கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 8 பேர் காயமடைந்துள்ளதுடன், ஊடகவியலாளர்கள்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோட்டாகோகமவில் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் – இரண்டு ஊடகவியலாளர்கள் கைது!
கோட்டாகோகமவில் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். இரண்டு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளரான சதுரங்க பிரதீப் குமார, கசுன் குமாரகே ஆகியோர் கிராஸ்கட் எனும் பகுதியில் இடைமறிக்கப்பட்டு விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் எந்தவொரு காவல் நிலையத்திலும் ஒப்படைக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கோட்டாகோகம போராட்டக்களத்தில் ஊடகவியலாளர் றசிக குணவர்தன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது தலையில் இரும்பு கம்பியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர்மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுள் வந்தது!
கோட்டா கோ கம போராட்டக்களம் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது போராட்டக்களத்திலிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட 10 போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், காலிமுகத்திடல் பகுதிக்கு சிவில் உடையணிந்த இராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் மற்றும் விமானப்படையை சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினருடன் மோத வேண்டாம், இல்லையெனில் அவசரச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் போது பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம் கோட்டா கோ கம பகுதியை சுற்றியுள்ள அனைத்து பாதைகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோட்டா கோ கம பகுதியில் கூடாரங்கள் மற்றும் தடயங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது