Home இலங்கை கொரோனா உருவாக்கும் புதிய தொழில் முயற்சியாளர்! ந.லோகதயாளன்.

கொரோனா உருவாக்கும் புதிய தொழில் முயற்சியாளர்! ந.லோகதயாளன்.

by admin

கொரோனா காலத்தில் பல புதிய முயற்சியாளர்களை உருவாக்குவதோடு மீண்டும் பழமையை ஒட்டிய இயற்கை முறமை வாழ்வியலிற்கு திரும்பும் சூழலையும் சிலருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.

மாடு வளர்ப்போர் காலத்தில் தற்போது நல்ல அதிஸ்ட காலம் என்றே கூற வேண்டும். ஏனெனில் பால், இறைச்சி என்பனவற்றின் விலை ஏற்றத்திற்கு அப்பால் எரிவின் விலை ஏற்றமே மகிழ்ச்சியான காலம் என்றே கூறப்படுகின்றது.

கால் நடை வளர்ப்பு என்பது தொழில் அற்ற வீட்டில் இருப்பவர்கள் அல்லது விவசாயிகள் பகுதி நேரமாகவுமே மேற்கொள்ள வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்ட அல்லது வருமானம் அற்றவர்கள் மேற்கொள்ளும்  ஒரு தொழிலாகவே பார்க்கப்பட்டு  வந்தது . ஏனெனில் பால் மா பைக்கேற் விலை ஏறினால் மட்டுமே பாலின் விலை ஏறும். கால் நடைகளிற்கான போதிய வைத்திய வசதிகள் இன்மை என்பதற்கும் அப்பால் அதிக கால் நடைகள் வளர்க்கப்படும் வன்னிப பகுதியில் இன்று வரையில் மேச்சல்தரைகள் எவையுமே இல்லை. இவ்வாறு பல நெருக்கடிகளின் மத்தியில் கால் நடை வளர்ப்பாளர்கள் சிரமப்படுகின்றபோது மழை காலத்தில் மாடு இல்லாதவன் ராசா எனக் கூறித் தப்பிக்கும் சூழலும் எம் மத்தியில் இருந்தது.

2020 ஆம் ஆண்டு டிசம்பர மாதம் வரையில் வன்னியில் இருந்து ஒரு பார ஊர்தி எரு யாழ்ப்பாணம் ஏற்றி வந்து தோட்டத்தில் பறித்தாள் 25 ஆயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபா வரையில் செலவு ஏற்பட்டது. ஆனால் தற்போது 50 ஆயிரத்திற்கும் பெற முடியாது 60 ஆயிரத்தை தொட்டுவிட்டது என விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த விடயம் வன்னியில் என்ன நிலமை என ஆராய்ந்தோம்.

விசுவமடுப பகுதியில் தென்னஞ் செய்கையில் ஈடுபடும் விவசாயியான சு.புவிநாயகம்  தகவல் தருகையில் கடந்த ஆண்டு வரையில் நல்ல காய்ந்த எரு ஒரு உழவு இயந்திரம் தகரம் அடைத்து உயர்த்தி ஒரு சுமை 5 ஆயிரம் ரூபாவிற்கு பெற்ற நாம் இன்று 8  ஆயிரத்திற்கும் பெற முடியாத சூழல் ஏற்பட்டு 10 ஆயிரத்தை நெருங்குகின்றது. வன்னியிலேயே இந்த நிலமை உள்ளபோது லொறியில் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணம்  எடுத்துச் சென்றால் வாகனக் கூலியுடன் 60 ஆயிரம் ரூபாதான் விற்கும் நிலமை காணப்படும் என்கின்றார்.

கால்நடை வளர்ப்பாளர்களை இந்த அரசு ஏறக்குறைய கை விட்டுவிட்டது என்றே கூறும் காலத்தில் அரசின் திட்டத்தில்  இல்லாது அரசு செய்த ஓர் செயலின் எதிர் வினையால் இன்று கால் நடை வளர்ப்பாளர்கள் முக்கியத்துவம் பெறுகின்றோம். என்னிடம் அதிக கால் நடைகள் தற்போது இல்லாது விட்டாளும் 7 மாடுகள் உள்ளன. இந்த 7 மாடுகள் மூலம் பெறும் பால் உற்பத்தியின் ஒட்டு மொத்த பணத்தையும் செலவு செய்தாளும் பராமரிப்புச செலவிற்கு போதுமானதாக இருப்பதில்லை இருந்தும் கன்றினை விற்று ஓர் வருமானம் தேட முடியும் என்பதற்காகவும் நாம் அடுத்தவரிடம் கையேந்தாமல் போதிய பால், தயிரை பெற முடியும் என்பதற்காகவே என்போன்றோர் கால் நடை வளர்ப்பை தொடர்ந்தோம்.

