சிக்கலான அரசியல் அவலநிலையில் (Complex Political Emergency) ஆபிரிக்கக்கண்ட மாலிநாட்டிற்கும், ஆசியக்கண்ட இலங்கை நாட்டிற்கும் இடையிலான ஒரு ஒப்புவமையாக அமையும் சமூக உள அரசியல் பொருளியல் பாங்குகள்!
இலங்கையும் மாலிதேசமும் 19ம் நூற்றாண்டுக்கு முன்னர் சுதேச அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பின் ஐரோப்பிய காலனித்துவத்தால் தமது சுயாதிக்கத்தை இழந்தது. உலக அரசியல் ஒழுங்கிற்கு ஏற்ப இரு நாடுகளிலும் சிறுபான்மையினர் ஒதுக்கப்பட்டு, பாரிய இனஅழிப்புக்கள் நிகழ்ந்து உள்ளன. மாலியல் இனங்களுக்கு இடையிலான வன்முறைகள், 1963ம் ஆண்டு, 1990ம் ஆண்டு, 2002ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தன. இலங்கையிலும் 1958, 1977, 1983 இல் நிகழ்ந்துள்ளன. இவற்றுக்கு மேலாக 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடப்பெயர்வு, 2008 – 2009 வன்னி அழிவு என்பன பாரிய மானிடநேயத்தில் செயற்றிறன் இன்மையினை எடுத்துக்காட்டி உள்ளன.
மாலிதேசம் ஆபிரிக்கண்டத்தின் போக்குவரவு பொருளாதார மையமாக அமைவது போல் இலங்கையும் தென்கிழக்காசியாவின் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது. மாலிதேசத்தில் சிறுபான்மையினர் எவ்வாறு அழிந்தனரோ அவ்வாறே இலங்கையிலும் சிறுபான்மைத் தமிழர்கள் அழிக்கப்பட்டனர்.
மாலிதேசத்தில் ஏற்பட்ட சிக்கலான அரசியல் இராணுச்சூழலை எதிர்கொள்ள பிரான்ஸ் நாட்டுப் படைகள் 2013 இலும் அதனைத் தொடர்ந்து ஐ. நா அமைதிப்படைகளும் செயற்பட்டன. இப்படைகளாலும் பாரிய மனித உரிமை மீறல்களும், பாலியல் கொடூரங்களும் நிகழ்ந்துள்ளன. அவ்வாறானவை இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கை இராணுவம், 1987 – 1990களில் இந்திய அமைதிப்படையும், 2005 – 2009இல் முகவரி இல்லாத பல்வேறு இராணுவங்களும் செயற்பட்டு பாரிய மனித அவலங்களையும், பாலியில் கொடூரங்களையும் ஏற்படுத்தின. மாலியின் பிரதான ஏற்றுமதிப் பொருளான பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இலங்கையலும் விவசாய உற்பத்திகள், தேயிலை உற்பத்தி என்பன பாதிக்கப்படடுள்ளன. மாலியில் ஆட்சியாளர்கள் அநீதியான செயற்பாடுகள், ஊழல்கள் என்பனவற்றை மேற்கொண்டனர். அதற்கு நிகராகவே இலங்கையிலும் நிகழ்ந்துள்ளது.
மாலியில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி என்பன ஆலோசனைகளை வழங்கின. மின்சாரம் வழங்கல் தனியார்மயமாக்கப்பட்டது. நீர் வழங்கல் தனியார் மயமாக்கப்பட்டது. இராணுவ உயர் அதிகாரிகள் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை நிறுவினர். இலங்கையிலும் அரச நிறுவனங்கள் பலவும் தனியார் மயப்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வறுமைமட்டம் அதிகரித்துள்ளது. அதாவது பஞ்சம் பரவி உள்ளது. சிறுவர்களின் போசணை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் இலவச மருத்துவசேவை, இலவசக் கல்விச் சேவை சடுதியாக செயலிழக்க நேரிடலாம். இதனைத் தவிர்க்க ஆக்கபூர்வமான உத்திகளை நாம் கையாள வேண்டும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் முதலில் மேற்கொள்ள வேண்டிய மாற்றம் இராணுவச் செலவீனங்களை 25மூ ஆக குறைத்தல் வேண்டும். இலங்கை இராணுவத்தில் தொண்டர் படையணியினை முற்றாக நிறுத்தலாம். ஏனெனில் யுத்தம் போன்ற அவசர சூழலிலேயே இராணுவ ஆளணி அவசியம். தற்போதைய தகவல் தொழில்நுட்பயுகத்தில் 100,000 இராணுவம் செய்யும் கடமையினை 1000 இராணுவம் செய்ய முடியும். மேலும் வடக்கு கிழக்கில் பொருளாதார வளமுள்ள இடங்களை பாதுகாப்பு என்ற பெயரில் கையகப்படுத்தி வைத்துள்ளமையும் தவறாகும்.
