யாழ்ப்பாணம் பருத்தித்துறை காவல்துறை உத்தியோகஸ்தர்களால் யாழில் இருந்து வெளியாகும் பிராந்திய பத்திரிக்கை ஒன்றின் ஊடகவியலாளர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜெ. சுலக்சன் என்பவரையே பருத்தித்துறை காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகஸ்தர் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி , அநாகரிகமாகவும் பேசியும் உள்ளார்.
அது தொடர்பில் ஊடகவியலாளர் , பருத்தித்துறை காவல்நிலையப் பொறுப்பதிகாரியிடம் முறையிட சென்ற போது , காவல்நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து தமது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்ய போவதாக மிரட்டி , பொறுப்பதிகாரியை சந்திக்க விடாது தடுத்தும் உள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறை நீதிமன்றுக்கு அருகில் உள்ள தேநீர் கடை உரிமையாளருக்கும் , பருத்தித்துறை காவல்நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தருக்கும் இடையில் , கொடுக்கல் வாங்கல் காரணமாக முரண்பாடு நிலவி வந்துள்ளது.
அந்நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்று பாதுகாப்பு கடமையில் குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஈடுபட்டிருந்த போது , அருகில் இருந்த தேநீர் கடைக்கு வருபவர்கள் கடைக்கு அருகில் , தமது வாகனங்களை நிறுத்த முற்பட்ட போது , அவ்விடத்தில் வாகனங்களை நிறுத்த முடியாது எனவும் , நீதிமன்ற உத்தரவு என்றும் , கடைக்கு வருபவர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தார்.
அந்நிலையில் கடைக்கு வந்த நபர் ஒருவர் கடைக்கு முன்பாக தனது , மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு தேநீர் அருந்த உள்ளே சென்ற போது , அவரிடம் வந்து மோட்டார் சைக்கிளை எடு என காவல்துறை உத்தியோகஸ்தர் அநாகரிகமாக பேசி நடந்துகொண்டுள்ளார்.
அதன் போது குறித்த நபரும் , இவ்விடத்தில் வாகனம் நிறுத்த தடை என எவ்வித அறிவித்தலும் இல்லை. வழமையாக இவ்விடத்தில் நாங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்துகின்றனா ங்கள் இன்றைக்கு திடீரென வந்து நிறுத்த வேண்டாம் என அநாகரிகமாக என்னிடம் பேச முடியாது என கூறியுள்ளார்.
அதனை அடுத்து குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் அந்நபர் , தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று தடுத்து வைத்தார்.
நீதிமன்ற காவல் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் , தனது கடமைகளை கைவிட்ட இதனை செய்துள்ளார்.
அதன் பின்னர் , சிறிது நேரம் காவல்நிலையத்தில் அவரை தடுத்து வைத்த பின்னர் , தாங்கள் காவல்துறை பிணையில் விடுவிப்பதாக கூறி , அவரை விடுவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அறிந்து கொண்ட ஊடகவியலாளர் , அது தொடர்பில் மேலும் அறிந்து கொள்வதற்காக , அக்கடைக்கு சென்றுள்ளார்.
அதன்போது ஊடகவியலாளரும் கடைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்காரிடம் சம்பவம் தொடர்பில் விசாரிக்க முற்பட்ட போது , நீதிமன்ற காவல் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் , அங்கிருந்து வந்து ஊடகவியலாளருடன் முரண்பட முனைந்துள்ளார்.
அதன் போது , தான் ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திய போது , மோட்டார் சைக்கிளை இவ்விடத்தில் இருந்த வேண்டாம் என நீதிமன்ற உத்தரவு என கூறியுள்ளார். அதற்கு , ஊடகவியலாளர் எங்கே மோட்டார் சைக்கிளை நிறுத்துவது என கேட்ட போது , காவல்நிலையத்திற்குள் நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.
அதனை அடுத்து அவர் காவல்நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளை கொண்டு சென்று நிறுத்திய போது , கடைக்காரனுடன் கதைக்க வேண்டாம் , இங்கிருந்து செல்லுங்கள் என அச்சுறுத்தும் வகையில் கூறியுள்ளார்.
அதற்கு ஊடகவியலாளர் செவி சாய்க்காது சென்ற போது , காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து காவல்துறை உத்தியோகஸ்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்வேன் என மிரட்டியுள்ளார்.
அதற்கு ஊடகவியலாளர் தான் காவல் நிலைய பொறுப்பதிகாரியை சந்திக்கிறேன் என கூறிய போது , தனது துப்பாக்கியை எடுத்து ஊடகவியலாளரை நோக்கி நீட்டி ” யாருக்கும் பயப்பட மாட்டேன், காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தவரை சுட்டேன் ” என கூறுவேன் என மிரட்டியுள்ளார்.
அதன் போது அங்கு வந்த மற்றைய காவல்துறை உத்தியோகஸ்தர்கள் , ஊடகவியலாளரை மிரட்டிய சக காவல்துறை உத்தியோகஸ்தரை சமரசப்படுத்தியதுடன் , ஊடகவியலாளரையும் அங்கிருந்து செல்லுமாறும் , பொறுப்பதிகாரி காங்கேசன்துறை சென்றுள்ளதாகவும் , அவர் மாலை வந்த பின்னர் வந்து கதைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.