டென்மார்க்கின் முன்னாள் குடியேற்றவிவகார அமைச்சர் ஸ்டோஜ்பெர்க்(Stoejberg) அம்மையார் நாடாளுமன்றஉறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.அவரைப் பதவி நீக்குவதற்காக டென்மார்க்கின் நாடாளுமன்றத்தில்(Folketing)நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் (98பேர்)ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.
பதவி நீக்கத்துக்கு எதிராக 18 வாக்குகள் மட்டுமே பதிவாகின. திருமணமான இளம் அகதிகளைத் தனித்தனியே பிரித்து வேறுபடுத்தித் தங்க வைப்பதற்கு உத்தரவிட்டார் என்று கூறப்படும் குற்றவிசாரணை வழக்கு ஒன்றில் அண்மையில் ஸ்டோஜ்பெர்க்கிற்கு அறுபது நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது .
மேன்முறையீடு செய்யமுடி யாத அந்தத் தீர்ப்பினை அவர் ஏற்றுக் கொண்டதை அடுத்தே அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையும் பறிக்கப்பட்டிருக்கிறது.டென்மார்க்கில் நீதிமன்றம் ஒன்றினால் தண்டனை வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவரது பதவியில் இருந்து தூக்கப்பட்டமை கடந்த முப்பதுஆண்டுகாலப் பகுதியில் இதுவே முதல் முறை ஆகும்.
2015-2019 காலப்பகுதியில் டெனிஷ் மக்கள் கட்சியின் ஆதரவுடன் அமைந்த பழமைவாத மைய வலதுசாரி அரசாங்கத்தில் குடியேற்ற விவகார அமைச்சராகவிளங்கிய ஸ்டோஜ்பெர்க், குடியேறிகள் மற்றும் அகதிகள் விடயத்தில் கடும் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தார்.
திருமணமான இளம் அகதிகளை அவர்களது வயதைக் காரணங்காட்டி தனித்தனியே பிரித்து வெவ்வேறு பராமரிப்பு நிலையங்களில் தங்க வைக்குமாறு உத்தரவிட்டார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 2016 ஆம் ஆண்டு மாத்திரம் இவ்வாறு 23 மணமான தம்பதிகளைஅவர்களது தஞ்சக் கோரிக்கையைப் பரிசீலிக்காமல் தனித்தனியே பிரித்துவைக்கும் உத்தரவை அவர் விடுத்திருந்தார்.
தஞ்சக் கோரிக்கையாளர்களான சிரியநாட்டைச் சேர்ந்த 17 வயது யுவதி ஒருவரை கருவுற்றிருந்த நிலையில் அவரது கணவனான 24 வயதுடைய இளைஞரிடம் இருந்து பிரித்து இருவரையும் தனித்தனியான தடுப்பு முகாம்களில் வைத்திருப்பதற்கு உத்தரவிட்டமை தொடர்பில்அமைச்சருக்கு எதிராகப் பல்வேறு தரப்புகளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மணமானதாகக் கூறப்பட்ட பெண்ணின் வயதை அடிப்படையாகக் கொண்டே-18 வயதுக்கு குறைந்தவர் என்ற காரணத்தால் – அவர்களைப் பிரித்து வைத்திருக்கும் உத்தரவை விடுத்தார் என்று அமைச்சர் அப்போது விளக்கமளித்திருந்தார்.
இள வயதுத் திருமணத்துக்கு எதிரானஅவரது கொள்கைகள் அச்சமயம் டென்மார்க்கில் அவருக்குப் பெரும் செல்வாக்கை உருவாக்கி இருந்தது. குடியேறிகளாக இருப்பினும் இளவயதுத் திருமணத்தை அனுமதிக்க முடியாது. பெண்களை அதிலிருந்து பாதுகாப்பதுடென்மார்க்கின் பெறுமானங்களில்அடங்குகின்றது என்று ஸ்டோஜ்பெர்க்வாதிட்டுவந்தார்.
ஆனால் தனித் தனியே பிரிக்கப்பட்ட குடியேறிகளான இளம் ஜோடிகள் தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருந்ததாக அவர்களைப் பராமரித்தவர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.அமைச்சரது நடவடிக்கை அகதிகள் மற்றும் குடியேறிகள் தொடர்பான ஐரோப்பியச் சட்டங்களுடன் முரண்பட்டதால் அவருக்கு எதிராக வழக்கு விசாரணைதொடங்கப்பட்டது. அந்தக் குற்ற விசாரணை வழக்கிலேயே அவருக்கு 60 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது
——————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.21-12-2021