Home இந்தியா பிபிசி ஆவணப்பட திரையிடல்: ஜே.என்.யூ. வளாகத்தில் மின் தடை, கல் வீச்சு!

பிபிசி ஆவணப்பட திரையிடல்: ஜே.என்.யூ. வளாகத்தில் மின் தடை, கல் வீச்சு!

by admin

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ (India: The Modi question) ஆவணப்பட திரையிடலின் போது மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

ஆவணப்படத்தைப் பார்த்த மாணவர்கள் கல் வீச்சுக்குப் பிறகு ஜே.என்.யூ. வாயில் வரை பேரணியாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர். மாணவர்கள் யார்? கற்களை வீசியது யார் என்பது பற்றி அதிகம் தெரியவில்லை. கல்வீச்சில் சில மாணவர்கள் காயமடைந்தனர். சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சில மாணவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

நர்மதா மாணவர் விடுதியின் முன்புள்ள ஜே.என்.யூ. மாணவர் சங்க அலுவலகத்தில் இரவு 9 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படுதாக இருந்தது. இதுகுறித்து ஒரு நாள் முன்னதாகவே ஜே.என்.யூ. மாணவர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மாணவர் சங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆவணப்படத்தை திரையிட அனுமதி பெறப்படவில்லை, ஆகவே அந்நிகழ்ச்சியை மாணவர்கள் ரத்து செய்ய வேண்டும் என்று ஜே.என்.யூ. நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனை மீறும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

ஆவணப்பட திரையீட்டிற்கு முன்பாக மின்தடை

ஆவணப்படம் திரையிடப்படவிருந்த இடத்தில் இரவு 8 மணி முதலே மாணவர்கள் கூடத் தொடங்கி விட்டனர். ஆனால், ஆவணப்பட திரையீட்டிற்கு முன்பாக இரவு 8.30 மணியளவில் ஒட்டுமொத்த வளாகத்திலும் மின்தடை ஏற்பட்டது.

அங்கே கூடியிருந்த மாணவர்கள், நிர்வாகமே மின்சாரத்தை துண்டித்துவிட்டதாக குற்றம்சாட்டினர். ஆவணப்பட திரையீட்டிற்கு சற்று முன்னதாக மின் தடை ஏற்பட்டது ஏன் என்பதற்கு ஜே.என்.யூ. நிர்வாகம் சார்பில் எந்தவொரு பதிலும் இல்லை.

ஆவணப்படத்தை பார்க்க கூடியிருந்த மாணவர்களிடையே, செல்போன் வெளிச்சத்தில் இரவு 9.10 மணியளவில் ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் அய்ஷே கோஷ் உரையாற்றினார்.

“உண்மை வெளியே வந்துவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். நீங்கள் மின்சாரத்தை தடை செய்யலாம், எங்களிடம் இருந்து திரையை, லப்டொப்பை பறித்துக் கொள்ளலாம், ஆனால் எங்களது கண்களையும், உத்வேகத்தையும் உங்களால் பறிக்கவே முடியாது,” என்று அவர் கூறினார்.

பிபிசியிடம் பேசிய அவர், “பொதுவெளியில் ஆவணப்படம் திரையீட்டை வேண்டுமானால் மோதி அரசு தடுக்கலாம். ஆனால், பொதுமக்கள் அதனை பார்ப்பதை தடுக்க முடியாது” என்றார்.

பி.பி.சி.யின் “இந்தியா: தி மோதி க்வெஸ்டின்” ஆவணப்படத்தை பகிரும் இணைய இணைப்புகளை நிக்குமாறு யூடியூப் மற்றும் ட்விட்டருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

இருளில் மாணவர்கள் மீது கல்வீச்சு

மின்தடை காரணமாக, பெரிய திரையில் ஆவணப்படத்தை திரையிட முடியவில்லை. ஆனால், அங்கே கூடியிருந்த மாணவர்களுக்கு கியூஆர் குறியீடு அச்சிடப்பட்ட ஏ4 பேப்பர்களை மாணவர்கள் சங்கத்தினர் விநியோகிக்கத் தொடங்கினர். அதன் உதவியுடன், மாணவர்கள் அவர்களது செல்போன் வாயிலாக ஆவணப்படத்தை பார்க்க முடிந்தது.

மாணவர் சங்க அலுவலகத்திற்கு வெளியே தரை விரிப்பில் அமர்ந்திருந்த மாணவர்கள் ஆவணப்படத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால், அது சரிவர வேலை செய்யாததால், சில மாணவர்கள் லேப்டாப் மற்றும் ஒலிபெருக்கிகளை கொண்டு வந்தனர்.

