இந்த உலகத்தின் அழகு அதன் பன்மைத்துவமும் வித்தியாசமான தன்மைகளுமேயாகும். குறிப்பாக உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதர்களின் அழகும் பல்வகை வித்தியாசங்கள் கொண்டதாகவே விளங்கி வருகின்றது.
உலக வரலாற்றில் அதிகார வெறியும் அதனால் கட்டமைக்கப்பட்ட ஆண் ஆதிக்கப்பண்பாடும் இந்தப் பன்மைத்துவத்தை மறுதலித்து தான் விரும்பும் ஆதிக்கத்திற்குரிய ஒற்றை மையத் தன்மையினை வலிந்து உருவாக்கும் நிலைமைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஒற்றைமைய ஆதிக்கத்தை உருவாக்குவதானது வன்முறைத் தன்மைகள் நிரம்பியதாக, ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்துவதாக, அடிப்படைவாதச் சிந்தனைகளை எழுச்சி கொள்ளச் செய்வதாக, முரண்பாடுகளையும் குரோதங்களையும் வலுப்படுத்தி பேரழிவுகளுக்கு இட்டுச்செல்வதாகவும் இருந்து வருகின்றது.
ஒற்றைமைய ஆணாதிக்கப் பண்பாட்டுருவாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படுபவையாக இந்த இயற்கைப் பூகோளமும் அதில் வாழும் உயிரினங்களும் காணப்படுகின்றன. இயற்கை மீதான ஆணாதிக்க வெறியினால் பூமியின் பன்மையான அழகு பாதிக்கப்படுவதுடன், உயிர்கள் வாழ முடியாத கிரகமாக பூமியைச் சீர் குலைத்து வருகின்றது. பேராதிக்க வணிகத்தை மையமாகக் கொண்ட நவீன விவசாய உத்திகள் மரபணுமாற்றம் என்ற பெயரில் இயற்கையின் இருப்பை இல்லாமலாக்கி வருகின்றன.
இதில் விசேடமாக நவீன வணிகப் பண்பாடானது இயற்கையுடன் மிகவும் நெருக்கமாக வாழும் பெண்களின் உடலை நுகர்வுக்கான பண்டமாகக் கருதித் தனது வணிகப்பண்பாட்டைக் கட்டமைத்து வருவதனைக் காண்கின்றோம். நுகர்வுப் பண்பாட்டில் பெண்களது உடல்களின் பன்மைத்துவமும் அதன் வித்தியாசமான தன்மைகளும் மறுதலிக்கப்படுகின்றன. பெண் இப்படித்தான் இருக்க வேண்டும், பெண்ணின் உடல் இதுதான் என பெண்ணின் உடலைப் பெண்களுக்குரியவையாக அல்லாமல் அதனை ஆணாதிக்க வணிக நலன்களுக்குச் சொந்தமானதாக, ஒற்றைத் தன்மையுடையதாகக் கற்பிப்பதுவும் கட்டமைப்பதுவும் நடந்தேறி வருகின்றன.
இவ்வாறு இயற்கைக்கு விரோதமாகவும் உயிர்களுக்கு விரோதமாகவும் முடுக்கிவிடப்பட்டுள்ள ஆணாதிக்க வணிக நலன் சார்ந்த ஆதிக்கங்களுக்கும், ஆக்கிரமிப்புக்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் எதிராக உலகம் முழுவதும் பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் போராடி வருகின்றார்கள். இப்போராட்டங்கள் உலகம் முழுவதிலும் மிகப்பெரும்பாலும் மிகச்சிறிய அளவினையுடையவையாகிலும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மையப்படுத்தியவையாக மேற்கொள்ளப்பட்டு வருவதனைக் காண முடிகின்றது.
அத்தோடு இவை ஆக்கபூர்வமான சிந்தனை வெளிப்பாடுகளுடனும், கலையாக்க நடைமுறைகளுடனும் கருத்தொற்றுமை கொண்ட மனிதர்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டு வாழ்வியல் முறைமையாகவும் கடைப்பிடிக்;கப்பட்டு வருகின்றன.
இத்தகைய உலகளாவிய நடவடிக்கைகளுள் ஒன்றாகவே நூறு கோடி மக்களின் எழுச்சி உலகம் முழுவதும் பெப்ரவரி 14 இல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பெண்களின் உடல் மீதான வன்முறைகளைக் கேள்விக்குட்படுத்தி பெண்களின் உடலின் உரிமை பெண்களுக்கேயுரியது. இது மனிதர்;களின் வித்தியாசமான பல்வகைமையுடன் ஒத்திசைந்த தன்மை கொண்டது என்பதை வலியுறுத்தி அதனை நம் மனதிலும் வாழ்விலும் அங்கீகரித்து வாழும் வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்வதே இன்றைய காலத்தில் ஆக்கபூர்வமான வாழ்வியலை விரும்பும் ஒவ்வொருவரதும் கடமையாகின்றது.
இதனை வலியுறுத்தி இவ்வாழ்வைக் கொண்டாடும் நிகழ்ச்சியை எதிர்வரும் 14.02.2022 ஆந் திகதி மட்டக்களப்பு நாவற்குடாவில் நூறு கோடி மக்களின் எழுச்சி நாளில் ஏற்பாடு செய்வதில் மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவினராகிய நாம் மகிழ்வடைகின்றோம்.
து.கௌரீஸ்வரன்