Home இலங்கை முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளின் மீளுருவாக்கம் – A.B.M. இதிரிஸ்.

முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளின் மீளுருவாக்கம் – A.B.M. இதிரிஸ்.

by admin

இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய நாடக அரங்குகளை அல்லது முஸ்லிம் பாரம்பரிய கூத்துக்களை மீளுருவாக்கம் செய்வதற்கான குறிப்பான செயல்வாதங்கள் எதுவும் இலங்கை அரங்க வரலாற்றில் நிகழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. டாக்டர் A.N பெருமாள் தொடக்கம் S.H.M ஜெமீல் வரை நாடகப் பிரதிகளை அல்லது கூத்துப்பனுவல்களை மையப்படுத்திய பனுவல்மைய (Textual Strategy) ஆய்வு, கதையாடல்களாக அமைந்துள்ளதே தவிர அதை ஒரு சமூக நிலைப்பட்ட நிகழ்த்துகையாக மாற்றுவதற்குரிய செயல்வாதங்கள் முன்னெடுக்கப்படவில்லை.

ஈழத்து தமிழர்களின் பாரம்பரிய கூத்தரங்குகளை பல்கலைக்கழக அறிவுப்பரப்பில் உள்ளீர்ப்பதற்காக உழைத்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை போன்றோ, ஈழத்து கூத்துக்களை செம்மையாக்க வேண்டும் நவீனமயப்படுத்த வேண்டும் என்ற கருத்தியலுடன் இயங்கிய பேராசிரியர் சு.வித்தியானந்தனைப் போன்றோ, அவரது மாணவராகிய பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க செயற்பாடுகள் போன்றோ அதன் நான்கு தசாப்தங்களாக படச்சட்ட மேடைக்குள் அடைக்கப்பட்ட கூத்தை விடுவித்து காலாகாலமாக கூத்துக்களை ஆடிவரும் கூத்தர் சமூகங்களின் பங்கேற்புடன் மீளுருவாக்க செயல்வாதங்களில் இரண்டு தசாப்தங்களாக ஈடுபட்டு உழைத்துவரும் கலாநிதி சி.ஜெயசங்கரைப் போலவோ முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளுக்கான மீளுருவாக்கப்பணி நடைபெறவில்லையென்பது இங்கு கவனிக்கத்தக்கது.

A.M.A அஸீஸை தலைவராகக் கொண்ட கொழும்பு ஸாஹிராவில் நவீன நாடக ஆற்றுகைகள் இடம்பெற்றுள்ளதைப் போல அதனை முஸ்லிம் சமய, பண்பாட்டு, கலை, கலாசார நிகழ்த்துகைகளுக்கான மையமாக ஆக்குவதற்கு அவர் எடுத்த முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. அவர் மேற்கொண்ட ஆபிரிக்க ஐரோப்பிய மற்றும் தென்னாசிய சுற்றுப்பயணங்களைப் பற்றி எழுதிய, அவ்வப்பிராந்திய முஸ்லிம்களோடு தொடர்புபட்ட பாரம்பரிய அரங்குகளைப்பற்றிய அவரது கனவுகளும் நிறைவேறாமலே போய்விட்டன.


பதியுதீன் மஹ்மூத் யுகத்தில் ( 1960களில் கல்வியமைச்சராக இருந்தவர்- பதியுதீன் மஹ்மூத்) முஸ்லிம் பாடசாலைகளின் கலைத்திட்டத்தில் அரங்கக் கலைகளில் ஒன்றான நடனம் இணைக்கப்பட்டதற்கே தூய்மைவாதிகள் மற்றும் கடும்போக்காளர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அவரது முயற்சியும் நிறைவேறாமல் போய்விட்டது.


அடுத்து தனிநபர் நிலையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் S.M.கமால்தீன் லண்டன் நூலகத்தில் ஒரு முஸ்லிம் நாடகம் என்ற தலைப்பில் சீதாக்காதி நொண்டி நாடகத்தைப்பற்றி ஒரு திறனாய்வை செய்திருந்தார். அவ்வாறே பேராசிரியர் M.S.M அனஸ், சேகு இஸ்மாயில் புலவரின் முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளில் ஒன்றான கோவலன் கூத்தின் சில பாடல்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இக்கூத்துப் பனுவல் இன்று முழுமையாக கிடைக்காவிட்டாலும் புத்தளப்பகுதி முஸ்லிம் கோலாட்ட மரபுக்குள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் நுண்கலைகள் மற்றும் நாட்டாரியல் ஆய்வாளருமான M.S.M அனஸ் அவர்கள் மீளுருவாக்குவதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். சேகு இஸ்மாயில் அண்ணாவியாரின் கலைப்பணிகளை முழுமையாக ஆவணவாக்கம் செய்துள்ளதுடன் அவருக்கு கிடைத்த கோவலன் கூத்துப்பாடல்கள் சிலவற்றையும் இணைத்துள்ளார்.


2000 ஆம் ஆண்டளவில் கல்குடாத் தொகுதியில் மீராவோடை பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்தபா அண்ணாவியாரின் உதவியுடன் அலிபாதுஷா நாடகத்தின் பாடல்களை பாடவும் சில இடங்களில் ஆட்டக்கோலங்களை அறியவும் அவர் நினைவிலிருந்த பாடல்களை எழுத்துருப்படுத்தவும் என்னால் முடியுமாகவிருந்தது. அவற்றை வைத்து அவர்மூலம் அலிபாதுஷா நாடகத்தை வட்டக்களரியில் ஆடுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முன்பாக, நிகழ்ந்த அவரது இறப்பு மிகவும் துயரம் தருவதாகும்.


முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளின் மீளுருவாக்கத்தை கருத்தியலாகவும் செயல்வாதமாகவும் கொண்டு செல்வதே முஸ்லிம் அரங்கச் செயற்பாட்டாளர்கள் முன்னுள்ள பாரிய சவாலாகும். இந்த மீளுருவாக்கப்பணியில் பின்வரும் விடயங்களை கவனப்படுத்த வேண்டியுள்ளது.


குறிப்பாக முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளின் இன்றைய மதிப்பு என்ன என்பதைப்பற்றிய தெளிவு அவசியப்படுகின்றது. முஸ்லிம் பண்பாட்டு வாழ்வில் குறிப்பாக முஸ்லிம் பாரம்பரிய அரங்குகள் குறித்த பிரக்ஞையாளர்களின் பார்வையானது பெரும்பாலும் அவை வரலாற்று தகவல்களே ஒழிய அவற்றை இன்றைய நிலையில் மீட்புச் செய்வது சாத்தியமில்லை என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.


ஆனால் அதேவேளை இன்றைய முஸ்லிம் பண்பாட்டு வாழ்வியல் பல்பண்பாடு கொண்ட இலங்கைச் சூழலில் மிகப்பெரும் நெருக்கடிகளை சந்தித்தும் வருகின்றது. பல்மொழி, பல்பண்பாட்டு கலாசார அரசியலைக் கொண்ட ஒரு நாட்டில் முஸ்லிம் பண்பாடு தனித்துவிடப்பட்டிருக்கும் அதேவேளை பல்பண்பாடுகளுடன் இணைந்து வாழ வேண்டியுள்ளது. சமய சடங்குகளில், வழிபாடுகளில் மாத்திரம் இறுகிப்போவதால் முஸ்லிம் சமூகம் எதிர்நிலையில் கட்டமைக்கப்படுவதற்கான சாத்தியமே உள்ளது. ஆனால் மற்றவைகளுடன் ஊடாடுவதற்கான வெளி, கலை உற்பத்தி மூலமே சாத்தியமாகும். கலை உற்பத்தியின்றி கலை பரிவர்த்தனையில்லை, சமூகமாற்றமில்லை, நல்லிணக்கமில்லை என்பதை முஸ்லிம் புத்தியிர்ப்புவாதிகள் மனங்கொள்ள வேண்டும்.


இன்றைய உலகமயமாக்கல் சூழலில் பல்வகைமையும் பல்வித்தியாசங்களும் அழிக்கப்படுவதோடு சுயசார்பான பொருளியல் பண்பாட்டு அம்சங்களை அழித்தும், சுயாதீனமான வாழ்வியல் வெளிகளை இல்லாமலாக்கியும், ஒற்றை நுகர்வு கலாசாரத்தை அறிமுகப்படுத்தி வருவதும் யாவரும் அறிந்ததே. அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற வல்லாதிக்க சக்திகளின் ஆடுகளமாக மாறிவரும் இலங்கை இந்த நவகாலனிய ஆக்கிரமிப்பிலிருந்து எமது சுயாதீன வாழ்வியலை தக்க வைப்பதற்கான உபாயங்களில் ஒன்றாக பாரம்பரிய அரங்குகளை மீளுருவாக்கம் செய்வது மிகப்பொருத்தமான செயற்பாடாக அமையமுடியும் முஸ்லிம் பாரம்பரிய கூத்து ஒத்திகைகள் முஸ்லிம் சமூகங்களை ஒருங்கிணைக்கும் இடமாக, கூத்துக்கள் பயிலும் இடமாக, உரையாடல் களமாக, ஓய்வெடுக்கும் கூடமாக, நினைவுகூறும் இடமாக, விளையாட்டு இடமாக பல்பரிணாமம் கொண்டுள்ளன. கூத்து ஒரு காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் அரங்கமாக பரிணாமம் பெற்றதற்கு இந்த ஒத்திகை வேலையே காரணமாக அமைந்திருந்தமை கவனத்திற்குரியது.


