44 வயதான எமானுவல் மக்ரோன் பிரான்ஸின் அதிபராக இரண்டாவதுமுறை வெற்றிவாகை சூடியுள்ளார். நேற்றிரவு எட்டு மணிக்கு வெளியாகிய உத்தேச மதிப்பீடுகளின் படி இரண்டாவது சுற்றில் அவர் 57.6%வீத வாக்குகளால் வென்றிருக்கிறார்.
மரின் லூ பென்னுக்கு 42.4%வீத வாக்குகள் கிடைத்துள்ளன. மக்ரோன் 2017 தேர்தலில் பெற்ற66.10 வீத வாக்குகளை விட 8.5 வீதம்குறைவான வாக்குகளையே வென்றிருக்கிறார். பதவியில் இருக்கின்ற அதிபர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும்வெற்றி பெறுவது கடந்த இருபது ஆண்டுகளின் பின்னர் இது முதல் முறை ஆகும்.
முழுமையான வாக்கு முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.மக்ரோனின் வெற்றி உரைக்காக அவரது ஆதரவாளர்கள் ஈபிள் கோபுரப் பகுதியில் திரண்டிருந்தநிலையில் . அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. Le Touquet (Pas-de-Calais) இல் விடுமுறைகால இல்லத்தில் தங்கியிருந்த மக்ரோன்அங்கிருந்து நேற்றிரவு எலிஸே மாளிகைதிரும்பினார்.
. வாக்களிக்காதோர் வீதம் 1969 க்குப் பின் மிக உச்சம்!இறுதிச் சுற்றில் வாக்களிக்காதோர்எண்ணிக்கை 26.31%வீதமாக அதிகரித்துள்ளது. தேர்தல் வரலாற்றில் 1969 ஆம்ஆண்டுக்குப் பின் இது மிக உச்ச எண்ணிக்கை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த தேர்தல்களில் வாக்களிக்காதோர்வீதம் ஆண்டு ரீதியாக வருமாறு :*15.68% – 1965*31.15% – 1969*12.7% – 1974*14.15% – 1981*15.94% – 1988*20.34% – 1995*20.29% – 2002*16.03% – 2007*19.65% – 2012*25.44% – 2017
புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளில்அடுத்த ஐந்தாண்டுகள் நல்லாட்சி! ஈபிள் கோபுர வெற்றி உரையில் மக்களுக்கு மக்ரோன் வாக்குறுதி
நாட்டுக்குப் புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளில் அடுத்த ஐந்து ஆண்டுகள் நல்லாட்சியை வழங்கப்போவதாக மக்ரோன் தனது வெற்றி உரையில் உறுதிமொழி வழங்கியிருக்கிறார். ஒரு கட்சித்தரப்பின் வேட்பாளராக அன்றிச் சகலருக்குமானஅரசுத் தலைவராக விளங்குவார் என்றும் அவர் உறுதி கூறியிருக்கிறார்.
தேர்தலி்ல் வென்று மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிபராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற அவர்,பல்லாயிரக்கணக்கானதனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்றிரவு வெற்றி உரையாற்றினார். தனதுதுணைவி மற்றும் பல சிறுவர்கள், பரப்புரை அணியினர் சகிதம் அவர் ஈபிள்கோபுரம் அமைந்துள்ள சோம்ஸ் து மாஸ்பகுதிக்கு வந்து சேர்ந்த போது அங்கு திரண்டிருந்தோர் விண்ணதிரும் விதமாக வெற்றிக் கோசங்களை எழுப்பி அவரை வரவேற்றனர்.
எகிப்து நாட்டைச்சேர்ந்த இளம் ஒபேரா பாடகி ஃபர்ரா எல் டிபானி(Farrah El Dibany) நாட்டின் தேசிய கீதத்தை உணர்வு மேலிடப் பாடினார். பிரதமர் ஜீன் காஸ்ரோ மற்றும் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அந்த வெற்றி விழாவில் கூடியிருந்தனர்.
