தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, எவ்விதமான வழக்கு விசாரணைகளுமின்றி, நீண்ட காலங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை, புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, சபையில் கோரிக்கை விடுத்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இன்று (22) நடைபெ்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, தான் உள்ளிட்ட தற்போது அமைச்சர்களாக உள்ள பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார்.
இதன்போது சிறைச்சாலைகளின் நிலைமைகள் நன்கு தெரிந்துக்கொண்டதாகவும். தனக்கு எனது அப்பா (பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ) கற்றுக்கொடுத்ததைவிட கடந்த அரசாங்கம் அதிகமானவற்றை கற்றுக்கொடுத்தததாகவும் தெரிவித்தார்.
புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பல இளைஞர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் எனது வயதைவிட அதிகளவானக் காலம் சிறைச்சாலையில் இருக்கிறார்கள்.
இதில் 35 பேர் வழக்கு விசாரணைகளில் ஏதுமின்றி தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்றார். இந்த 35 பேரில் அதிகளவானோர், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலத்தைவிட அதிகளவானக் காலம் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள்.
எனினும், நீண்டகாலமாக தடுப்புக் காவலில் உள்ள, மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 38 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைத்துக்கொண்டு, 20 வருடங்களுக்கு மேலாக இந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இவர்களுக்கு மத்தியில் 13 பேர் எந்தவிதமான வழக்குகளும் தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத 116 பேர், சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள். இவர்கள் பல வருடங்களாக தடுப்புக் காவலில் உள்ளனர். இவர்களுக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் இல்லை என்றால் இவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்ய வேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்தக் காலத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை
செய்யப்பட்டனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவர்களுக்குப் பிணை வழங்க முடியாத நிலைக் காணப்படுகிறது. எனவே, இவர்களைப் புனர்வாழ்வுக்குட்படுத்தி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.