எதிர்காலம் மிகவும் மோசமான நிலையாக வரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் வடக்கு மக்கள் உள்ளூர் உற்பத்தியில் அதிக நாட்டம் காட்ட வேண்டும் என யாழ் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆ.ஜெயசேகரன் தெரிவித்தார். இன்று யாழ் வணிகர் கழகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு இருப்பது உண்மை. தென்னிலங்கையிலிருந்து வடமாகாணத்திற்கு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை வழங்குவதை படிப்படியாக குறைத்துக் கொண்டு வருகின்றார்கள்.
அதற்குரிய காரணங்களாக இறக்குமதிக்கு கட்டுப்பாடு, மூலப் பொருட்கள் பற்றாக்குறை என பல்வேறு விடயங்கள் சொல்லப்படுகின்றது.ஆனால் உள்ளூர் உற்பத்திகளை பொறுத்த வரையில் எமது பிரதேசத்திலே தட்டுப்பாடு இல்லை. குறிப்பாக எமது பகுதிகளில் விளைகின்ற நாட்டரிசி, மொட்டைக் கறுப்பன் ஆட்டகாரி போன்ற சிலவகையான அரிசி வகைகள் எம்மிடம் போதியளவு உள்ளது.
ஆனால் நெல்லின் உத்தரவாத விலையினை அரசு அதிகரித்ததன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளது. அதாவது 100 ரூபாய் நெல்லின் கொள்வனவு விலை காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதே தவிர எமது பிரதேசத்தில் பாவிக்கின்ற அரிசி போதிய அளவில் கையிருப்பில் உள்ளது
அதே போல கடலுணவு தென்னிலங்கைக்கு எமது பகுதியில் இருந்து செல்கின்றது. இலங்கையிலே கடலுணவு விநியோகத்தில் நான்காவது இடத்தில் உள்ளோம். அதேபோல பால் உற்பத்தியிலும் நாங்கள் நாலாவது இடத்தில் உள்ளோம். பெருந்தொகையான பால் இங்கிருந்து தென்னிலங்கை நிறுவனங்கள் கொள்வனவு செய்து கொண்டு செல்கின்றனர். கடல் உணவுகளும் வெளியில் செல்கின்றது
எமது மக்கள் இனிமேல் பாலுக்கு பெருந்தொகையான பணத்தை செலவழிக்க தேவையில்லை. எதிர்காலம் மிகவும் மோசமான நிலையாக வரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் உள்ளூர் பாலை மக்கள் வாங்குவதற்கு முயற்சிக்கவேண்டும். இறக்குமதி செய்யப்படுகின்ற பால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது அதேபோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படுகின்றது. எனவே எமது மக்கள் உள்ளூர் பாலினை பயன்படுத்தினால் சிறந்தது.
அதேபோல முக்கியமாக எமது தானிய வகைகளைப் பொறுத்தவரை உளுந்து பயறு அரிசி போன்ற வகைகளும் வட பகுதியில் விளைவிக்கப்படுகின்றது ஓரளவு இப்போது அதனுடைய விளைச்சலும் அதிகரித்து காணப்படுகின்றது.ஆகையால் மக்கள் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் எனவே எதிர்காலத்தில் ஒரு இடரினை சந்திக்க வேண்டி வரலாம்.
ஆகையால் பொதுமக்களைப் பொறுத்தவரை வீட்டுத்தோட்டம் மூலம் எமக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதில் ஆர்வமாக இருக்க வேண்டும். எம்மைப்பொறுத்தவரை அரிசி,கடலுணவு,தேங்காய்,பால் இப்படியான பல பொருட்கள் வட பகுதியில் கையிருப்பில் உள்ளது.அதேபோல தானிய வகைகளும் உள்ளது. ஆகையால் வட பகுதியில் பெரிய பஞ்சம் ஏற்படும் என்று சொல்ல முடியாது ஆனால் விலைகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.அதேவேளையில் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற பொருட்கள் இனிமேல் குறைந்து செல்லும் என்பதே எமது கருத்தாகும் என்றார்.