அந்நேரத்தில், மாணவர் சங்க அலுவலகத்திற்கு வெளியே சுமார் 300 மாணவர்கள் கூடியிருந்ததாக தோராய மதிப்பீடுகள் கூறுகின்றன. சாதாரண உடையணிந்த டெல்லி காவல்துறை அதிகாரிகளும் அவர்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர்.

ஆவணப்பட திரையீட்டிற்கு திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் மாலை 7 மணிக்கே பாதுகாப்பு அதிகாரிகள் உலவிக் கொண்டிருந்தனர். சிலரது கைகளில் டெல்லி காவல்துறை தொப்பி இருந்ததை தெளிவாகக் காண முடிந்தது.

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

இரவு 9.40 மணியளவில் மாணவர் சங்க அலுவலகத்திற்கு வெளியே, மாணவர்கள் சிறுசிறு குழுக்களாக சேர்ந்து பிபிசியின் “இந்தியா: தி மோதி க்வெஸ்டின்” ஆவணப்படத்தை லப்டொப்பில் பார்க்கத் தொடங்கினர்.

மாணவர்கள் 6-7 குழுக்களாக சேர்ந்து ஆவணப்படத்தை பார்க்கத் தொடங்கினர். சிலர் லப்டொப்பை தரையில் வைத்திருந்தனர். லேப்டாப்பை சற்று உயரத்தில் வைத்திருக்க சிலர் அங்கிருந்த இருசக்கர வாகனம் மற்றும் நாற்காலிகளை பயன்படுத்தினர். சில மாணவர்கள் லப்டொப்புடன் பெரிய ஒலிபெருக்கிகளையும் வைத்திருந்தனர்.

இரவு 10.20 மணியளவில், ஆவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கற்கள் விழத் தொடங்கின. அதன் அருகே அமைந்துள்ள டெஃப்லாஸ் உணவகத்தில் இருந்து அந்த கற்கள் வீசப்பட்டன.

கல் மட்டுமல்ல, செங்கற்களும் கூட வீசப்பட்டன. கல்வீச்சு தொடங்கியதுமே ஆவணப்படம் பார்ப்பதை பாதியில் அப்படியே நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு மாணவர்கள் ஓட முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது.

கல்வீச்சு தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் மாணவர் சங்க அலுவலகத்திற்கு வெளியே மாணவர்கள் கூடியிருந்த இடம் காலியாகிவிட்டது. ஆவணப்பட திரையிடலுக்காக அங்கே கூடிய மாணவர்கள் ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயிலுக்கு ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

ஜே.என்.யூ. பிரதான வாயிலில் மாணவர்கள் மீது மீண்டும் கல்வீச்சு

ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயில் மாணவர் சங்க அலுவலகத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருக்கிறது. இரவு 11 மணியளவில் மாணவர்கள் கங்கா உணவகத்தை கடந்து பிரதான நுழைவு வாயிலை அடைய முற்படுகையில், அங்கேயும் கல்வீச்சு மீண்டும் தொடங்கிவிட்டது.

கங்கா உணவகம் பக்கம் இருந்து சுமார் 20-30 மாணவர்கள் கொண்ட குழு கற்களை வீசிக் கொண்டிருந்தது. மற்ற மாணவர்கள் பிடிக்க முயன்ற போது புதர்களுக்குள் சென்று அவர்கள் ஒளிந்து கொண்டனர்.

பிபிசி இந்தியிடம் பேசிய ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயிலில் இருந்த மாணவர் பிரவீன், “ஷூ அணிந்த காலால் அவர்கள் எட்டி உதைத்தார்கள். என்னையும் அவர்கள் உதைத்தனர். ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். நீ போய்க் கொண்டே இரு என்று அவர்கள் கூறினர்.” என்றார்.

மற்றொரு ஜே.என்.யூ. மாணவர் பிபிசியிடம் பேசுகையில், “நான் விடுதிக்குச் சென்று கொண்டிருந்தேன். 5-6 பேர் சேர்ந்து ஒரு பையனை அடித்துக் கொண்டிருந்தனர். அங்கே காவலாளிகள் நின்று கொண்டிருந்தார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் என்று அவரிடம் கூறினேன். ஒருவன் என்னிடம் ஓடி வந்தான். என் அருகில் வந்ததும் என் முகத்தில் குத்தினான்” என்று தெரிவித்தார்.

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

கற்களை வீசியது யார்?

ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயில் அருகே 2 இல்லது 3 முறை கல்வீச்சு நிகழ்ந்தது. கற்களை வீசிய கும்பல் முகமூடி மற்றும் துணிகளால் முகத்தை முடியிருந்தது.