“அன்பான நண்பர்களே, குடிமக்களேஉங்கள் அனைவருக்கும் நன்றி.நான்உங்களுக்கு எவ்வளவு கடமைப்பாடுடையவன் என்பதை அறிவேன். ” மிகக்கடினமான ஆனால் மகிழ்ச்சியுமான அதேசமயம் எதிர்பாராத சவால்களும் நிறைந்த கடந்த ஐந்து ஆண்டுகளின் பின்னர் உங்களில் பலர் மேலும் ஐந்து ஆண்டுகளுக்குக் குடியரசைக் கொண்டு நடத்துவதற்காக என்னைத் தெரிவு செய்துள்ளீர்கள்.
நாம் ஒன்றாக இணைந்து பிரான்ஸை மேலும் சுதந்திரமானதாகவும் ஐரோப்பாவை மிகவும் வலிமையானதாகவும் மாற்ற முடியும். நாம் ஒவ்வொருவரும் நமது படைப்பாற்றலை வெளிப்படுத்துவதன் மூலம் நாட்டை சிறந்ததாகவும் பசுமையானதாகவும்மாற்ற முடியும்.-இவ்வாறு மக்ரோன் தனது உரையின் ஆரம்பத்தில் தெரிவித்தார்.
தனக்கு வாக்களித்தவர்களுக்கும் தனதுதிட்டங்களை எதிர்த்த போதிலும் தீவிர வலது சாரியைத் தடுப்பதற்காக தனக்குவாக்குச் செலுத்தியோரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் விலகி இருந்தவர்களையும் எதிர்த் தரப்புக்கு வாக்களித்தவர்களையும் ஒருங்கே கவனத்தில் கொள்வதுடன் அவர்கள் அனைவருக்குமான குடியரசின் அதிபராக விளங்குவார்-என்றும் மக்ரோன் தனது உரையில் குறிப்பிட்டார்.
லூ பென் அம்மையாருக்குவாக்களித்தவர்களது சீற்றத்தைப் புரிந்துகொள்வதாகவும் அவர் அங்கு கூறினார். இந்தத் தேர்தலில் மக்ரோன் வென்றுள்ள போதிலும் நாடு தீவிர வலதுசாரி அரசியல் எழுச்சி அலை ஒன்றைச் சந்தித்திருப்பதை முடிவுகள் காட்டுவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
அத்தகைய ஒர்ஆபத்தின் பின்னணியில் வெற்றியீட்டியிருக்கின்ற மக்ரோனுக்கு ஐரோப்பியத்தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 2017 தேர்தலில் தேசிய அளவில் ஆக 33.9% வீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார் மரின் லூ பென். இம்முறை அவரது வாக்குவீதம் 41.46 ஆக உயர்ந்துள்ளது.
பிரான்ஸின் வரலாற்றில் தீவிரவலதுசாரிகள் சந்தித்துள்ள உச்ச பட்சஎழுச்சி இதுவாகும். இவ்வாறு நாடு வலதுசாரி அரசியலின் பக்கம் ஒரு துருவமாகி நிற்கின்ற நிலையில் மக்ரோனின் அடுத்த ஐந்து ஆண்டுகால நிர்வாகம் பெரும் நெருக்கடிகளுக்குள்பயணிக்க வேண்டி இருக்கும் என்றுஅரசறிவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜூன் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், தீவிர வலது சாரிகளுக்கும் தீவிர இடதுசாரியாகிய மெலன்சோனுக்கும் மத்தியில் மக்ரோன் சந்திக்கப்போகின்ற மூன்றாவது அரசியல் சோதனைக்களமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே அதிபர் இரண்டாவது முறை அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பது போன்றுமக்ரோனின் துணைவியார் பிரிஜித் மக்ரோனும் இரண்டாவது தடவையாகவும் நாட்டின் முதல் பெண்மணி என்றபெருமையைப் பெற்றுக் கொண்டுள்ளார். மக்ரோனின் வெற்றிக்காக வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.
—————————————————————— –
பாரிஸிலிருந்து குமாரதாஸன் 25-04-2022