உலகம் பிரதான செய்திகள்

பாரிஸில் தமிழப் பகுதியில், இரவு நேரம் ஆடையின்றி அலைந்த பெண் பொலிஸாரால் மீட்பு!


பாரிஸில் தமிழர் வசிக்கும் பகுதியில் இரவு நேரம் மீட்கப்பட்ட பெண் யார்? துன்புறுத்தி வீதியில் விடப்பட்டாரா? தகவல் தரக் கோருகிறது பொலீஸ்!


பாரிஸின் புறநகரில் விடிகாலை வேளை உடலில் ஆடை எதுவும் இன்றி வீதியில் காணப்பட்ட நாற்பது வயது மதிக்கத்தக்க பாகிஸ்தானியப் பெண் ஒருவரைப் பொலீஸார் மீட்டு மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருக்கின்றனர்.அவரது உடலில் பாலியல் ரீதியான துன்புறுத்தலைக் காட்டும் அடையாளங்கள் காணப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் Aubervilliers பகுதியின் rue Charles-Tillon தெருவில் கடந்த சனி – ஞாயிறு இரவின் அதிகாலை வேளையில் அப் பெண் அநாதரவாக அலைந்து திரிந்துள்ளார் என்ற தகவலைப் பாரிஸ் ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன.

நீதிமன்றப் பொலீஸ் (judicial police of Seine-Saint-Denis) பிரிவு வட்டாரங்களின் தகவலின்படி அந்தப் பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்தவராகவும் கடத்தல் அல்லது சித்திரவதையின் பிடியில் இருந்து தப்பி வந்தவர் போலவும் காணப்பட்டுள்ளார்.எதையும் விவரிக்க முடியாதவராகவும் இருந்துள்ளார். அவரது வாயில் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டும் கைகள் இரண்டும் கட்டப்பட்டதுக்கான அடையாளங்கள் மணிக்கட்டுகளில் காணப்படுவதாகவும் அவரது வயிற்றில் கூரிய பொருள் ஒன்றினால் வெளிநாட்டு மொழியில் எழுத்துக்கள் சில கீறப்பட்ட காயங்கள் தென்படுவதாகவும் செய்தி ஊடகங்கள் மேலும் தகவல்களை வெளியிட்டிருக்கின்றன.


குடும்பத்துக்குள் அல்லது வெளியார் எவராலும் அப் பெண் துன்புறுத்தப்பட்டுள்ளாரா? அல்லது தானே தன்னை வதைத்துக் கொண்டு வெளியே அலைந்தாரா? என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்படுவதாகப் ‘பரிஷியன்’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அந்தப் பெண் சிறிலங்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர் எனப் பிரெஞ்சு ஊடகங்கள் சில முதலில் தெரிவித்திருந்தன.ஆயினும் அவர் ஒரு பாகிஸ்தான் பிரஜை என்பதைப் பொலீஸார் பின்னர் உறுதிசெய்துள்ளனர். அவரைத் தெரிந்தவர்கள் அவர் தொடர்பான சம்பவங்களை நேரில் கண்டவர்கள் அவற்றைத் தெரியப்படுத்துமாறு பொலீஸ் தலைமையகம்பொதுமக்களைக் கேட்டிருக்கிறது.


பெண்ணின் அடி வயிற்றில் இத்தாலிய மொழியில் “ஜ லவ் யூ” என்பதைக் குறிக்கின்ற “Ti amo” என்ற எழுத்துக்கள் கூரிய பொருள் ஒன்றினால் எழுதப்பட்டிருந்தன என்று செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குமாரதாஸன். 22-04-2022
பாரிஸ்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.