மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடும் வெளியை மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய வருடாந்த திருவிழாக் காலம் வழங்கி வருகின்றது. இக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் அதிகளவான மக்கள் பல்வேறு நோக்கங்களுடன் இங்கு ஒன்றிணைகின்றார்கள். சமயக் கடமை, ஆன்மீகம், அன்னதானம், வணிகம், கொள்வனவு, விளம்பரம், சுற்றுலா, பொழுது போக்கு, கலையாற்றுகை என இந்நோக்கங்கள் பலவாறாகக் காணப்படுகின்றன.
மட்டக்களப்பின் பேச்சு வழக்கில் மக்கள் அதிகளவில் ஒன்றிணைவதைச் சுட்டிக்காட்ட ‘தீர்த்தக்கரை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் தீர்த்தக்கரை என்பது மாமாங்கத் திருவிழாக் காலத்துச் சூழலையே கருத்திற் கொண்டதாக இருந்து வருகின்றது.
இத்தீர்த்தக்கரையில் உள்ளுர்க் கலைகளின் ஆற்றுகைகளுக்கான வெளியை எண்ணக்கரு ரீதியாக உருவாக்கி அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் மரபு கடந்த ஒரு தசாப்தகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2011 ஆம் ஆண்டிலிருந்து இச்செயற்பாடு ஆரம்பித்து நடத்தப்பட்டு வருகின்றது. குறித்த காலப்பகுதியில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் தலைவராகக் கடமையாற்றிய கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் எண்ணக்கரு விளக்கத்துடன் நுண்கலைத்துறையின் விரிவுரையாளர்கள், மாணவர்கள், மற்றும் உள்ளுர்க் கலைஞர்கள் ஆகியவர்களின் பங்குபற்றுகையுடனும், மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்குமார் சபையின் முழுமையான ஆதரவுடனும் இச்செயற்பாடு தொடங்கப்பட்டுக் கடந்த ஒரு தசாப்த காலமாக கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் பாரம்பரிய அரங்க விழாவாக மாமாங்கத் தீர்த்தக்கரைத் திருவிழாவில் தொடரப்பட்டு வந்தது. துரதிஸ்டவசமாகக் கடந்த இரண்டு வருடங்கள் கொரொனாத் தொற்றுக் காரணமாக தீர்த்தக்கரைத் திருவிழா வழமைபோன்று நடைபெறாத நிலையில் இந்தக் கலை ஆற்றுகை வெளியும் இயங்க முடியாது போனது.
இவ்வருடம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சவால்களை எதிர்கொண்டு தீர்த்தக்கரைத் திருவிழா களை கட்டமுனைகின்றது.
இந்நிலையில் வழமைபோல் நுண்கலைத்துறை பாரம்பரிய அரங்க விழாவை ஒழுங்கமைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள பின்னணியில். வழமையான கலையாக்க வெளியின் தேவையினையும் அவசியத்தினையும் கலையார்வலர்களும், ஆலய வண்ணக்குமார் சபையினரும் வலியுறுத்திய பின்புலத்தில் மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு நண்பர்களின் ஒழுங்கமைப்பில் வழமைபோன்று பாரம்பரிய ஆற்றுகை வெளி உருவாக்கப்பட்டு அதில் பல்வேறு ஆற்றுகைகள் நிகழ்த்தப்பட்டதுடன் பல்லாயிரம் மக்கள் இவ்வாற்றுகைகளைப் பார்த்து இன்பமடைந்தனர்.
கடந்த 22.07.2022 ஆந் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் தொடக்கம் 26.07.2022 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வரை இந்த ஆற்றுகைகள் நடைபெற்றிருந்தன. இதில் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் கலாசாரக் குழுவின் ‘எழுத்தாணி’ நாடக ஆற்றுகை, மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவின் பாடல்களின் அளிக்கை, ‘நன்னிலம்’ காட்சியும் உரையாடலும் எனும் கலையாக்கங்கள் பகல் வேளைகளிலும், கன்னன்குடா கண்ணகி முத்தமிழ் மன்றத்தின் ‘பரசுராமன்’ வடமோடிக் கூத்து, மட்ஃமகாஜன கல்லூரி மாணவர்களின் ‘அன்னப்பட்சி’ மீளுருவாக்கப்பட்ட வடமோடி சிறுவர் கூத்து, குறிஞ்சாமுனை சிவசக்தி கலைக்கலா மன்றத்தின் ‘அமிர்தசம்போகவல்லி’ வடமோடிக்கூத்து, பருத்திச்சேனை கலைமகள் கலைக்கழகத்தின் ‘அசுவத்தாமன் யுத்தம்’ வடமோடிக் கூத்து என்பன இரவு வேளைகளிலும் நடைபெற்றன.
