைந்து கொள்ளும் நிலைமை இருந்தது. இன்று வீரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறியே காணப்படுகிறார்கள். இத்தகைய கால்பந்து வீரர்களை ஒன்றிணக்கும் பொறிமுறை ஒன்றை மட்டக்களப்பின் கால்பந்தாட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக ஊருக்குள் பல்வேறு கழகங்கள் விளையாடுவதற்கும், மாவட்ட மட்டத்தில் தெரிவு வீரர்களைக் கொண்ட பலம்பொருந்திய சில கழகங்கள் விளையாடுவதற்கும் என்று புதிய முறைமை ஒன்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும். இப்படிச் செய்தால் மட்டக்களப்பின் கால்பந்தாட்டத்தை தேசிய ரீதியில் முன்னுக்குக் கொண்டு வரமுடியும்.’
நிறைவாக…
இவ்வாறு மட்டக்களப்பின் கால்பந்தாட்டத்தில் முடிசூடா மன்னனாகத் திகழும் திரு.மா.ரெட்ணசிங்கம் அவர்கள் கால்பந்தாட்ட இரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த கால்பந்து வீரனாக மதிக்கப்படுவதுடன், மட்டக்களப்பின் கால்பந்தாட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புக்களாலும், கழகங்களாலும், தனிநபர்களாலும் பல்வேறு தடவைகள் கௌரவிப்புக்களையும், மாண்புகளையும் பெற்றுள்ளார்.
இத்தகைய முதுபெரும் கால்பந்தாட்ட வீரனுடைய வரலாற்றை மீட்டுப் பார்க்கும் போது நாம் பெறும் படிப்பினையாவது உரிய திறமைகள் உரிய காலத்தில் பொருத்தமான இடங்களுக்குத் தெரிவு செய்யப்படாது அவர்களுக்குரிய அங்கீகாரம் மறுக்கப்படுவதால் குறித்த நபர் மாத்திரமன்றி அவர் சம்பந்தப்பட்ட துறையின் ஒட்டுமொத்த எதிர்காலமுமே வலுவிழந்து போகச் செய்யும் நடவடிக்கையாகவே அது அமைந்திருக்கும் என்பதாகும். திரு.மா.ரெட்ணசிங்கத்தை ஒத்த ஆற்றலும், ஆளுமையுமுள்ள கால்பந்து வீரர்களுக்குரிய சரியான வாய்ப்புக்கள் உரிய காலத்தில் வழங்கப்பட்டிருந்தால் பிராந்தியங்களினதும், தேசியத்தினதும் கால்பந்தாட்டத்தின் பரிணாமம் வேறுவிதமாக நடைபெற்றிருக்கும் என்பதை நாம் இன்றைய நிலையில் நின்று ஊகிக்க முடிகின்றது.