பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியை ஸ்தாபிப்பது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
செயலணி அமைப்பது தொடர்பில் தன்னிடம் ஆலோசிக்கப்படவில்லை என்று கூறிய அவர், இந்த நடவடிக்கை குறித்து தான் மகிழ்ச்சியடையவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதன்கிழமை (27.10.21) நியமித்தார். இந்த செயலணியை அறிவித்த அவர், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் இயங்கும் என்றும் அறிவித்தார்.
இலங்கையினுள் ஒரே நாடு- ஒரே சட்டம் என்ற கருத்தாக்கத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆய்வு செய்யும் பொறுப்பு பணிக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சட்டவரைவொன்றைத் தயாரித்தல், நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் உரிய வரைவில் உள்ளடக்குதலும் இக்குழுவினருக்கு. பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.