அவர்களை கடந்து சென்ற மாணவர்களால், ‘செல்போன் டார்ச் லைட்களை ஒளிரவிட வேண்டாம்’ என்று குரலை தெளிவாக கேட்க முடிந்தது.

இந்த களேபரங்கள் நடந்த போது ஜே.என்.யூ. காவலாளிகள் அங்கே நின்றிருந்தாலும், ஒருவர் கூட எதுவும் செய்யவில்லை. சில நேரங்களில் காவலாளிகள் ஜே.என்.யூ. வளாகத்தில் இருந்து வெளியேறினர்.

ஜே.என்.யூ. வளாகத்திற்கு வெளியே பல வாகனங்கள் நின்றிருந்த டெல்லி காவல்துறையினரும் மவுனமாகவே இருந்தனர்.

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயிலில் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அங்கிருந்த ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் அய்ஷே கோஷ், “இப்போது மின்சாரத்தை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. ஆவணப்பட திரையீட்டை தடுத்து நிறுத்த கல்வீச்சை நாடலாம் என்னும் அளவுக்கு ஜே.என்.யூ. நிர்வாகம் தரம் தாழ்ந்து போகும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை,” என்று விமர்சித்தார்.

ஏ.பி.வி.பி. (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) சங்கத்தினர் கற்களை வீசியதை தான் பார்த்ததாக அவர் குற்றம்சாட்டினார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டை பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.

ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவரின் குற்றச்சாட்டுக்கு ஏ.பி.வி.பி.யிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை.

ஆவணப்படத்தை மீண்டும் திரையிடப் போவதாக ஜே.என்.யூ. மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. அதேவேளையில், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் சங்கமும் ஆவணப்படத்தை திரையிடப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த சுவரொட்டிகளையும் அந்த மாணவர் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.

மோடி ஆவணப்படம் - ஜே.என்.யூ.வில் களேபரம்

இரண்டு அத்தியாய ஆவணப்படம்

’இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ என்ற இரண்டு அத்தியாய ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியுள்ளது. இதன் முதல் அத்தியாயம் ஜனவரி 17 அன்று பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டது.

முதல் அத்தியாயத்தில் நரேந்திர மோதியின் ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை காட்டப்பட்டது. அதில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னேறி குஜராத்தின் முதலமைச்சர் பதவியை அடைவது வரை சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆவணப்படம் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசியால் பெறப்பட்ட, வெளியிடப்படாத அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது. நரேந்திர மோதி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த வன்முறையில் குறைந்தது 2000 பேர் இறந்தது குறித்து இந்த ஆவணப்படத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

2002ல் குஜராத்தில் வன்முறைச் சூழலை ஏற்படுத்தியதற்கு மோதிதான் நேரடிப் பொறுப்பு என்று பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அறிக்கை கூறுகிறது.

வன்முறைக்கு தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் மோதி தொடர்ந்து வன்மையாக மறுத்து வருகிறார். ஆனால் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகத்திற்காக அறிக்கை எழுதிய பிரிட்டிஷ் தூதாண்மை அதிகாரியிடம் பிபிசி பேசியபோது, அவர் தனது அறிக்கையை தொடர்ந்து பற்றி நிற்பதாகத் தெரிவித்தார்.

குஜராத் வன்முறையில் பிரதமர் மோதிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறிவிட்டது. செய்தியாளர் கூட்டத்தில் இந்த ஆவணப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி “எங்கள் கருத்துப்படி இது ஒரு துஷ்பிரச்சாரம் என்று நான் தெளிவுபடுத்துகிறேன். மக்கள் ஏற்கனவே நிராகரித்த ஒரு வகையான கதையை முன்வைப்பதே இதன் நோக்கம்,” என்று கூறினார்.

இந்த ஆவணப்படம் துஷ்பிரச்சாரம் மற்றும் காலனித்துவ மனப்பான்மையால் ஈர்க்கப்பட்டதாக அரசுடன் தொடர்புடைய பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம், முழுமையான ஆய்வுக்குப் பிறகு பிபிசியின் தலையங்க விதிமுறைகளின்படி இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டதாக பிபிசி கூறுகிறது.

முன்னதாக ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் கேரளாவில் உள்ள சில கல்வி வளாகங்களில் மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். மேலும், பல பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் ஆவணப்படத்தை திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

  • எழுதியவர்,அபிநவ் கோயல்
  • பதவி,பிபிசி செய்தியாளர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More