சில நேரங்களில் சில மனிதர்களுக்கும் சில விலங்குகளுக்கும் பைத்தியம் பிடிப்பதைப் போலவே நாடுகளுக்கும் தேசங்களுக்கும் பைத்தியம் பிடிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளன. இலங்கை தேசம் கூட அதன் பகுத்தறிவை இழந்து புத்தி பேதலித்து தற்போது பைத்தியம் பிடித்த நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது.
இலங்கை தேசமானது நவீன யுகத்திற்குள் எட்டுக்களை எடுத்து வைத்ததன் பின்னர் மிகவும் சிக்கலான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. விஜேவீர மற்றும் பிரபாகரன் மூலம் எதிர்நோக்கிய சவால்களை விடவும் இரண்டு மடங்கு கூடிய பாரிய சிக்கலான நெருக்கடி நிலைமைகளுக்கு இலங்கை தேசம் முகம் கொடுத்துள்ளது
சிந்தனைக் கோளாறு
இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடியின் இயல்பும் அதன் கனதியும் மிகவும் சிக்கலானதாகவும் பரந்துபட்டதாகவும் இருந்தாலும் கூட அதனை ஒருவாறு சமாளித்து நிலைமையை சீர்செய்து மீண்டும் கட்டுக்கோப்புக்குக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை இன்னமும் உண்டு. ஆனால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பார்க்கும் போது நெருக்கடியை வெற்றி கொள்வதற்குப் பதிலாக நாட்டை மேன்மேலும் அழிவுப் பாதையில் தள்ளும் அபாயமே தெரிபடுகின்றது.
இந்த நெருக்கடிகளை வெற்றி கொள்வதற்கான உருப்படியான வேலைத்திட்டங்கள் குறித்த ஒரு கருத்து அரசாங்கத்திடம் இல்லை. எதிர்க்கட்சிக்குக் கூட அப்படியான ஒரு பார்வை இல்லை. நெருக்கடியை சமாளிப்பது என்பது தமது சொந்த விருப்பத்திற்குரிய விடயம் எனக் கருதிக் கொண்டு அரசாங்கம் தன்னிச்சையாக செயல்படுவதை காண முடிகிறது.
அதிகாரம் கிடைக்கப் பெற்றால் நெருக்கடி தன்னாலே தீர்ந்துவிடும்; என எதிர்க்கட்சியினர் நம்புவதாகத் தெரிகிறது. இந்த நெருக்கடிகள் உருவாகுவதற்கான மூல காரணிகள் யாது? குறித்த நெருக்கடிகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன? போன்ற வற்றை விவரிக்கும் ஒரு முன்மொழிவு கூட இன்னும் வெளியிடப்படவில்லை. இது இலங்கையின் அரசியலறிவு மற்றும் கல்வி ஞானம் எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளது என்பதனையே காட்டுகிறது.
நெருக்கடியின் இயல்பு நிலை
நாட்டின் கடன் பிரச்சினை மிக மோசமான நிலையில் இருந்தாலும் இலங்கையை மூடிக்கொண்டுள்ள நெருக்கடி சூழ்நிலையானது அந்தக் கடன் பிரச்சினையின் அளவுதான் என ஒரு போதும் வரையறுக்க முடியாது. பொருளாதார வீழ்ச்சி நெருக்கடியின் ஒரு அடையாளமாகவே உள்ளது. அத்துடன் அரசியல் நெருக்கடியும் சமூக சீரழிவுகளும் இலங்கை நெருக்கடியின் இரு அடையாளங்களாகக் காணப்படுகிறது. இந்த நெருக்கடிகளுக்கு இடையே ஒரு உள்ளாந்த தொடர்பும் இருப்பதால் அந்த நெருக்கடிகள் ஒன்றையொன்று பாதிக்கும் நிலையே உள்ளது.
மேலும் இன, மத, சாதி பிரச்சினைகள் இந்த நெருக்கடியின் பிரதானமான கூறுகளாகும். இதன் விளைவாக ஏற்பட்ட கலவரங்கள், வன்முறைகள், மோதல்கள் காரணமாக கனிசமான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. நாசகார நடவடிக்கைகளால் பல கோடி பெறுமதியான சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இத்தகைய கலவரங்களுக்கிடையே கிளர்ச்சியாளர்களாலும் பாதுகாப்புப் படையினராலும் வெளிப்பட்ட கொடூரங்களும் மூர்க்கத்தனங்களும் சமூகத்தின் மனச் சிதைவுகளுக்கும் உள நோய்களுக்கும் வழிவகுத்தன என்பதே அவர்கள் சமூகத்திற்கு வழங்கிய பரிசுகளாகும். இதனால் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் இல்லாத பிளவுண்ட ஒரு சமூக அமைப்பே இலங்கைக்கு எஞ்சியுள்ளது.