இன்று நாட்டில் தவிடு, புண்ணாக்கு முதல் உழுந்து கோது வரையில் விலை  அதிகரித்து விட்டது. இந்த வன்னி பெருநிலப்பரப்பில்கூட மாடு மேய்க்க இன்றுவரை இடமில்லை. ஆனால் வேறு தேவைகளிற்கு இடம் வழங்குகின்றனர். இவ்வாறு எம்மை எண்ணிப்பார்க்காத நிலமையில் ஒரு லோட் எரு கடந்த காலத்தில் வீடு தேடி வந்து உழவு இயந்திரம் எனில் மூவாயிரம் ரூபாவிற்கும் லொறி 10 தொடக்கம் 15  ஆயிரத்திற்கும் ஏற்றிச் செற்றனர். ஒரு வருடம் முழுவதும் சேர்வதே ஒரு லொறி எருவாக அமையும். ஆனால் இன்று ஒரு உழவு இயந்திரம் எனில் 5 ஆயிரம் ரூபா முதல் 7 ஆயிரம்  ரூபாவிற்கும் ஒரு லொறி எனில் 30 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய தயாராகவுள்ளது ஓரளவு ஆறுதலாக உள்ளபோதும் எமது எருவை நாம் விற்பனை செய்வது கிடையாது எமது வயலின் பயன்பாட்டிற்கு எடுத்து விடுவோம என கிளிநொச்சி திருவையாற்றைச் சேர்ந்த சு.கணபதிப்பிள்ளை தெரிவித்தார்.

இதேநேரம வடக்கின் 5  மாவட்டங்களில் மட்டும் 4 லட்சத்து 10  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் பட்டியாகவும் வளர்ப்பு மாடுகளாகவும் உள்ளது.  இவற்றினை பராமரிப்பதில் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியில் எரு விலை ஏற்றம் இவர்களைப் பொறுத்த மட்டில் ஒரு ஆறுதல அளிக்கும் செய்தியாகவே உள்ளது. வடக்கில் அதிக மாடுகளைக் கொண்ட முதலாவது மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் விழங்குகின்றது இங்கே 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. இரண்டாவதாக வவுனியா மாவட்டத்தில் 80 ஆயிரம் மாடுகள் உள்ளன. இதேபோன்று மன்னாரில் 72 ஆயிரம் வரையில் உள்ளதோடு நான்காவதாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகமாகவுள்ளது. இங்கே 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. கிளிநொச்சியில் 45 ஆயிரத்தை தாண்டிய அளவில் உள்ளது.

இதிலே யாழ்ப்பாணம் மாவட்டத்திலே எங்குமே எருமை கிடையாது. ஏனைய  நான்கு மாவட்டத்திலும் எருமை இனத்தையும் உள்ளடக்கியதே இந்த எண்ணிக்கையாகும் என  வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் சி.வசீகரன் தெரிவிக்கின்றார்.

இதேநேரம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கால் நடை வளர்ப்போர் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டாக அதிகரித்தே காணப்படுவமனால் கடந்த ஆண்டு வரையில்  பிரபல ஒலி, ஒளி வாடகை சேவையினை நடாத்தி தற்போது மாடு வளர்ப்பில் ஈடுபடும்  திருநெல்வேலியைச் சேர்ந்த 48 வயதுடையவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

40 முதல் 50 லட்சங்களை வட்டிக்கும் கடனாகவும் வாங்கி ஏற்றி இறக்கும் வாகனம் முதல் மின் பிறப்பாக்கி மற்றும் ஒலி பெருக்கி சாதணங்களுடன் மின் குமிழ்களையும் கொள்வனவு செய்தாள், நிகழ்வுகள், ஆலயத் திருவிழாக்களின்போதே எமக்கான வருமானத்தை ஈட்ட முடியும். இந்த சூழலில் ஏப்பிரல 21 தாக்குதல் அதன் பின்பு கொரோனா என இரண்டு ஆண்டுகளாக வரும் வலுமானம முழுமையாக தடைப்பட்டு விட்டது. இதனால் எவ்வளவு காலத்திறகு இருக்கும் பொருளை விற்பனை செய்து வாழ்வாதாரம் நடாத்துவது இற்கு மாற்றீடு என்ன என எண்ணியபோதே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் ஆலோசணையின் பெயரில் 3 கறவை மாடுகளையும் இரு ஆடுகளையும் கொள்வனவு செய்து அதனை ஓர் தொழிலாக மேற்கொள்வதனால் உணவிற்கு அடுத்தவரை நாடாவேண்டிய நிலமையில்லை. இருப்பினும் 24 மணிநேரமும் கால் நடைகளுடன் நேரத்தை செலவு செய்ய வேண்டும் . அதனால் அந்த பயனை எட்ட முடிகின்றதோடு கொரோனாவையும் எதிர்கொள்ள முடிகின்றது என்கின்றார்.

