“எங்களுடைய கட்சி என்றுமே இனவாதத்துடன் நடந்து கொண்டதில்லை, நாங்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயற்பட்டு வருகின்றோம்” என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில், இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் உடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
“பௌத்த கொடியை மாத்திரம் ஏந்திக் கொண்டு செல்வதன் மூலம் மாத்திரம் வெற்றியை நோக்கி பயணிக்க முடியாது. எங்கள் கட்சி பல தசாப்தங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்த ஒரு கட்சியாகும். அன்று எங்களுடைய கட்சியின் தலைவி முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பெருந்தோட்ட மக்களுக்கான வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுத்தார். தொழில் அமைச்சர் என்ற வகையில் நான் அவர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுத்தேன். எனவே எங்களுடைய கட்சி தொழிலாளர்களுக்கு தேவையான விடயங்களை அந்தந்த காலத்தில் செய்து கொடுத்து இருக்கின்றது.”
“நல்லாட்சி அரசாங்கத்தில் எங்களுடைய கட்சியை சார்ந்தவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வில்லை அதற்கான நிதிகள் ஒதுக்கப்படவில்லை இதன்காரணமாக எங்களுடைய ஆதரவாளர்கள் அந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.
இவ்வாறான ஒரு அரசியல் சூழ்நிலையிலேயே கடந்த தேர்தலில் எங்களுடைய கட்சி தனித்து போட்டியிடுவது என முடிவெடுத்து 14 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. இதன்போது அனைத்து கட்சிகள் இடையையும் விருப்புவாக்கு ஒரு பிரச்சினையாக அமைந்திருக்கின்றது அதனாலேயே இந்த தேர்தல் முறையை நாங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்” என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.