வருடாந்தம் நடைபெறும் கந்தூரிகள் (தர்க்காக்களில் வழங்கப்படும் அன்னதானம்) பெருநாட்கள், மீலாத் (நபிகளின் பிறந்த தினம்) தினத்தையோட்டி நிகழும் கொண்டாட்டங்களின் போது குறைந்தது இரண்டு மூன்று மாதங்கள் ஒத்திகை தொடங்கி அரங்கேற்றம் வரையிலான கூத்தரங்கச் செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தில் உள்ள பல்வகைப்பட்ட மனிதர்களையும் பல்வேறு நிலைகளில் ஒன்றுசேரவும் செயற்படவும் வைக்கும் சமுதாயச் செயற்பாடாக இடம்பெற்று வந்துள்ளன.


குறித்த சமூகத்தின் சகல மனிதர்களும் தத்தமது ஆற்றல்களை திறன்களை ஆளுமைகளை பகிரும் அறிவு வெளியாக இது இருந்துள்ளது. இன்று எழுந்துள்ள பண்பாட்டு தேசிய வாதங்களுக்கு மத்தியிலும் ஏகாதிபத்திய தொடர்பூடான ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் நவீன கல்வி முறையின் அதிகாரங்களால் ஏற்பட்டுள்ள மனித தனிமைப்படுத்தல்களை இல்லாமலாக்கி ஒரு சமூகத்தின் சகல மனிதர்களும் கூட்டாகவும் சமூகங்களாகவும் இயக்குவதற்கான கலைச் செயற்பாடு என்ற வகையில் முஸ்லிம் பாரம்பரிய கூத்தரங்கங்கள் முக்கியத்துவம் உடையனவாகும்.
எம்மை மாற்றாமைகள் புரிந்துகொள்வதற்குரிய, சமூக வரலாற்று புனைகதைகளும் ஓவியமும் இசை போன்ற நுண்ணிய கலைகள் சங்கமிக்கும் முஸ்லிம் அரங்கக்கலை மிகவும் செறிவான காரணமாகும்.


இன்றைய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டு தேக்கநிலையில் இருந்து விடுபடவும், பண்பாட்டு வெற்றிடத்தை நிரப்பவும், பல்பண்பாடுகளுடன் ஊடாடி வாழவும் நவகாலனிய ஆக்கிரமிப்புக்களை எதிர் கொள்ளக் கூடிய வலிமையான ஊடகமாக முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளை முன்மொழியும் அதேவேளை இவ்வரங்குகளை எந்தவொரு மீளுருவாக்கமும் இல்லாது அப்படியே முன்னெடுத்தல் ஆக்கப்பூர்வமாக அமைய மாட்டாது. எனவே சமகால சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் மீளுருவாக்கல் பணி முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.


முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளின் கதைகள், இஸ்லாமிய வரலாறு பாதுஷாக்கள் சுல்த்தான்கள் போன்ற அரச பரம்பரைக் கதைகளாகவும், அரேபிய பண்பாட்டுச் சார்பியம் கொண்டதாகவும், தந்தைவழிச் சமூகக் கருத்தியல்களால் கட்டமைக்கப்பட்டவையாகவும் உள்ளன. முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் பல்வேறு சமூகப் பிரிவினர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பால்நிலை பன்மைத்துவமுடையோர் பேன்றோரை உள்ளடக்கியதாக அவ்வரங்குகள் உள்ளனவா என்பதை ஆராய்தல் அவசியமாகும்.


உதாரணமாக அலிபாதுஷா நாடகத்தில் சபுர்யத்தை சல்மான் அரசன் அபகரித்துச் சென்றபோது அலிபாதுஷா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. இது நாடகத்தின் பாத்திரவார்ப்பில் உள்ள குறைபாடாகும். ஆண் மைய அதிகாரத்தை மேலும் நிறுவும் வகையிலான தன்மையிலிருந்து முஸ்லிம் பாரம்பரிய அரங்கை மீளுருவாக்கம் செய்ய வேண்டும்.


தையார் சுல்தான் நாடகத்தில் வரும் மோதீன் பாத்திரச் சித்தரிப்பை பார்க்கும் போது இப்பாத்திரம் கள்வனாகவும் காட்டப்படுவதைக் காணலாம். முஸ்லீம்களின் சமூகப்படிநிலையில் மோதீன் பாத்திரம் மேஹ் இமாமை (தொழுகை நடத்துபவர்) விட சற்று சமத்துவம் குறைந்த பாத்திரமாகும் என்பது இங்கு நோக்கத்தக்கது. இத்தகைய சித்தரிப்பு முறை இன்றைய நிலையில் பொருத்தமற்றது.
இவ்வாறே முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளில் வரும் பெண் பாத்திரங்களின் உருவாக்கமும் ஆணாதிக்க நோக்கு நிலையிலேயே அமைந்துள்ளதால் அத்தகைய பிற்போக்குத் தன்மையுடன் முன்னெடுப்பது ஆரோக்கியமாகாது. எனவே முஸ்லிம் பாரம்பரிய அரங்க கதைகளை ஒழுங்கவிழ்த்து அதன் அதிகாரப் படிநிலைகளை கண்டறிந்து இன்றைய சூழலுக்கேற்ப பெண்களை ஆளுமையுள்ளவர்களாக மாற்றும் வகையில் மீளுருவாக்கம் செய்வது அவசியமாகும்.


