இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அரச நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவில் எதிர்வரும் முதலாம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்காக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட குழுவினரை, அரச நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவில் கடந்த 24ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதில் அவர்கள் பங்கேற்கவில்லை.
நிதிக் குழுவுக்கு சமுகமளிக்காமை குறித்து, அக்குழுவின் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுர பிரியதர்சன யாப்பா அதிருப்தி தெரிவித்திருந்ததுடன், இவ்வாறான செயற்பாடு நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் வினவிய போது, தானும் தனது அதிகாரிகளும் எதிர்வரும் முதலாம் திகதி அரச நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவித்தார்.
நாணயச் சபை உறுப்பினர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் கடந்த 24 ஆம் திகதியன்று, உலக வங்கி அதிகாரிகளுடனான அவசர கலந்துரையாடல் காரணமாக நாடாளுமன்றக் குழுவில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் இது குறித்து குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்கள், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் நோக்கத்தில் கலந்து கொள்ளாமல் விடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.