இலங்கை போன்ற சுமார் 21 மில்லியன் சனத்தொகை கொண்ட மாலி தேசம் எவ்வாறு வளமான எதிர்காலம் இல்லாது அழிவுறுகின்றதோ அவ்வாறான நிலைமையே இலங்கையில் ஏற்படுகின்றது.
கெடுவான் கேடு நினைப்பான் என்பதுபோல் இலங்கை அரசியல் வாதிகளிடையேயோ, இலங்கை பாராளுமன்றப் பிரதிகளிடையேயோ சமூகப் பொருளாதாரம் தொடர்பான ஆக்கபூர்வமான அணுகுமுறைகள் இல்லை. இலங்கையில் காலம் காலமாகப் புரையோடியுள்ள அரசியல் பிணக்குகளைத் தீர்ப்பதற்குக்கூட ஆணித்தரமான அணுகுமுறைகள் இல்லை.
இந்நிலையில் மாறிவரும் புதிய உலக ஒழுங்கில் பாரதப்பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் செம்மையான அணுகுமுறைகளை நாம் உற்றுநோக்கல் வேண்டும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் நிழலே தற்போது எம்மை ஆழ்பட்டினிக்கு இட்டுச் செல்லாது காப்பாற்றுகின்றது.
இந்நிலையில் வடபகுதித் தமிழ்மக்கள் விவசாயம், சிறுகைத்தொழில், மீன்பிடி, நடுத்தரவர்க்கம், மருத்துவம் என்பவற்றில் தமிழகம் சார்ந்த முதலீடுகள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். இன்று இலங்கையில் ஜனநாயகம், பொருளாதாரம் இராஜதந்திரம் அற்ற போலி அரசே செயற்படுகின்றது. (Pசழஒல புழஎநசnஅநவெ) இவ்வரசின் தீர்மானங்களின் சட்டபூர்வதன்மை, அதன் ஆதிக்க எல்லை என்பன காலத்துடன் இல்லாது போகும் சூழலே உள்ளது. இத்தகைய சூழலில் எமது மக்கள் புலம்பெயர்ந்து உலகெங்கும் அவலப்படுதல் ஆகாது. நாம் உறுதியுடன் எம்மண்ணில் நின்று நிகர பொருளாதார மேன்னிலையையுடைய சமூக சக்தியாகச் செயற்படுவோம். நாம் இச்சந்தர்ப்பத்தில ஓர் விவசாயிக்குப் பின்னால் செல்லலாம். ஆனால் ஓர் அரசியல்வாதிக்குப் பின்னால் செல்லக்கூடாது.; மாலிதேசத்தில் நிகழ்கின்ற அரசியல் பொருளாதார சமூகச் சிக்கல்நிலையில் இருந்து எமக்கு சில பாடங்கள் தெட்டத் தெளிவாகப் புலப்படுகின்றன.
ஆபிரிக்கக்கண்டத்தில் உறுதியாக இருந்த நாடுகளான லிபியா, லைபீரியா, எகிப்து போன்றன திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்டன. அதேபோல் ஓர் நிலைமையினை ஆசியாக்கண்டத்தில் ஏற்படாது இருப்பதனை தற்போதைய ரஸ்சிய உக்கிரெயின் யுத்தத்தில் இந்தியாவின் அணுகுமுறை காப்பாற்றிவிட்டது. இந்நிலையில் இந்திய அரசின் இராஜதந்திர, பொருளாதார ஒத்துழைப்புக்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள உதவுவதுடன் எமது அரசியல் பிரச்சினைகளுக்கும் நிரந்தர முற்றுப்புள்ளியினை வைக்கும். இந்திய அரசும் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்ற பெயரில் இலங்கையில் தமிழர் தாயகத்தில் நிகழும் இராணுவ ஆதிக்கத்திற்கும், பௌத்தமயமாக்கலுக்கும் மறைமுகமாகத் துணைபோதல் தவறானதாகும்.
அமைதியினை நேசிக்கக் கற்றுக் கொள்வோம். வன்முறை வழிகளை நாடோம். அடக்குமுறைகள் மூலம் நிகழும் பொருளாதாரச் சுரண்டல்களை இல்லாது செய்வோம்.
மருத்துவர் சி. யமுனாநந்தா