இவ்வாறு முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளை, சமகால முக்கியத்துவத்தை கருத்திலெடுத்துக் கொண்டு மீளுருவாக்கத்தின் அவசியத்தையும் உணர்ந்த நிலையில் பாரம்பரிய அரங்க செயற்பாட்டாளர்களுடனும் இணைந்து நடைமுறைப்படுத்துவது அல்லது முன்னெடுப்பது அவசியமாகும். அரங்கில் நிலைத்து நிற்கக் கூடிய மாற்றம் என்பது அதனை ஆடும் சமூகத்தில் ஏற்படும் மாற்றத்தினாலேயே சாத்தியமாகும்.


பாரம்பரிய அரங்குகளில் உள்ள பலவீனமான, காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை நீக்கி மீளுருவாக்கம் செய்வது என்பது நவீனத்துவ ஆய்வு கூடமாகவோ, சத்திரசிகிச்சை நிலையமாகவோ, ஒரிருவர் பங்குகொள்ளும் செயற்பாடாகவோ அல்லாமல் முஸ்லிம் பாரம்பரியக் கூத்தர்களுடன் தொடர்புடைய (உ+ம் :- பொல்லடி அண்ணாவியர், பக்கீர் சமூகம்) சமூகங்களின் பங்கேற்புடன் அமைதல் வேண்டும் என்பதையே பரிந்துரைக்கின்றது. இவ்வாறு மீளுருவாக்கம் செய்யப்படும் போதுதான் அது நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதாகவும் பின்பு வளர்ந்து செல்வதாகவும் அமைய முடியும். இந்த இடத்திலேயே காலனித்துவ சிந்தனைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் நவீனத்துவ ஆய்வு முறைகளுக்கு மாற்றாக தமிழ் கூத்தரங்க வட்டாரத்தில் சகத்திரப் புலர்வில் கலாநிதி சி.ஜெயசங்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பங்கேற்பு ஆய்வுச் செயற்பாடு அவசியப்படுகிறது.


முஸ்லிம்களின் பாரம்பரிய அரங்குகளுடன் சமூகங்களை அணுகி வாய்மொழித் தகவல்களை பெற்ற போது தான் எமது பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தும் நவீன ஆய்வு முறைமைகள் பயன்பாட்டிற்கு உகந்தவை அல்ல என்பது எமக்குத் தெரிய வருகின்றது. ஆய்வாளரையே மையப்படுத்திய எதனையும் காரண காரிய வாதமாக ஆக்கிய, முற்றிலும் புறவயமான நோக்கை வலியுறுத்திய மக்களை தகவல் வழங்கிகளாக மட்டுப்படுத்திய மேலும் அவர்களை மூடநம்பிக்கையாளர்களாய், பாமரர்களாக, அறிவூட்டப்பட வேண்டியவர்களாக கருதுகின்ற காலனித்துவ நலன்சார் ஆய்வு முறையை வைத்துக்கொண்டு முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளை மீளுருவாக்கம் செய்ய முடியாது. மக்கள் மையச் செயற்பாட்டின் வழி புரியவும்மாட்டாது. செயல்வாதத்தை மையப்படுத்திய பங்கேற்பு ஆய்வின் மூலமாகவே முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளை மீளுருவாக்க முடியும்.


முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளை மீளுருவாக்கம் செய்வதால், அது முஸ்லிம் அடையாளம் என்பதையும் தாண்டி ஒரு வாழ்வியலாகப் பரிணமிக்கும் வாய்ப்புள்ளது. நாம் முஸ்லிம் பாரம்பரிய அரங்க சமூகமாக ஒன்று சேர முடிகின்றது. சுயமுள்ள மனிதர்களாக வாழ முடிகின்றது. எமது குழந்தைகள் வகுப்பறையில் பெறமுடியாத அனுபவம் சார்ந்த, உற்று நோக்கி அவதானிக்கும் கல்வியை அரங்கு வாயிலாகப் பெற முடிகின்றது. வளர்ந்தவர்களும் முதியவர்களும் கல்வி பயிலும் திறந்தவெளிக் கல்விக் கூடமாக பாரம்பரிய அரங்குகள் உள்ளன. தமிழ் மக்கள் தமது பாரம்பரியக் கூத்தரங்குகளால் பல நூற்றாண்டுகளாக இந்த அறிவுத் தொடர்ச்சியைப் பெற்றுவருகின்றனர்.
உழைத்துக் களைத்த மனிதர்கள் இனிமையான கலாரசனையுடன் பொழுதை கழிக்கும் மகிழ் மனைகளாக அரங்குகள் திகழ்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளும், பார்சி நாடகங்களும் ஆடப்பட்டு வந்த இடங்களும், கொட்டகைகளில் இருபதாம் நூற்றாண்டில் சினிமா அரங்குகளுக்கான இடமாக மாறியது என்பதை நாம் மறத்தலாகாது. அதாவது மனிதர்கள் சமூகமாக ஒன்று சேர்ந்து சுயாதீனமாக வாழ்வதற்கான செயற்பாடாக எமது அரங்குகள் உள்ளன.