இக்கலை நிகழ்ச்சிகளை தீர்த்தக்கரைத் திருவிழாவிற்கு வருகை தந்த பலநூறு மனிதர்களும் பார்த்து மகிழ்ந்து சென்றனர். கூத்துப் பார்ப்பதற்கு என்றே சிலர் தீர்த்தக் கரைக்கு வந்திருந்ததனையும் அறிய முடிந்தது.
‘எழுத்தாணி’ நாடகமும் அதன் ஆற்றுகையும்.
இம்முறை தீர்த்தக் கரையின் கலையாக்க வெளியில் அதிக தடவைகள் ஆற்றுகை செய்யப்பட்டதாக ‘எழுத்தாணி’ நாடகம் அமைந்திருந்தது. எழுத்தாணி எனும் கீரையின் பெயரில் அமைந்துள்ள இந்நாடகமானது, மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் கலாசாரக் குழுவினருடன் கலாநிதி சி.ஜெயசங்கர் இலகுபடுத்துனராகப் பங்குபற்றிய களப்பயிற்சிகளுடாக உருவாக்கம் பெற்ற ஓர் ஆக்கமாகும்.
இந்நாடகம் நமது சூழலில் விளையும் இயற்கையான பல்வேறு கீரை வகைகளை இனங்காட்டி அவற்றை விதம் விதமாக உணவாக்கி உண்ணும் உள்ளுர் உணவு தயாரிப்பு முறைமைகளைப் பேசு பொருளாகக் கொண்ட கலையாக்கமாகக் காணப்பட்டது. சிறுவர்களைக் கவரும் உள்ளுர் விளையாட்டுக்களையும் உள்ளுர் இசை வடிவங்களையும் ஆற்றுகை உத்திகளாகக் கொண்டு ஆக்கப்பட்ட இந்நாடகமானது தீர்த்தக்கரைக்கு வந்திருந்த பலநூறு மனிதர்கள் மத்தியில் பல்வேறு தடவைகள் ஆற்றுகை செய்யப்பட்டதால் இன்றைய பொருளாதார நெருக்கடிச் சூழலில் உள்ளுர் வளங்களைப் பாதுகாத்து பராமரித்து ஆரோக்கியமாகவும் சுயசார்பாகவும் வாழ்வதற்குமான சிந்தனைகளை மேலும் விருத்தியாக்கி நடைமுறைப்ப்படுத்தும் ஆக்கபூர்வமான செயல்வாத நடவடிக்கைகளுக்கு மேலும் வலுச்சேர்த்திருந்தன.
இந்நாடகத்தின் போதும் நாடகத்தின் பின்னரும் பார்வையிடும் மக்களின் கருத்துக்களை இயல்பாகவே வெளிக்கொண்டு வருவதற்கான உத்திகள் பிரயோகிக்கப்பட்டதால் பலரும் தத்தமது கருத்துக்களை வெளிப்படுத்தி ஆர்வத்துடன் நாடகத்தினைப் பார்வையிட்டமையினை அவதானிக்க முடிந்தது.
‘நன்னிலம்’ செயல்வாதத்தின் காட்சியும் உரையாடலும்
திருமதி சிந்துஉஸா விஜேந்திரன் எனும் செயற்பாட்டாளரின் இடைவிடாத முயற்சிகளுடாக இயற்கைச் சூழலிலிருந்து மறைந்து போகும் மரபணுமாற்றங்களுக்கு உட்படுத்தப்படாத உள்ளுர்த் தாவர இனங்களை மீளக் கொண்டு வரும் செயல்வாதம் ‘நன்னிலம்’ எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முற்றிலும் வணிக நோக்கமின்றி சூழலியல் அறத்துடன் இயற்கைச் சூழலைப் பாதுகாத்தலுக்கான நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் இவரால் மீள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் தாவரங்களைக் காட்சிப்படுத்தி அதனுடன் தொடர்புடைய பாடல்களைப் பாடி மக்களுடன் உரையாடல்களை முன்னெடுக்கும் நடவடிக்கை தீர்த்தக்கரைத் திருவிழாவின் கலையாக்க வெளியில் இம்முறை சிறப்பாக நடந்தேறியிருந்தது. உள்ளுர்த் தாவர இனங்களைப் பாதுகாக்கும் நோக்கங்கொண்ட பலரும் இதில் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தார்கள். உதாரணமாக சிலர் தமது சூழலில் அரிதாகவுள்ள தாவர வகைகளை அதிகரிக்க உதவுமுகமாக அத்தகைய தாவரங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து இதனைச்செய்யும் செயற்பாட்டாளரிடம் கையளித்திருந்தமையினைக் கூறலாம்.
