பேராசியர் ராஜ் ராஜேஸ்வரன் மேற்கு அவுஸ்திரேலிய தலைநகரான பேர்த்தில் நேற்றைய தினம் புதன்கிழமை காலமானார்.
அவுஸ்திரேலிய தமிழர் பேரவையை (ATC) ஆரம்பித்த இவர் அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கும் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கும் தன்னலமற்ற மற்றும் தாராளமான பங்களிப்பாளராகவும் இருந்தார்.
யாழ்ப்பாணம் உரும்பிராயை பிறப்பிடமாக கொண்ட அமரர் ராஜேஸ்வரன் ஸ்கொட்லாந்தின் எடின்பர்க்கில் படித்து சென்ட்ரி பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரானார்.
மேற்கு அவுஸ்திரேலிய கேர்டின்(Curtin) பல்கலைக்கழகத்தில் பெட்ரோலிய பொறியியல் துறையை ஆரம்பித்து வைத்த இவர் மேற்கு அவுஸ்திரேலிய பெட்ரோலிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராகவும் இருந்தார்.
2004 ஆம் ஆண்டில், கலாநிதி ராஜேஸ்வரன் ஸ்கொட்லாந்து இன்டர்நேஷனல் வங்கியால் அவுஸ்திரேலியா மற்றும் ஆசியாவிற்கான தொழில்நுட்ப இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார்.
தமிழ் ஈழப் பொருளாதார ஆலோசனைக் கூடம் (TECH- Australia) அவுஸ்திரேலியாவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றிய அவர், தமிழர் தாயகத்தில் சவாலான பொருளாதாரத் தடைக் காலத்தில் நிதி ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் விடுதலைப் போராட்டத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கினார்.
ஈழத்தமிழ் சமூகத்திற்கு சர்வதேசரீதியில் பெருமைசேர்த்த அமரர் ராஜேஸ்வரனின் மறைவு பேரிழப்பாகும்