எமது பாரம்பரிய கூத்தரங்குகளை மீளுருவாக்கம் செய்வதால் பல தசாப்தங்களாக நாம் இழந்திருந்த ஆற்றல்கள், திறன்கள், ஆளுமைகளை வெளிப்படுத்தவும் புதிய இளந்தலைமுறையுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புகளைப் பெறலாம்.
முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளை மீளுருவாக்கம் செய்வது என்பது மூன்று பரப்புகளில் நிகழ்வது அவசியமாகும்.

  1. அரங்கின் உள்ளடக்கம் சார்ந்த மீளுருவாக்கம்
  2. அரங்கின் வடிவம் சார்ந்த மீளுருவாக்கம்.
  3. முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளை ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் மீளுருவாக்கம்.

மீளுருவாக்கம் எனும் சொல்லாடல் மீள்+உரு+ஆக்கம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. “முஸ்லிம் பாரம்பரிய கூத்தரங்குகளை மீள உருவாக்குவதே” இதன் மூலம் குறிக்கப்படுகின்றது. முஸ்லிம் பாரம்பரிய கூத்தரங்குகள் ஏககாலத்தில் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் முதல் உருவாக்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றன. ஏனெனில் தமிழ் பாரம்பரிய கூத்தரங்குகளின் உள்ளடக்கத்தில் பெரிதும் உருவாகக் பணி நடந்தேறி வருகின்றது. தமிழ் பாரம்பரிய கூத்தரங்குகள் பல்தன்மையான வடிவங்களை கொண்டுள்ள அதேவேளை அவை பல நூற்றாண்டுகளாக, தொடர்ச்சியாக ஆடப்பட்டு வருகின்றமை முக்கியமானது. ஆனால் முஸ்லிம் பாரம்பரிய கூத்து அரங்குகள் கதைப்பாடலாகவும் பக்கீர் பைத்துகளாகவும், பொல்லடிப் பாடல்களாகவும், கூத்துப்பனுவல்களாகவும் காணக்கிடைக்கின்றன. அலிபாது~h நாடகம், அப்பாசு நாடகம், நொண்டி நாடகம் மற்றும் மகிடிக்கூத்து சிலவிடங்களில் ஆடப்பட்டு வந்ததற்கான சான்றுகளே கிடைத்துள்ளன. அவற்றின் நிகழ்த்துகை பிரசன்னம் இன்மையால் அவற்றின் வடிவங்களை முழு கண்டுபிடிப்புச் செய்வது முதலாவது சவாலாகும். அவை தமிழ் பாரம்பரிய கூத்தரங்கு போல வட்டக்களரியா? பார்சி வழிவந்த விலாசத்தை போன்றதா? பக்கீர் சமூகத்தின் கதைப்பாடல் வடிவில் வரும் பாவாக் கூத்தா அல்லது மௌலித் களரியில் நிகழ்த்தப்படும் கஸிதாவும் (பாடல்) ஹிகாயத் (கதைகூறல்) கலந்த கதாப் பிரசங்கம் போன்ற வடிவமா என்பதை ஆழமாக ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில் தமிழ்ப் பாரம்பரியத்தில் உள்ள நொண்டி பல பாத்திரங்களைக் கொண்டு ஆடப்பட, முஸ்லிம் பாரம்பரிய நொண்டி ஒரு நொண்டிக் கூத்து கலைஞரால் ஆடப்படுகிறது. அவ்வாறே ஒரு மகிடிக்கூத்து தமிழ் பாரம்பரிய அரங்க வடிவமான நீள் சதுரத்தை ஒத்திருக்க மற்றொரு முஸ்லிம் மகிடிக்கூத்து, கதைப்பாடல் வடிவிலுள்ளது.


