கலைக்கும் வாழ்க்கைக்குமான இணைவினை தக்கவைத்துக் கொள்ளல், இசை வழி நிகழுதல் அல்லது பேணப்படுதல் என்பது, மனிதர்களின் வாழ்வியலை பொறுத்தவரை மறுதலிக்க முடியாத, மாற்ற முடியாத தொடர் நிகழ்வாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தில், அதிகார நிலைப்பட்ட பல்வேறு நிலை சார்ந்த கட்டமைப்புகள் என்பது மனிதர்களை சிந்திக்க முடியாதவர்களாக கட்டமைப்பு செய்வதனூடாகவும், நுகர்விய கலாசார சூழலுக்குள், அறிவுநிலை சார்ந்தும், அறிவுருவாக்க நிலைசார்ந்தும் பேணப்படுகின்ற நடைமுறை கட்டமைப்பு என்பது வலுவானதொரு பின்னணியை வகித்துவருகின்றமைக்கூடாகவும் இயக்கத்தன்மைக்கான சவாலாக இருந்துவருகின்றன.
இந்த நிலையிலிருந்து விடுபட்டு பன்மைத்துவ அறிவுருவாக்கம் தொடர்பாக சிந்திக்கின்ற போது, அல்லது பேசவிளைகின்ற போது, நடைமுறையில் பாடபுத்தகம் சார்ந்து வரையறுக்கப்பட்டிருக்கின்ற கல்விமுறை குறித்து சிந்திக்க வேண்டியதும் அவசியமாகின்றது. பாடபுத்தகத்தோடு வரையறுக்கப்பட்ட இந்த கல்வி நடைமுறை, ஏனைய அறிவுடைமைகளுக்கான சவாலானதொரு சூழலை கட்டமைத்து விட்டிருக்கின்றதை அவதானிக்க முடிகின்றது. எழுத்துமையம் என்பதை விடுத்து, ஏனைய அறிவுடைமைகளுக்கானதுமான தளம் என்பது, பன்மைத்துவ அறிவுருவாக்கத்தின் வழி சாத்தியப்பாடடைகின்றது.
இந்தவகையில், மலையக வாய்மொழி வழக்காற்றில் இசை வழி, உருவாகிய அறிவுருவாக்க பாரம்பரியத்திற்கான ஓர் சிறந்த எடுத்துகாட்டாக, வலம் வந்துக் கொண்டிருக்கும், கதிரவேலு விமலநாதன் என்ற ஆளுமை குறித்து, அவரது 57 வது அகவையில் எழுதுவதில் மனம்நிறைந்த மகிழ்ச்சி! கலைஞரின் இசைப்பயணம் தொடரவும், சிறக்கவுமான மனமார்ந்த வாழ்த்துக்கள்!.
கதிரவேலு விமலநாதன், இற்றைவரைக்குமான தனது இசை பயண வாழ்க்கையில், வாழ்க்கைக்கும் இசைக்குமான பிரிக்கமுடியாத இணைப்பினை நடைமுறை வாழ்விலே யதார்த்தமாக கண்டுணர்ந்து, வாழ்வாக கொண்டு வாழ்ந்து வருபவர். உண்மையான அறிவுருவாக்கம் என்பது, கரும்பலகைக்கு அப்பால் உள்ளது என்பதற்கான வலுவானதொரு சான்று கதிரவேலு விமலநாதன்.
கொழும்பு தமிழ்சங்கத்தில் தனது பேச்சினூடாகவும், பாடலுக்கூடாகவும் மலையக வாய்மொழி இசை நயம் வெளிப்படுத்தி பாராட்டப் பெற்றவர். 2013 ஆம் ஆண்டு, ஹப்புத்தளை சைவ இளைஞர் மன்றம், CES கல்வியகம் இணைந்த நடாத்திய பாரம்பரிய மலையக கலை நிகழ்ச்சியின் போது, “கலைவிற்பனர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். 2014 ஆம் ஆண்டு அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையத்தாலும், 2015 ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவிலும் (“நாட்டாரியல் கலை காவலர் விருது”) கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு, இவருடைய திறமையை பாராட்டி, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை விருது வழங்கி கௌரவித்ததுடன், யாழ் சமூக ஆய்வு மையத்தால், “ மலையக நாட்டாரியல் நட்சத்திரம்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஈன்றளவும் பாடசாலைகளிலும், பல்கலைகழக மட்டங்களிலும் “நாட்டாரியல்” தொடர்பான தமது கருத்தாழத்தை பகிர்ந்து வரும் இவரின் திறமையை பாராட்டி பறைசாற்றிட, “ ஊவா சமூக வானொலி” நாட்டாரியல் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை இரண்டு வருட காலமாக, விமலநாதனைக் கொண்டு நடாத்தி, அவரின் தேடல் விஸ்தகரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மலையக வாய்மொழி இசைக்கென தனித்துவமான நிலையினை இவரது குரல்வளமும், இலக்கிய பரீட்சயமும், இலக்கிய ஒப்பீடும் பெற்று தர தவறவில்லை.
பாடலுக்கூடாக பல்வேறு செயல்வாத முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருகின்ற, கலைஞர்கள் மத்தியில், வாய்மொழி வழக்காற்றில், இசை பாரம்பரியம், வரலாற்றின் மாற்றீடு செய்யமுடியாத சம்பவ நிகழ்ச்சிகளின் பதிவுகளாக இருப்பதை படம் பிடித்து காட்டிடும் இவரது பாடல்கள். கையிலும் பையிலும் குறிப்பு இன்றி, பைந்தமிழ் இலக்கியங்களோடு, வாய்மொழி வழக்காற்றில் மலையக வாய்மொழி இசை நயந்து, முப்பது வருடகாலத்திற்கு மேலாக, நாட்டாரியல் ஆய்வில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் திரு.க. விமலநாதன், நாட்டார் இசை நாயகனாகவும், ஆய்வாளனாகவும் என்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்.
இரா.சுலக்ஷனா.