1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.
2,900 முதல் 3,200 சிறுவர்கள் வரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய குற்றங்களில் ஈடுபட்டதாக திருச்சபை உறுப்பினர்களின் கொடுமைகள் தொடர்பாக விசாரிக்கும் குழுவின் தலைவர் ஜீன் மார்க் சாவே தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆசிரியர்கள் போன்ற திருச்சபையின் சாதாரண உறுப்பினர்கள் செய்த தவறுகளை கணக்கிட்டால் இந்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,000 ஆக உயரும் என்று விசாரணை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
திருச்சபை அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி தமக்கு வலியை ஏற்படுத்துவதாக போப்பாண்டவர் பிரான்சிஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். போப் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரெஞ்சு ஆயர்களை சந்தித்த பிறகு இந்த அறிக்கை பற்றி அறிந்து கொண்டதாக வத்திகான் தொிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களுக்கு ஆழ்ந்த கவலையும், முன்வரும் துணிச்சலுக்கு நன்றியும் அவர் தெரிவித்துள்ளாா் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
சுயேச்சையான இந்த விசாரணை 2018 இல் பிரெஞ்சு கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்டது. இது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றம், காவல்துறை மற்றும் திருச்சபை பதிவுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமும் சாட்சிகளிடமும் தகவல்களைப் பெற்றது.
விசாரணையால் மதிப்பிடப்பட்ட பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பிரெஞ்சு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர மிகவும் பழையவை எனக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது