கன்னடத் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார்(46) நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்திருந்தாா். இந்திய சினிமாவில் ஒரு நடிகரின் மரணத்திற்கு மொழி கடந்து, இனம் கடந்து திரையுலகினர் மட்டுமல்லாது அரசியல் அரங்கிலும் சோகம், வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது,
இதற்கு காரணம் அவா் பிரபலமான நடிகர் என்பதற்காக இல்லை, கர்நாடக மாநிலத்தைக் கடந்து புனித் ராஜ்குமார் நடித்த படங்கள் வெற்றிபெற்றதும் இல்லை. கன்னட மொழி பேசுபவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவர் நடித்தபடங்கள் திரையிடப்படுவது உண்டு, கன்னட சூப்பர் ஸ்டார் என கன்னட மக்களால் கொண்டாடப்பட்ட ராஜ்குமாாின் மகனாக , சினிமா நடிகராக அறிமுகமாகி வெற்றிபெற்று பிரபலமானவர் என்பதற்காக அவர் கொண்டாடப்படவில்லை.
சினிமா நடிகராக கோடிகளை குவித்தாலும் அதன்மூலம் வருங்கால சந்ததியினருக்காக கல்விக்கூடங்கள், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் முதியோர் மகிழ்வுடன் வாழ்வை கழிக்க ஏற்படுத்திய முதியோர் இல்லங்கள், மருத்துவ வசதிகள் என பல்வேறு சமூக நலத்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தியதுதான் அவரது இழப்பு குறித்து கவலைப்படுவதற்கான முதன்மை காரணமாக உள்ளது.
“என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா” என திரைப்படங்களில் பாடலுக்கு வாயசைத்ததுடன் தன் வேலை முடிந்தது என வணிக நோக்கில் மட்டும் செயல்படும் நடிகர்கள் இருக்கும் இந்திய சினிமாவில் இப்படி எதையும் பாடாமல், பஞ்ச் அரசியல் வசனங்கள் பேசி பரபரப்பை ஏற்படுத்தாமல் சினிமா மூலம் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை மாநிலத்தில் 45 கட்டணமில்லா இலவச பள்ளிகள், 36 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், வருடந்தோறும் 1800க்கும் மேலான குழந்தைகளின் கல்வி செலவு என தன் சினிமா வருமானத்தை பயன்படுத்தியவர். அதனால்தான் இந்திய பிரதமர் முதல் கர்நாடகத்தின் கடைகோடி எளிய மனிதனையும் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் கலங்க வைத்திருக்கிறது.
சிறிய மாநிலத்தின் குறிப்பிட்ட எல்லையை தாண்டாத கன்னட சினிமாவில் ஒரு நடிகன் 46 வயதில் செய்தது இமாலய சாதனையாக போற்றப்பட்டதால்தான் கர்நாடக மக்கள் கலங்கி பெங்களூரில் கடும் குளிரும், மழையும் இருந்தபோதும் அலை கடல் என குவிந்து புனித் ராஜ்குமாருக்கு கடந்த இரண்டு நாட்களாக இறுதி அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இதனை கட்டுப்படுத்துவது எளிதான செயல் அல்ல என்பதை உணர்ந்த மாநில அரசு ஏற்கனவே திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே புனித் ராஜ்குமார் நல்லடக்கத்தை அதிகாலையில் அரசு மரியாதையுடன் நடத்தி முடித்துள்ளது.
அங்கு குவிந்திருந்தவர்கள் அப்பு…. அண்ணா… என்று கண்ணீர்விட்டு கதறினர். பலர் புனித் ராஜ்குமாரின் உருவப்படங்களை கைகளில் ஏந்தியபடி வந்து அஞ்சலி செலுத்தினர். பெங்களூரு மட்டுமின்றி சாம்ராஜ்நகர் முதல் பீதர் வரை மாநிலம் முழுவதும் ரசிகர்கள் வாகனங்களில் சென்று பெங்களூரு கன்டீரவா மைதானத்தை அடைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது