வடக்கில் தென்னை முக்கோண வலயங்களை அடையாளப்படுத்தி தென்னங்காடுகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதரங்களை உயர்த்தும் கையிலான திட்டங்களை கையளித்துள்ளோம் என வனஜீவராசிகள் வன பாதுகாப்பு அமைச்சின் வடக்கிற்கான திட்டங்களின் ஆலோசகர் சகாதேவன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில்,
எம்மால் வடக்கில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி மற்றும் பொருளாதார மேம்பாடுகள் தொடர்பில் முன் வைக்கப்பட்ட திட்டங்களை அரசாங்கம் ஏற்றக்கொண்டுள்ளது. அதன் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வன கிராமம் உருவாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கில் குறிப்பாக நெடுந்தீவை பூர்வீகமாக கொண்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமான திட்டங்களையும் கையளித்துள்ளோம். உடனடியாக அத்திட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது.
நெடுந்தீவை பொறுத்த வரை இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசம். அதனால் இலங்கையில் தனித்து விடப்பட்டுள்ளது. அதனாலயே அது அபிவிருத்தியிலும் பின் தங்கி காணப்படுகிறது.
அந்த மக்களுக்கான வாழ்வாதாரம் இல்லை. 30 ஆயிரம் மக்களுக்கு மேல் வசித்த பகுதியில் தற்போது 3 ஆயிரம் பேர் வரையிலையே வசிக்கின்றனர். அங்கு 30 ஆயிரம் வசித்த போது , தேங்காய் உற்பத்தி, பால் உற்பத்தி , கடலுணவு என அனைத்திலும் தன்னிறைவு கண்டவர்கள் தற்போது , 3ஆயிரம் பேர் வசிக்கும் நிலையில் தன்னிறைவு காண முடியாத நிலையில் உள்ளனர்.
எமது கணக்கு படி எமது எமது திட்டம் நிறைவேற இரண்டு வருட கால பகுதி ஆகும். அதன் மூலம் புதிய பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படும். அதனூடாக ஏறக்குறைய ஒன்றரை பில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்கும் . அதுமட்டுமின்றி அங்குள்ள மக்களுக்கு காணிகள் கிடைக்கும்.
நெடுந்தீவு மாத்திரமின்றி வடக்கில் மன்னார் ,முல்லைத்தீவு , கிளிநொச்சி , வவுனியா , யாழில் வடமராட்சி மணற்காடு என அனைத்து பிரதேசங்களிலும் வனஜீவராசி திணைக்களம் கையகபப்டுத்தி உள்ள காணிகளில் பொருளாதார அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.