இந்து சமுத்திரத்தின் கடல் பாதுகாப்பு குறித்து இலங்கை மற்றும் இந்தியா இடையே கைச்சாத்திடப்படவுள்ள 3 உடன்படிக்கைகள் தொடர்பில் உடனடியாக மக்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் அம்பலப்படுத்துமாறு எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக ‘த ஹிந்துஸ்தான்’ பத்திரிகையில் செய்தி வௌியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெறப்பட்ட போது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை தொடர்பாகவும் இதுவரை நாட்டிற்கு வௌிகொணரப்படவில்லை என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கை – சீனா இடையே திடீரென வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள தேரர், சொற்பத் தொகை பணத்திற்காக வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் வேறு மாகாணங்களிலுள்ள தேசிய வளங்களை கொள்ளையிடுவதற்கு அல்லது தாரை வார்ப்பதற்கான சதிகள், திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தாம் தயார் என எல்லே குணவங்ச தேரர் இதன்போது தெரிவித்தார்.