Home உலகம் இலங்கை அகதி நடத்திய தாக்குதல் : பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை கடுமையாக்குகின்றது நியூசிலாந்து

இலங்கை அகதி நடத்திய தாக்குதல் : பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை கடுமையாக்குகின்றது நியூசிலாந்து

by admin

(படம் :நியூசிலாந்து பிரதமர் ஜசின்டா ஆர்டென்)

காவல்துறை கண்காணிப்பில் இருந்துவந்த இலங்கை அகதி ஒருவர் நடத்திய கத்திக் குத்துத் தாக்குதலை அடுத்து நாட்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களைக் கடுமையாக்கப் போவதாக நியூசிலாந்து பெண் பிரதமர் ஜசின்டா ஆர்டென்(Jacinda Ardern) அறிவித்திருக்கிறார்.

ஒக்லாந்தில் நவீன சந்தைத் தொகுதி ஒன்றில் நடந்த கத்திக் குத்துத் தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.

நியூசிலாந்துக்கு மாணவர் வீஸா மூலம் வருகை தந்த இலங்கை இளைஞர் ஒருவரே அங்கு பின்னர் அரசியல் புகலிடம் கோரியிருந்த நிலையில் மததீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு இந்தப் பயங்கரவாதச் செயலைப் புரிந்துள்ளார். ஐந்து ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டு வந்தவர் தாக்குதல் நடத்திய சில நிமிட இடைவெளியில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இலங்கையின் கிழக்கே காத்தான்குடியைச் சேர்ந்த சம்சுதீன்(Ahamed Aathil Mohamed Samsudeen) என்ற 32 வயதுடைய அந்த இளைஞர் ஐ. எஸ். ஐ. எஸ்.பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக அடையாளங் காணப்பட்டுச் சில வருடங்காகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் பெரிய கத்தி ஒன்றினால் பலரைத் தாக்குவதற்கு முன்பாகப் பல முறை விசாரிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரைக் கைது செய்து சமூகத்தில் இருந்து தள்ளி வைப்பதற்கு நியூசிலாந்து சட்டங்கள் வலுவானவையாக இருக்கவில்லை.

இதனைச்சுட்டிக் காட்டியிருக்கும் பிரதமர் ஜசின்டா இம்மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தினது ஒப்புதலுடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை வலுவானதாக மாற்றப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

“வரலாற்றை மாற்ற முடியாது. ஆனால்எதிர்காலத்தை மாற்றியமைக்க முடியும்.நாங்கள் அதற்குத் தயாராக இருக்கவேண்டும்”என்று அவர் செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்தார். நியூசிலாந்தின் தற்போதைய சட்டங்கள் பயங்கரவாதச் செயல்களால் ஈர்க்கப்படுகின்ற ஒருவரை,அவர் ஒரு தாக்குதலில் ஈடுபடும்வரை அவரைப்” பயங்கரவாதி”என்று முத்திரை குத்தித் தண்டிப்பதைத் தடுக்கின்றன.

ஆபத்தான நபர் ஒருவரை கேடு விளைவிக்கும் வரை வெளியே நடமாட விட்டு வைக்கின்ற தற்போதைய சட்டங்கள் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்கு உதவப்போவதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2011 மாணவர் வீஸா பெற்று நியூசிலாந்துக்கு வந்த சம்சுதீன், பின்னர் இலங்கை நிலைவரம் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தலானது எனத் தெரிவித்து அங்கு அகதியாகப் புகலிடம் கோரியிருந்தார்.

அதன் காரணமாகவே அவரதுபெயர் விவரங்களை வெளியிடுவதற்கு அதிகாரிகள் நீதிமன்றத்தின் அனுமதிக்காகக் காத்திருக்க நேரிட்டது. சம்சுதீன் புரிந்த செயலால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று அவரது சார்பில் விடயங்களைக் கவனிக்கின்ற சட்டத்தரணி கூறியுள்ளார்.

——————————————————————

குமாரதாஸன். பாரிஸ்.04-09-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More