பொதுவாக உருவமும் உள்ளடக்கமும் கலைகளின் உயிர்நாடியாக விளங்குகின்றன. இயற்கையும் அணு முதல் அண்டம் வரை இந்த உருவத்தையும் உள்ளடக்கத்தையும் எடுத்துக்கொண்டு இடையறாது இயங்கிய வண்ணமே உள்ளது. திண்மம், திரவம், வாயு என சடப்பொருட்களும் மாறியபடியே உள்ளன. உருவம் என்பது திட்டவட்டமான ஒப்பிட்டு அளவான சமநிலையான அமைப்பு முறையாகும். அது தற்காலிகமாக ஒரு தளத்தில் நிலைபேறுடையதாக காணப்படுகின்றது. ஆனால் உள்ளடக்கம் இடையறாது மாறுகின்றது. அது உருவத்துடன் மோதி உருவத்தை தகர்க்கின்றது. அப்போது புதுப்புது உருவங்கள் புதுப்புது வடிவங்கள் உருவாகின்றன. அவற்றுக்குள் மாற்றமடைந்த உள்ளடக்கம் சிறிது காலத்துக்கு மீண்டும் ஒருமுறை நிலைபேறு அடைகின்றது. ஆக உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்குமான உறவு என்பது ஓர் இயங்கியல் உறவுதான். இந்த உருவஉள்ளடக்கம் பற்றி கலையிலும் இலக்கியத்திலும் மிக ஆழமான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றையும் முஸ்லிம் பாரம்பரிய அரங்க செயற்பாட்டாளர்கள் கணக்கிலெடுத்துக் கொண்டு இயங்க வேண்டியுள்ளது. ஏனெனில் கலைவடிவங்கள் தனிமனித கண்ணோட்டம் வழியாக மட்டும் தோன்றியவை அல்ல. மாறாக சமூக ரீதியாக தகவமைக்கப்பட்ட உலக நோக்கின் வெளிப்பாடு என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.


பழைய வடிவங்களோ அல்லது மரபுவழி வரும் உருவங்களோ தன்னில்தானே நிலைத்திருக்கும் உரிமத்தை யாரும் பறிக்க முடியாது. ஏற்கனவே இருந்து வரும் ஒரு பாணியை சற்றுப்புதிதாக உருமாற்றம் செய்ய வேண்டும் எனும் விருப்பம் ஒரு கலைச் செயற்பாட்டாளருக்கோ ஒரு குழுமத்திற்கோ வரலாம். ஆனால் ஒரு காலகட்டத்தின் பாணியை நாம் தனியாகப் பாரக்காமல், அரங்க வரலாற்றின் முழுமையின் ஓர் அங்கமாக, வரலாற்றின் வளர்ச்சிப் போக்கின் ஒரு தருணமாக அதைப் பாரக்க வேண்டியது அவசியமாகும்.


அவ்வாறே முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளின் உள்ளடக்க கருப்பொருளாக பாதுஷாக்கள், சுல்தான்கள் போன்ற அரசவம்சக் கதைகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆதிக்க கருத்தியல்கள், சமய வரலாற்றுக் குறியீடுகள் அடையாளங்கள் போன்றவற்றையும் கட்டவிழ்த்து ஆக்க பூர்வமான வகையில் அதிகார நீக்கம் செய்து பல்வகைமைகளையும் பேசாப் பொருள்களையும் இணைத்து மீளுருவாக்கம் செய்வது அவசியமாகும். உதாரணமாக கலீபா ஆட்சி முறை என்பது ஒருகால கட்டத்தில் நிலவிய, கோத்திர, குலங்களுக்கேற்ற ஒரு பழங்குடி ஆட்சிமுறையாகும். இன்றைய ஜனநாயக மக்களாட்சி காலத்தில் எப்பெறுமானமும் கிடையாது. எனவே பழைய பிராந்திய நிலைப்பட்ட, அச்சொல்லாடல்களுக்கு உலகளாவிய பெருமானத்தை கொடுத்தலாகாது என்றவகையில் இஸ்லாமோபோபியாவால் பீடிக்கப்பட்டுள்ள இத்தருணங்களில் மிகுந்த பிரக்ஞையுடன் உள்ளடக்கத்தை மீளுருவாக்கம் செய்வது அவசியமாகும்.


முஸ்லிம் பாரம்பரிய அரங்க எழுத்துருவை – பனுவலை மையமாகக் கொண்டு இம் மீளுருவாக்கச் செயற்பாடுகளை பின்வரும் வழிமுறைகளுக்கூூடாக முன்னெடுக்கலாம்.

