நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் முகமாக நாடதளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் பங்குபற்றுதலுடன், இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற வகையில் தாம் கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடா்பில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் ஜனாதிபதி அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவிவிலகியதன் பின்னர் ஸ்தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட சர்வகட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள், அதன் பதவிக் காலம் மற்றும் பொறுப்புகளை வழங்கக்கூடிய நபர்கள் யார் என்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்தாலோசித்து தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு, கொழும்பு – 01 ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது