உலகம் பிரதான செய்திகள்

மலிவான மரப் பெட்டியில் உடல், சூழலைப் பாதிக்காதபடி தகனம்! டுட்டுவின் ஆசைப்படி இறுதி நிகழ்வு

மரணச் சடங்கில் மிகவும் ஆடம்பரமாக விலையுயர்ந்த சவப்பேழை பயன்படுத்தப்படுவதையும் மலர்களையும் மலர் வளையங்களையும் கொண்டு வந்து உடல் மீது குவிப்பதையும் எளிமையை விரும்பி வந்த டெஸ்மண்ட் டுட்டு ஏற்றுக்கொண்டதில்லை.

தனது இறுதி நிகழ்வு ஆடம்பரமும் ஆடம்பரச் செலவுகளும்இன்றி அடக்கமாக நடத்தப்படவேண்டும் என்பதை அவர் ஏற்கனவே தான்சார்ந்த நிறுவனங்களிடம் கூறியிருந்தார். தனது வாழ் நாள் பூராகவும் இயற்கையை நேசித்துச் சுற்றுச் சூழலின் காவலராகவிளங்கிய அவரது இறுதிச் சடங்குகள் அவரது விருப்பப்படியே மிக எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளன.

டுட்டுவின் உடல் மிகவும் மலிவான ஓக் மரப் பேழை ஒன்றில் வைக்கப்பட்டது.அவரது விருப்பப்படி குடும்பத்தவர்கள் சார்பில் ஒரேயொரு மலர்க் கொத்து மட்டுமே பேழை மீது வைக்கப்பட்டது. தண்ணீர் மற்றும் இரசாயனப் பொருள் கலந்த நீரில் உடலைக் கரைக்கின்ற புதிய நீராவித் தகன முறையில் (Aquamation) அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

தீமை நிறைந்த காபன் வெளியேற்றத்துக்குக் காரணமான வழமையான தகன முறைக்குப் பதிலாகச் – சூழலைப்பாதிக்காத இந்த நவீன முறை தற்சமயம் உலகில் அறிமுகமாகி வருகிறது. தனதுஉடல் அவ்வாறு தகனம் செய்யப்படவேண்டும் என டுட்டு விரும்பியிருந்தார்என்று கூறப்படுகிறது.

கொரோனா பேரிடர் காரணமாக இறுதி நிகழ்வில் அவரது பழைய நண்பர்கள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தவர்கள் உட்பட சுமார் நூறுபேர் வரை மட்டுமேகலந்து கொண்டனர் என்று அறிவிக்கப்படுகிறது.

உலக அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் இறுதிச் சடங்கில்பங்குகொள்ள முடியாமற்போயிருக்கிறது கடந்த ஞாயிறன்று 90 ஆவது வயதில் காலமான டுட்டுவின் மறைவு தென் ஆபிரிக்காவில் பெரும் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியிருந்தது.கேப் ரவுணில் உள்ள சென்.ஜோர்ஜ் தேவாலயத்தில் (St George’s Cathedral) வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியுடன் வரிசைகளில் வந்து இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

தென் ஆபிரிக்காவின் அதிபர் சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) இன்றையஇறுதிச் சடங்கில் உரையாற்றிய போது “எங்கள் நவீன தேசத்தின் ஆன்மீகத்தலைவர்” டுட்டு என்று அவரைப் புகழ்ந்தார். அங்கிலிக்கன் தேவாலயத்தில் அரசு முறைப்படி நடந்த உத்தியோகபூர்வ இறுதி நிகழ்வுகளின் பின்னர் உடல் நீராவித் தகனத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டது

.🔥நீராவித் தகனம் என்றால் என்ன?

நீராவித் தகனம் அல்லது திரவத் தகனம்என்று அழைக்கப்படுகின்ற நெருப்பு இல்லாத பிரேத தகன முறை தொழில் நுட்பப் பெயரில் அல்காலைன் ஹைட்ரோலிசிஸ் (alkaline hydrolysis) எனப்படுகிறது அதில்முதலில் உடல் பொட்டாசியம் ஹைட்ரொக்சைட் (potassium hydroxide)கலந்த தண்ணீரில் 90 நிமிடங்கள் 150C (300F)வெப்பத்தில் வைக்கப்படும்.அது உடல் திசுக்கள்அனைத்தையும் கரைத்து எலும்புகளை மாத்திரமே எச்சமாக விடுகின்றது.

எலும்புகள் பின்னர் கிறிமுலேற்றர்(cremulator)என்னும் இயந்திரத்தில் சாம்பல் துகள்களாக அரைக்கப்படும்.இறந்தவரது விருப்பப்படி அதனைப் பின்னர் வழமையான முறையில் புதைக்கவோ அல்லது நீர் நிலைகளில் தூவவோ முடியும்.சூழலுக்குத் தீங்கில்லாத இந்தப் புதிய தகனச் சடங்கு முறை சாதாரணமாகப் பிரேதங்களை எரியூட்டும் போது வெளியேறுகின்ற காபனின் (carbon dioxide) அளவை 90 வீதம் குறைக்கின்றது என்பதைத் தொழில்நுட்பவியலாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.——————————————————————–

குமாரதாஸன். பாரிஸ்.01-01-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.