‘பரசுராமர்’ வடமோடிக் கூத்து
23.07.2022 ஆந் திகதி இரவு மட்டக்களப்பு கன்னன்குடா கண்ணகி முத்தமிழ் மன்றம் வழங்கிய ‘பரசுராமர்’ வடமோடிக் கூத்து இடம்பெற்றிருந்தது. இக்கூத்தினை கூத்து இரசிகர்களும் தீர்த்தக்கரைக்கு வந்த இளந்தலைமுறையினைச் சேர்ந்த பலரும் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்திருந்தனர். நள்ளிரவு தாண்டி அதிகாலை வரைக்கும் தீர்த்தக்கரைச் சூழலில் நிலவிய நிசப்தத்தைக் கலைத்தவாறு மத்தள இசையும், கூத்துப் பாடல்களும் ஒலித்துக்கொண்டிருந்தன. இக்கூத்தின் ஆடல்களும் பாடல்களும் செழுமை மிகுந்த கன்னன்குடா கூத்துப் பாரம்பரியத்தின் தன்மையினை வெளிக்காட்டுவதாகக் காணப்பட்டிருந்தன.
‘அன்னப்பட்சி’ சிறுவர் கூத்தின் ஆற்றுகை
இம்முறை மாமாங்கத் தீர்த்தக்கரைத் திருவிழாவில் பலரையும் கவர்ந்த ஆற்றுகையாக மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி தேசிய பெண்கள் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுகையில் உருவாக்கப்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டிருந்த ‘அன்னப்பட்சி’ மீளுருவாக்கப்பட்ட வடமோடி சிறுவர் கூத்தின் ஆற்றுகை அமைந்திருந்தது. நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கற்கும் மாணவிகள் இக்கூத்தில் பாத்திரமேற்று ஆடியிருந்தார்கள். 24.07.2022 ஆந் திகதி பிற்பகலிலும், இரவிலும் இரு அளிக்கைகளாக இக்கூத்து இடம்பெற்றிருந்தது. ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் கால அளவுடையதாக நடைபெற்றிருந்த இக்கூத்தினை தீர்த்தக்கரைக்கு வந்திருந்த அதிகளவான மக்கள் பார்த்து மகிழ்வடைந்ததுடன் கூத்தில் பங்குபற்றிய மாணவர்களையும் மனதாரப் பாராட்டிச் சென்றிருந்தார்கள்.
‘அமிர்தசம்போகவல்லி’ வடமோடிக்கூத்து
குறிஞ்சாமுனை சிவசக்தி கலைக்கலா மன்றத்தின் ‘அமிர்தசம்போகவல்லி’ வடமோடிக்கூத்து 24.07.2022 ஆந் திகதி இரவு இடம்பெற்றிருந்தது. இக்கூத்தின் ஆற்றுகையினைப் பார்ப்பதற்காக கணிசமான கூத்து இரசிகர்கள் தயார் நிலையுடன் முன்கூட்டியே வந்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது. மூத்த கூத்தர்களுடன் இளைய தலைமுறைகளைச் சேர்ந்த கூத்தர்களும் இதில் அதிகளவில் பங்குபற்றியிருந்தனர்.
‘அசுவத்தாமன் யுத்தம்’ வடமோடிக் கூத்து
26.07.2022 ஆந் திகதி இரவு பருத்திச்சேனை கலைமகள் கலைக்கழகம் வழங்கிய ‘அசுவத்தாமன் யுத்தம்’ எனும் வடமோடிக் கூத்து நடைபெற்றிருந்தது. அதிகளவான மக்கள் இதனைப் பார்த்து மகிழ்ந்திருந்தனர். இளந்தலைமுறையினைச் சேர்ந்த கலைஞர்கள் பலர் இதில் பங்குபற்றியிருந்தார்கள். தொடர்ச்சியாகக் கூத்து ஆற்றுகைகளில் பங்குபற்றிய கலைஞர்கள் மாமாங்கத் தீர்த்தக் கரையில் கூத்தினை ஆடவேண்டும் எனும் ஆவலுடன் வந்து இக்கூத்தினை ஆடியிருந்தார்கள்.
இவ்வாறாக இம்முறை மாமாங்கத் தீர்த்தக்கரைத் திருவிழாவில் பல்வேறு நெருக்கடியான நிலைமைகளுக்கு மத்தியிலும் கலையாக்க வெளி திறக்கப்பட்டு அதில் சமகாலச் சவால்களை எதிர்கொண்டு வாழ்வதற்கான உத்வேகத்தை ஊட்டத்தகுந்த கலையாக்கங்கள் பல நடந்தேறியிருந்தன. இச்செயற்பாட்டினை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க ஒத்துழைத்த ஆலய வண்ணக்குமார், நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள், பங்குபற்றிய கலைஞர்கள், ஆதரவு வழங்கிய கலை ஆர்வலர்கள், என அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கும் கௌரவத்திற்கும் உரியவர்களாகின்றனர்.
து.கௌரீஸ்வரன்.