Home உலகம் தொங்கா தீவின் ஆழிப் பேரலையில் தொங்கிப் போன பிரித்தானிய பெண்ணின் உயிர்!

தொங்கா தீவின் ஆழிப் பேரலையில் தொங்கிப் போன பிரித்தானிய பெண்ணின் உயிர்!

by admin

ஆழிப் பேரலையிடம் நாய்களைக்  காக்க முயன்ற பெண் உயிரிழப்பு! சுனாமி தாக்கிய தொங்காத் தீவுகள்  வெளியுலக தொடர்பின்றித் தனிப்பு! பிரான்ஸிலும் அதிர்வலைகள் பதிவு!

பசுபிக் கடலடியில் சனிக்கிழமை நேர்ந்த பெரும் எரிமலை வெடிப்பினால் கிளம்பிய சாம்பல் படலம் தொங்காத் தீவுக் கூட்டங்களைப் போர்த்து மூடியுள்ளது. தொலைபேசி, இணைய சேவைகள் தடைப்பட்டுள்ளன. இதனால் தலைநகரம் உட்பட தீவுகள் வெளி உலகத் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு இருக்கின்றன.

எரிமலை வெடிப்பு கடலடி இணையத் தொலைத் தொடர்புக் கேபிள்களைச் சேதப்படுத்தியுள்ளது என்று நியூசிலாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர். அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் வசம் இருக்கின்ற செய்மதித் தொலைபேசிகள் கூட வான் மண்டலத்தைச் சாம்பல் மூடிய காரணத்தால் சீராக இயங்கவில்லை என்ற தகவலைச் செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டிருக்கிறது.

தீவுகளில் பரவலாகச் சேதங்கள் ஏற்பட்டிருப்பதை செய்மதி படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அங்கு அழகிய கடற்கரைகளை ஆழிப் பேரலை துவம்சம் செய்திருப்பது தெரிகிறது. நீர் நிலைகள் மாசடைந்துள்ளன என்று கூறப்படுகிறது. தண்ணீர் போத்தல்கள், உணவுப் பொட்டலங்களை வான் வழியே வீசுவதற்காக நியூசிலாந்து தனது விமானங்களை அனுப்பியுள்ளது.

தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக உலகெங்கும் வாழுகின்ற தொங்கா மக்கள் கடந்த இரண்டு தினங்களாகச் செய்திகளுக்குக் காத்திருக்கின்றனர்.

எரிமலை வெடித்த கையோடு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் தாழ்ந்த பகுதிகளைவிட்டு வெளியேறிப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள முடிந்துள்ளது அதனால் உயிர்ச் சேதங்கள் பெரிய அளவில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று நம்பப்படுகிறது.

எனினும் அங்கு நிகழ்ந்த ஓர் உயிரிழப்புப் பற்றிய முதலாவது செய்தி வெளியாகியுள்ளது. தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்ற 50 வயதான பிரித்தானியப் பெண் ஒருவரது சடலம் தேடுதலில் மீட்கப்பட்டு இருக்கிறது. தொங்காடப்பு (Tongatapu) என்ற தீவில் தனது கணவருடன் வாழ்ந்து வந்த அப்பெண் அநாதரவான நாய்களைத் தத்தெடுத்துப் பராமரித்துவருபவர் என்றும் சம்பவதினம் ஆழிப்பேரலைகள் எழுந்து வருவது கண்டு தனது ஐந்து நாய்களையும் பாதுகாப்பதற்கு முயன்றவேளை அலையில் அடித்துச் செல்லப்பட்டார் எனவும் லண்டனுக்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. சம்பவத்தில் அவரது நான்கு நாய்கள் காணாமற் போயுள்ளன. ஒரேயொரு குட்டி மட்டும் மீட்கப்பட்டுள்ளது. கணவர் மரம் ஒன்றைப் பற்றிக் கொண்டு உயிர் தப்பியுள்ளார்.

விலங்குகள் மீது பிரியம் கொண்டவராக வாழ்ந்த அந்தப் பெண் தனது நாய்களுடன் தோன்றும் படங்களை உறவினர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கின்றனர்.

தொங்கா ராஜ்ஜியம்(Kingdom of Tonga) எனப்படுவது பசுபிக் கடலில் சுமார் 170 சிறிய தீவுக் கூட்டங்களை உள்ளடக்கி சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகையைக்  கொண்ட நாடாகும். அதன் அருகே சமுத்திரத்தின் அடியில் அமைந்திருக்கின்றது.

பயங்கரமான எரிமலை. அதன் பெயர் சற்று நீண்டது.ஹங்கா-தொங்கா-ஹுங்கா-ஹா’பாய்(Hunga-Tonga-Hunga-Ha’apai) என்று அது அழைக்கப்படுகின்றது.

சனிக்கிழமை நேர்ந்த அதன் பெரும்வெடிப்பு “ஆயிரம் ஆண்டுகளில் ஒரு முறை நிகழ்கின்ற ஒன்று” என்று பூகோளவியல் வல்லுநர்கள் வர்ணிக்கின்றனர். அது ஏற்படுத்திய அதிர்வலைகளும் ஆழிப் பேரலைகளும் பசுபிக் வட்டகை முழுவதும் – அமெரிக்கா முதல் ஜப்பான் வரை – பெரு முதல் அலாஸ்காவரை-உணரப்பட்டிருக்கிறது.பத்தாயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உள்ள பெரு நாட்டின் கடற்கரை ஒன்றில் கூட வழமைக்கு மாறான பேரலையில் சிக்கி இருவர் உயிரிழக்க நேர்ந்துள்ளது.

?பிரான்ஸிலும் அதிர்வுகள்

சனிக்கிழமை நேர்ந்த எரிமலை வெடிப்பின் அதிர்வுகளை மேற்கு ஐரோப்பிய  நாடுகள் பலவற்றின் காலநிலை அவதானிப்பு மையங்கள் பதிவு செய்துள்ளன. தொங்கா தீவுகளில் இருந்து சுமார் 17ஆயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள பிரான்ஸிலும் வானிலை அளவீட்டு சாதனங்கள் அதிர்வுகளைப் பதிவுசெய்துள்ளன.

பாரிஸ் Saint-Germain-des-Prés இல் அமைந்துள்ள நிலையத்தில் அன்று வழமைக்குமாறான இரண்டு அமுக்க அதிர்வுகள் (pressure variations) தெளிவாகப் பதிவாகியுள்ளன என்பதை வானிலை நிபுணர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தப் பெரு வெடிப்பு கடல் அடிப்படுக்கைகளில் உருவாக்கியிருக்கக் கூடிய பாரிய மாற்றங்களை அறிகின்ற முயற்சியில் உலகளாவிய நிபுணர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

——————————————————————–

             -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

                                                      17-01-2022

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More