கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் தீவிரமடைந்துள்ள போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில், அந்நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி குறித்த நடவடிக்கைகள் தற்காலிகமானது என்பதுடன் நியாயமான மற்றும் சரியான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள ட்ரூடோ, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சூழலில் ராணுவம் களமிறக்கப்படாது என தொிவித்துள்ளார்.
இந்த அவசரநிலை பிரகடனத்தின் மூலம், நீதிமன்ற உத்தரவுகள் இன்றி, போராட்டங்களில் தொடர்புடையோரின் வங்கிக் கணக்குகளை வங்கிகளே முடக்க முடியும் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் தலைநகரத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்னும் உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கனடா-அமெரிக்காவை இணைக்கும் முக்கியமான வணிகப் பாதையான விண்ட்சரில் உள்ள தி அம்பாசிடர் பாலத்தில், ஒரு வாரமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்துள்ளனா்
கனடா எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் டிரக் வண்டி சாரதிகளும் அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் டிரக் வண்டி சாரதிகளும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், இல்லையென்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்ற கனடிய அரசின் புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை ஏற்கெனவே உள்ள கொரோனா விதிமுறைகளுடன் மேலதிக சவாலாக இருக்கும் என்பது போராட்டக்காரர்களின் கருத்தாக உள்ளது