  1. முஸ்லிம் பாரம்பரிய அரங்குகள் குறித்த அறிவாளர்களுடன் அண்ணாவிமார்கள், அரங்க ஆர்வலர்களை இணைத்து கலந்துரையாடல்கள், கருத்தரங்கங்கள், களப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
  2. தமிழ், சிங்கள, பாரம்பரிய கூத்துக்கலைஞர்கள், நீண்டகாலமாக ஆடிவரும் அண்ணாவிமார்கள், தமிழ், சிங்கள அரங்கச் செயற்பாட்டாளர்கள் கலைஞர்களின் ஆக்க இலக்கிய படைப்பாளர்களுடனான சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தலாம்.
  3. பால்நிலை கற்கை துறையிலுள்ள புலமையாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புக்கள் கலந்துரையாடல்களைச் செய்யலாம்.
  4. தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தள ஊடகங்களை புதிய கோணங்களில் தயாரிக்கப்பட்ட நாடகங்கள், சினிமாக்கள் (குலேபகாவலி நாடகம்) பார்வைக்குட்படுத்தி உரையாடல்களை மேற்கொள்ளலாம்.
    முஸ்லிம் பாரம்பரிய அரங்கப் பிரதிகளிலும் பால்நிலைகளை மீள் உருவாக்கம் செய்யும் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்வது அவசியமாகும். முஸ்லிம் பாரம்பரிய அரங்க மரபுமுறை தவறாது பாடல்களை அமைப்பது முக்கியமாகும். அவ்வாறே பாத்திரங்களின் குணவியல்புகளுக்கேற்ப உள்ளக்குமுறல்கள், ஆழ்மன எண்ணக்கருக்களை வெளிப்படுத்தும் வகையில் பாடல்களை அமைப்பது பாடல்களின் கருத்துக்கள் எல்லோருக்கும் இலகுவில் விளங்கக் கூடியதாகவும் அமைப்பது அவசியமாகும். மூத்த அண்ணாவிமாரின் துணையுடன் பாடல்கள் எழுதுவதற்கு முயற்சி மேற்கொள்வதே சிறப்பானது. பால்நிலைகளை அமைக்கும் முன் குறித்த முஸ்லிம் பாரம்பரிய அரங்கின் காட்சி அமைப்புக்களை நன்கு புரிந்து கொள்வதும் முக்கியமாகும்.
    தேசியப் பிரச்சினைகளையும் எமக்கே உரிய பிரச்சினைகளையும் வெளிப்படுத்தக் கூடிய சுதேசிய அரங்குகள் மற்றும் ஆற்றுகை மூலக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட அரங்க வெளிப்பாட்டு முறைகளும் தேடல்களும் முன்னெடுப்புகளும் இன்று எமது பண்பாட்டு வெளியில் அவசியமாகியுள்ளன.
  5. குறிப்பாக முஸ்லிம் பாரம்பரிய அரங்க வகையில் நோய்த்தீர்க்கும், அரங்குகளும் இருந்து மறைந்துள்ளன, புர்தா( ஏரதாள 600 ஆண்டுகளுக்கு முன்னர் மொரொக்கோவிலும், எகிப்திலும் வாழ்ந்து மறைந்த பூசரி எனும் அறிஞரால் உருவாக்கப்பட்ட பெருந்தொற்று நீக்கி அருள் வேண்டி பாடும் புர்தா( போர்வை) என்னும் அரங்கு தமிழகத்திலும் இலங்கையிலும் பன்னெடுங்காலமாக நிகழ்த்தப்பட்டு வந்துள்ளது. இது அந்நாட்களில் நவீன நாடக வடிவங்களை தாங்கி வளர்ந்துள்ளதை இன்றைய இலத்திரனியல் கானொளிகள் வாயிலாகவும் அவதானிக்க முடிகின்றது.) ஓதுதல்,பாடுதல், ஹளரா (களரி) – ராத்திபு (இஸ்லாமிய மரபில் இருக்கின்ற ஒருவகை அரங்கு )வைத்தல் பாடல் மரபு, ஆடல் மரபு இணைந்த ஓர் அரங்காகும். இந்தப் பெருந் தொற்றுக்காலத்தில் புர்தா அரங்கை நவீன நாடக வடிவங்களை உள்வாங்கியும் நிகழ்த்திப்பார்க்கலாம்.
  6. இஸ்லாமிய வரலாறு சமூகவியல் தொடர்பான ஆய்வுகள் மரபு இலக்கியங்கள் (சீறாப்புராணம், இராஜநாயகம் அம்மானை, மஸ்அலா இலக்கியங்கள் – வினாவிடை இலக்கியங்கள்) என்பவற்றை வாசிப்புக்குட்படுத்தி உரையாடல்களை மேற்கொள்ளலாம்.
    இவ்வாறு பல்வேறு பணிகள் மூலமாக முஸ்லிம் பாரம்பரிய அரங்க பிரதிகளை தற்கால சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் கட்டவிழ்த்து உருவாக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது அவசியமாகும்.

• முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளில் வடிவம், ஆற்றுகை சார்ந்த மீளுருவாக்கம்
முஸ்லிம் பாரம்பரிய அரங்க ஆடல், பாடல், உடை, ஒப்பனை, நடிப்பு சார்ந்த மீளுருவாக்கமும் இன்று தேவைப்படுகிறது. அப்பாஸ், அலிபாதுஷா, தையார்சுல்தான் ஆபத்துக்களை பாரத்தவர்கள் குறைந்துவிட்ட சூழலில் முழக்கவும் முஸ்லிம் அரங்க செயற்பாட்டாளர்களிடம் மட்டும் தங்கி நிற்க முடியாது. தமிழ் சிங்கள பாரம்பரிய கூத்து கலைஞர்களின் உதவி தேவைப்படுவதைப் போல தமிழக முஸ்லிம் அரங்க செயற்பாட்டாளர்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

  1. முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளுக்கான பல பயிற்சிகளை நடத்துவது அவசியமாகும். மூத்த கூத்துக்கலைஞர்களையும் அண்ணாவிமாரையும் வரவழைத்து புதிய இளம் கூத்தர்களுக்கு பாடல், நடனம், நடிப்பு போன்றவற்றை பயிற்றுவித்தல் வேண்டும்.
  2. உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழக அரங்கப் புலமையாளர்களை வரவழைத்து முஸ்லிம் கிராமங்களின் பாரம்பரிய கூத்துப் பயிற்சிகளையும் அளிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஆவணஞ் செய்வது அவசியமாகும்.
  3. முஸ்லிம் பாரம்பரிய கூத்தரங்குகளை பயில விரும்பும் ஆர்வலர்கள் இளம் தலைமுறையினர் தமிழ், சிங்கள கூத்துக்கள் பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்க வைக்கலாம்.
  4. இலங்கையில் பத்தாம் நூற்றாண்டில் அறிமுகமாகி பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய பார்சி அரங்குகள் குறித்த பிரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளலாம்.
  5. மகாபாரதம், இராமாயணம் போன்ற புராண இதிகாச நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றை பார்ப்பதிலும் கலந்துரையாடுவதிலும் முஸ்லிம் பாரம்பரிய கூத்தரங்குகள் பற்றிய புரிதலை அதிகரிக்கலாம்.
  6. வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பிராந்தியங்களில் வருடா வருடம் ஆடப்பட்டு வரும் பாரம்பரிய கூத்தரங்குகளை பார்ப்பதும் அனுபவங்களை பெறுவதும் அவசியமாகும்.

இவை போன்ற ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வதன் மூலம் ஆடல், பாடல், ஒப்பனை, நடிப்பு போன்ற வடிவம் சார்ந்த அம்சங்களில் முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளை உருவாக்கம் செய்ய முடியும். வெகுசன தொடர்பு சாதனங்களின் ஆதிக்கத்திலிருந்து இன்றைய சமூக வலைப்பின்னலின் கெடுபிடியிலிருந்து விடுவித்து சிந்தித்து வாழவும் வாழ்ந்துகொண்டே சிந்திக்கவும் முடியுமான மக்கள் சமூகமாக மாற்றியமைக்க முடியும்.


முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளை உருவாக்கம் செய்வதில் நிதித் தேவைகளின் பங்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. கடந்தகால நிதித் திட்டமிடல் குறைபாடுகளை இனங்கண்டு அதற்குரிய ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டடைவதும் முக்கியமாகும்.
அரங்க ஆர்வலர்கள் அபிமானிகள் போன்றவர்களோடு சிவில் சமூக பண்பாட்டுக் குழுக்கள் ஆகியோரிடமிருந்து நிதி ஆதாரங்களை பெற்றுக் கொள்ளலாம்.


முஸ்லிம் பாரம்பரிய அரங்குகள் செல்வாக்கு பெற்றிருந்த கடந்த காலங்களில் தனவந்தர்கள், போடியார்கள் தர்ஹாக்களின் பரிபாலகர்கள் செலவுகளை பொறுப்பேற்றதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் இன்று இப்பணிக்கு முன்நிற்கும் ஓரிருவரே முழுப்பொருளாதார பழுவையும் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இது காலப்போக்கில் சோர்வு நிலைக்கு இட்டுச் செல்ல காரணமாக அமைந்துவிடுகின்றது.


எனவே சமுதாய அரங்காகிய முஸ்லிம் பாரம்பரிய அரங்குகளுக்கான நிதிமூலங்களை திட்டமிடும் போது குறித்த சிலரை மட்டும் பாதிக்காத அதேவேளை எவரிடத்தும் தங்கி நிற்காத வகையில் இயன்றவரை சிறிய அளவிலான சகலருடைய பங்களிப்பிலிருந்தும் பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்வது அவசியமாகும். அதாவது முஸ்லிம் பாரம்பரிய அரங்கச்செயற்பாடுகளில் ஈடுபடும் கலைஞர்கள், அரங்க ஆர்வலர்கள் மற்றும் முஸ்லிம் பாரம்பரிய அரங்கு முன்னெடுக்கப்படும் சமூகத்தின் உறுப்பினர்கள் என்போர் கூட்டாக வழங்கும் சிறு சிறு நிதிச்சேகரிப்பில் அரங்கச் செயற்பாடுகளை மேற்கொள்வதால் பொறுப்புக் கூறல் இருப்பதோடு சுயாதீனமாக முன்னெடுப்பதற்கும் முடியுமாக இருக்கும்.
A.B.M. இதிரிஸ்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More