அரசியலமைப்பின் சீரழிவுக்கும் படுதோல்விக்கும் முக்கிய காரணமாக அமைவது மோசமான அரசியல் நிர்வாகமும் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான நடவடிக்கைகளும் மற்றும் தவறுகள் நிகழும்போது சரிசெய்யாமல் பொடுபோக்காக இருப்பதுமாகும். பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமை நெருக்கடிகள் மேன்மேலும் பெருகிச் செல்வதற்கான காரணம் அரசியலமைப்பில் காணப்படும் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கான வசதிகள் இருப்பதும் வியாபித்து காணப்படும் ஊழல்களும் முறையற்ற நிர்வாக ஒழுங்குமாகும் என்றால் அது மிகையல்ல.
நெருக்கடி சூழலையை வெற்றி கொள்வதற்கு செய்ய வேண்டியது எது?
மேற்படி நெருக்கடிகள் உருவாகுவதற்கான அடிப்படைக் காரணங்களை மிகச்சரியாக இனங்கண்டு அவற்றை முறையாக சீர்த்திருத்தம் செய்வதற்கான ஒரு வேலைத்திட்டத்தை வகுப்பதன் மூலம் இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளை வெற்றி கொள்ள முடியும்.
1. இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துதல்.
2. சட்டத்திற்கு வகைகூறும் ஜனநாயக ஆட்சிக்கான அரசியலமைப்பு மாற்றத்தை செய்தல்
3. நாட்டின் தலைவர் சட்டத்திற்கு வகைகூறும் நிலைக்கு கொண்டுவரப்படல் வேண்டும். அந்த வகையில் ஜனாதிபதி சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையையும் ரத்து செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு வழங்கப்பட வேண்டும்.
4. நீதித்துறை சரிவடைந்து வருகிறது. அதற்கான காரணங்களை கண்டறிதல் வேண்டும். சுயாதீனமாகவும் சட்டத்திற்கு வகைகூறக் கூடிய மற்றும் செயல்திறன் மிக்க நீதித்துறையை கட்டியெழுப்ப வேண்டும். எனவே நீதித்துறையை விசாரணை செய்யும் அதிகாரம் கொண்ட வலுவான நீதித் துறை உருவாக்குவதற்கான மாற்றங்கள் கொண்டுவரப்படல் வேண்டும்.
5. ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சமூகப் பொறுப்புணர்ச்சியோடு செயற்படுவதற்கு தேவையான மாற்றங்களை ஏற்படுத்தப்பட வேண்டும்.
6. கட்சியின் நிதியம், தேர்தல் நிதியம், தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படத்துவதற்கான சீர்திருத்தங்களை செய்தல் வேண்டும்.
7. கட்சிகளுக்குள்ளே ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை கொண்டுவருதல் வேண்டும்.
8. அரசியல்வாதிகளின் கொடுப்பனவுகள் பராமரிப்பு செலவினங்களை ஆராய்ந்து தேவையற்ற மேலதிக செலவினங்களை குறைப்பததுடன் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு கொடுப்பனவுக்கான மாற்றங்களை கொண்டு வருதல் வேண்டும்.
9. ஜனாதிபதி அல்லது மக்கள் பிரதிநிதிகள் சொத்துகளை பயன்படுத்தியோ அல்லது முறையற்ற வழிகளிலோ உழைப்பதற்காக உள்ள வழிகளை முற்றாக அகற்றும் சீர்திருத்தங்களை செய்தல் வேண்டும்.
10. இலங்கைக்கு பொருத்தமான அரசியலமைப்பை தெரிவு செய்யும் போது பொது மக்களின் ஆட்சியதிகார உரிமையை வாக்களிக்கும் உரிமையுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பிற்காக மக்களின் அதிகாரத்தை பயன்படுத்தும் வகையில் தூய்மையான ஜனநாயக ஒழுங்கு முறை இருக்க வேண்டும். அது சுவிட்சர்லாந்து அரசியலமைப்பு முறையாகவும் இருக்கலாம் அல்லது மக்கள் தீர்ப்பு வழிமுறையாகவோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பு முறையாகவோ இருக்கலாம். அதற்கேற்ற வகையில் சட்டயாப்பு மாற்றங்களை கொண்டுவர வேண்டும். இத்தகைய மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவருவதனூடாக பாராளுமன்றத்தினால் முன்மொழியப்பட்ட அல்லது அமுலில் இருக்கும் வழிமுறைகளை கேள்விக்குட்படுத்தக் கூடிய அல்லது அரசாங்கத்தின் உயர் பதவியில் இருக்கும் ஒரு நபரின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் மனுக்களை முன்வைக்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். அந்த மனுவானது தேவையான எண்ணிக்கையிலான கையொப்பங்களுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எடுக்கப்பட்டதன் பின்னர் சபையில் விவாதிக்கப்படுவதோடு வாக்களிப்புக்கு விடப்படவும் முடியும். இத்தகைய ஜனநாய மக்கள் உரிமையை கொடுக்கும் அரசியலமைப்புக்கான மாற்றங்கள் கண்டிப்பான தேவையாகும்.
11. அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஜனநாயகக் கொள்கைகளை நீக்குவதற்கோ அல்லது அதனை பலவீனப்படுத்த வழிவகுக்கும் அரசியலமைப்பு திருத்தங்களுக்கு இடம்கொடுக்காத சட்டதிட்டங்கள் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.
12. இலங்கை பாராளுமன்றத்தின் சீரழிந்த நிலைமைகளை கருத்தில் கொண்டும், நாம் வாழும் 21 ஆம் நூற்றாண்டின் அரசியலமைப்பு என்பது பாராளுமன்றத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்ட அரசியல் யாப்பு அல்ல என்பதனாலும் மேலே கூறப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள் பொது மக்களின் பங்களிப்புடன் நடைபெறும் மறுசீரமைப்பாகவே இருக்க வேண்டும்.
கடன் சுமையில் இருந்து மீளுதல்
கடந்த ஜூன் 2021ல் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 50.8 பில்லியன் டாலராக இருந்தது. 2025 ஆண்டு வரை வட்டியுடன் கடனை மாத்திரம் செலுத்துவதற்காக வருடாந்தம் 6 பில்லியன் டாலர்கள் ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாய தேவையுள்ளது. தற்சமயம் இலங்கையானது குறைந்த வட்டி விகிதத்தில் கூட கடன்களை பெற முடியாத சூழ்நிலையில் தான் காணப்படுகிறது. எனவே இந்த கடன் நெருக்கடியை வெற்றி கொள்ள வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர வேறு வழிகள் கிடையாது.
இலங்கை அந்த நிதியத்தில் உறுப்பினராக உள்ளது. தவணைக்கான கட்டணங்களை செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் உறுப்பு நாடுகளுக்கு கடன் வசதிகளை வழங்குவதே இந்த நிதியத்தின் நோக்கமாகும். கடன் நெருக்கடியை சமாளிப்பதற்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் (0.050) தேவையான கடனைப் பெறுவதற்கான ஒரே வழி இதுமட்டுமே.
இதற்கு முன்பு 1989ல் ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் முடிவின் போதும் 2009ல் உள்நாட்டு யுத்த முடிவின் போதும் இலங்கை தவணைக்கான கடன் தொகையை செலுத்துவதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியதுண்டு. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் சர்வதேச நாணய நிதியம் நிலைமையை சமாளிக்க கடன் வழங்கியது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளின்றி அந்த வசதிகளை செய்வதில்லை என்பது உலகறிந்த உண்மையாகும். இருப்பினும் இலங்கைக்கு நேர்ந்துள்ள தொய்வு நிலைமைகளையும் தொடரான தோல்விகளையும் சுட்டிக்காட்டி அந்த இக்கட்டான சூழ்நிலையை மிகைப்பதற்கான ஒரு வேலைத் திட்டத்தையும் முன்மொழிந்து குறித்த கடன் வசதியை தருமாறு கோரிக்கை வைத்தால் அதனை சர்வதேச நிதியம் நிராகரிக்காது.
நாடு இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளால் சூழப்பட்டு கையாலாகாத நிலைக்கு தள்ளப்படுவதற்கு என்ன காரணம்? உன்மையில் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச சமூகத்துடன் இலங்கை முட்டாள்தனமான பிடிவாதங்களைக் கடைப்பிடித்து திமிரோடு நடந்து கொண்டதால் உருவாக்கப்பட்ட குழப்பங்களாகவே அவற்றை கருத முடியும். இதனால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சேதங்களும் பாதிப்புகளும் எண்ணிலடங்காதவை. இப்போதாவது அரசாங்கம் எதிர்க்கட்சியின் ஆதரவுடன் நாட்டை பேரழிவில் மூழ்கவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும்.