யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை வரைக்கும் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்தார்.
ஊடகங்களுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்த ஊடக அறிவித்தலிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிவிப்பில்,
நிபந்தனை அடிப்படையில் பால்மா பொருட்கள் விற்பனை செய்தல், விற்பனை செய்ய மறுத்தல், விலையினை மாற்றி விற்பனை செய்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலையினை வெளிக்காட்டாமை, மற்றும் பொதி செய்யப்பட்ட பொருட்களின் மீது முறையான தரவுகள் வெளிக்காட்டாமை தொடர்பாகவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தொடர்ச்சியாக பொதுமக்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வினை நடாத்தி வருகின்றது என்பதோடு இறுதியாக பாவனையாளர் தினம் அன்றும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை நடாத்தி பொதுமக்களிற்கு துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
மேலும் அன்றையதினம் திரவ பெற்றோலியவாயு களஞ்சியசாலையில் இருப்பிலிருந்த வாயு கொள்கலன்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பாவனையாளர் அதிகாரசபையினால் விநியோகிக்கப்பட்டது.
மேலும், யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களிற்கு இயன்றளவு சேவையை வழங்க காத்திருப்பதோடு பொது மக்களிடமிருந்து பெறுமதியான முறைப்பாடுகளை எதிர்பார்க்கின்றது.
பொது மக்கள் துரித சேவை – 1977, யாழ். நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை – 0212229001 தொலைபேசி அழைப்பினூடாக எந்நேரமும் முறைப்பாட்டினை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.