தலைமன்னார் பியர் பகுதியில் 62 பேர் தற்போது வரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளாா்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (25) வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்
மேலும் நேற்றையதினம் (24) மன்னாரில் சமூக தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது எனத் தொிவித்த அவா் முதல் கட்டமாக மன்னாரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற 494 பேரூக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.
எஞ்சிய நபர்களுக்கும், நடுக்குடா பகுதியில் உள்ள கடல் உணவு பதனிடும் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றவர்களுக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.
மன்னார் மாவட்டத்தில் இது வரை 5 கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது.மூன்று தினங்களுக்கு முன்னர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா வினால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்