கிளாலிப் பகுதியில பெரும் தென்னம் தோட்டம் நடாத்தும் கோண்டாவிலைச் சேர்ந்த ஒரு வர்த்தகர்  தகவல் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் நாம் தொடர்ச்சியாக எருவை பெறுவதனால் வாகன உருமையாளர்கள் விரும்பிய நேரம் கொண்டு வந்து இறக்கிய நிலமையில் இன்று தேடியும பெற முடியாதமையினால் கடல் கரைகளில் பாசி ஏற்றித் தாக்கும் நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்கின்றார்.

சிறிமா அரசின் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளிற்கு கிடைத்த ஒரு வாய்ப்பு தற்போது மாடு வளர்ப்போருக்கு காட்டும் என பண்ணையாளர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக வவுனியா வடக்கில் பட்டி வைத்திருக்கும் பண்ணையாளர் தெரிவித்தார்.

அரச ஊழியர்களும் மாடு வளர்ப்பை நாடுகின்றனர்.

அதிபர்கள், ஆசிரியர்கள் பலரும் பாடசாலை எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாது பால்மாடு வளர்ப்பு உடனடியத் தேவையை ஈடுசெய்யும் என நம்புகின்றனர். இவ்வாறு புதிதாக மாடு ஒன்றை வாங்கி பால் விற்பனையில் ஈடுபடும் பெயரை குறிப்பிட விரும்பாத ஆசிரியர் தகவல் தருகையில்,

தற்போதைய கொரோனா பரவலை இந்த அரசு முறையாக கையாள்வதாக தெரியவில்லை. இதனால் பாடசாலைகள் எப்போது மீள ஆரம்பிக்கும் என்பதனை திட்டவட்டமாக கூற முடியாது என்பதனால் நாள் ஒன்றிற்கு 10 லீற்றர் பால் கறக்கும் பால் மாட்டை95 ஆயிரம் ரூபாவிற்கு கடந்த ஏப்பிரல் மாதம் கொள்வனவு செய்து தற்போது தினமும் 10 போத்தல் அல்லது 11 போத்தல் பால் இரு நேரமும் வழங்குகின்றேன்.

பாடசாலை ஆரம்பித்தால் உடனடியாக கன்றை வைத்துக்கொண்டு தாய்ப் பசுவை விற்றுவிட்டு பாடசாலை செல்வேன். அதுவரை தினமும் பால் வருமானத்தின்போது நாள் ஒன்றிற்கு ஆயிரம் ரூபா வருமானம் வரும். தீவணச் செலவாக 500 ரூபா ஏற்படும் இருப்பினும் இன்னும் 4 மாதங்களில் கன்று தேறிய இலாபமாக கிட்டும் என்கின்றார்.

இதேநேரம் ஓர் ஆசிரியை வீட்டில் 3 சிறுவர்கள் மூத்தவர் தரம் 8 அடுத்தவர் தரம் 5, கடைக்குட்டி தரம் 2 இல் கல்வி கற்கின்றனர். இந்த கொரோனா காலத்தில் பொழுது போக்கிற்காக எங்குமே செல்ல முடியவில்லை. இதனால் சிறுவர்கள் கூடி விளையாடவும் முடியவில்லை என்பதனால் செல்லப்பிராணி போன்று பொழுது போக்கிற்காக ஓர் ஆடு வளர்ப்பில் ஈடுபடுவதனால் பாடசாலை ஆரம்பிக்கும்போது அதனை பெற்றோர் பராமரிக்கலாம் அல்லது விற்பனை செய்ய முடியும் என்கின்றனர்.

இவ்வாறு நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாவிடையும் எதிர் கொண்டு பழமைக்கும் சுயதொழிலிற்கும் பலரை திருப்பியுள்ளதோடு நாட்டின் பொருளாதாரத்தை தேடக்கூடியதான பயனுள்ள விடயதாகவும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பலர் திரிப்பியுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய அதிர்ச்சிகரமான செய்தியாகவுள்ளது.

இதேநேரம் 25 வயது 30 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்களிற்கு இதனை எடுத்தியம்பினால் அவர்களும் இதன் வருமானத்தினை கருத்தில்கொண்டு முன்வந்தாளும் கலியாணச் சந்தை வாய்ப்பு இழக்கப்படுமா என்ற கேள்வியினை எழுப்புகின்றனர். 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More