இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம், நாட்டின் தென்பகுதியின் பல இடங்களில் காவல்துறைச் சித்திரவதை தொடர்பான 13 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, சித்திரவதைக்கு எதிரான இலங்கை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஜெனீவாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தகவல்களை குறித்த குழு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து மிகக் குறுகிய காலத்திற்குள் சித்திரவதை இல்லாத ஒரு நாட்டை உருவாக்குவதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளமை துரதிர்ஷ்டவசமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சட்டத்துறை மாணவரான மிகாரா குணரத்ன மீது அண்மையில் நடத்தப்பட்ட காவல்துறையினாின் தாக்குதல் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகக் கூறப்பட்டாலும், கடந்த காலங்களில் இதைவிட மரணத்தைக்கூட ஏற்படுத்தக்கூடிய தாக்குதல்கள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அரசாங்கத்திற்கும் பிரஜைகளுக்கும் நினைவூட்டுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வருட பிற்பகுதியில் மஹர சிறைச்சாலையில் கைதிகள் மீதான மிருகத்தனமான தாக்குதலுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவில்லை என்பதோடு, வெலிகடை சிறைத் தாக்குதல் உட்பட சிறைச்சாலைகளில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
11 பேர் கொலை செய்யப்பட்ட மஹர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் காவல்துறை விசேட அதிரடிப்படையால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழு முன்னதாக அறிவித்திருந்தது.
காவல்துறைச் சித்திரவதைகளால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் குறித்து சித்திரவதைக்கு எதிரான இலங்கை கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளால், இலங்கை உலகளாவிய மனித உரிமைக் குறியீட்டில் மேலும் வீழ்ச்சியடைந்து வருவதோடு, இது நாகரீக தேசமாக இலங்கையின் கௌரவத்தையும் நற்பெயரையும் கடுமையாக களங்கப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்திரவதையில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஒரு அடிப்படை உரிமை மாத்திரமல்ல எனவும், சித்திரவதை என்பது குற்றவியல் சட்டத்தின் கீழ் 1994ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும் எனவும் சித்திரவதைக்கு எதிரான இலங்கை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பிரஜைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதும் சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதும் ஒரு பொறுப்பான அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத பொறுப்பு என்பதை அரசாங்கத்திற்கு மீண்டும் வலியுறுத்துவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
காலி மாவட்டத்தின் பிட்டிகல காவல் நிலையம், மாத்தறை மாவட்டத்திள் ஹக்மீமன காவல் நிலையம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல மற்றும் தங்காலை காவல் நிலையங்கள், குருநாகல் மாவட்டத்தின் பொத்துஹெர மற்றும் வெல்லாவ காவல் நிலையங்கள், களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம காவல்நிலையம், கொஸ்கொட மற்றும் பயாகல காவல்நிலையங்கள், பொலன்னறுவை மாவட்டத்தின் அரலகன்வில காவல் நிலையம் ஆகியவற்றில் தலா ஒரு சித்திரவதை சம்பவமும், கம்பஹா மாவட்டம் பேலியகொட காவல்நிலையத்தில் மூன்று சித்திரதை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சித்திரவதைக்கு எதிரான இலங்கை கூட்டமைப்பு எனப்படுவது, சித்திரவதை இல்லாத இலங்கையை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதிலும் செயற்படும் 27 சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. #தென்பகுதி #காவல்நிலையங்களில் #சித்திரவதைகள் #சித்திரவதைக்குஎதிரானஇலங்கைகூட்டமைப்பு