நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பின்னா் 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக மைதானத்தில் 25 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்த நிலையில் பாகிஸ்தான் சென்ற நியூசிலாந்து அணி இந்த போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்ததுடன் முதலாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற இருந்தது.
இந்தநிலையில் பாகிஸ்தான் தொடரை பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து அணி ரத்து செய்துள்ளது. அந்நாட்டு அரசு எச்சரிக்கை வெளியிட்டதால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென இந்த முடிவை எடுத்ததனையடுத்து பாக்கிஸ்தானிலிருந்து ருந்து நியூசிலாந்து அணி உடனடியாக நாடு திரும்புகிறது.
நியூசிலாந்து அணி திடீரென தொடரை கைவிட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகுந்த கோபம் அடைந்து உள்ளது. நியூசிலாந்து அணியின் முடிவு சிறுபிள்ளைதனமானது. வெறும் பாதுகாப்பு மிரட்டல் தொடர்பாக தொடரில் விளையாடாமல் வெளியேறுவது தங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக உள்ளதென பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் அணித்தலைவருமான ரமீஸ் ராஜா தொிவித்துள்ளாா்.
நியூசிலாந்து அணியின் இந்த முடிவு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என பாகிஸ்தான் அணித்தலைவா் பாபர் ஆசம் தொிவித்துள்ளாா்.
இந்தநிலையில் தொடரை விளையாடாமலேயே ரத்து செய்த நியூசிலாந்து அணி மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறைப்பாடு அளித்துள்ளது.
இதேவேளை இங்கிலாந்து அணி பாகிஸ்தான் பயணம் குறித்து 48 மணி நேரத்தில் தனது முடிவை அறிவிக்கவுள்ளது. அந்த அணி ஒக்டோபர் 13 மற்றும் 14-ந் திகதிகளில் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு உள்ளநிலையில் நியூசிலாந்து போன்று ல் இங்கிலாந்தும் தொடரை ரத்து செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது