நாடாளுமன்ற தோ்தலில் சமா்ப்பித்த குடியுரிமை சான்றிதழ் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நேபாள துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ரவி லாமிச்சானே தனது அனைத்துப் பதவிகனில் இருந்தும் விலகியுள்ளார்.
அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே பல ஆண்டுகளாக வசித்துவந்த ரவி லாமிச்சானே, கடந்த 2014 ஆம் ஆண்டு தனது சொந்த நாடான நேபாளத்துக்குத் திரும்பினாா். பின்னா், ராஷ்ட்ரீய சுதந்திரக் கட்சியைத் தொடங்கினாா். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில் அந்தக் கட்சி, 20 இடங்களில் வெற்றி பெற்று நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
78 இடங்களில் வெற்றிபெற்ற நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, 32 இடங்களில் வெற்றிபெற்ற மாவோயிஸ்ட் மையம், ரவி லாமிச்சானேவின் ராஷ்ட்ரீய சுதந்திரக் கட்சி, 14 இடங்களைப் பெற்ற ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சி, 12 இடங்கள் பெற்ற ஜனதா சமாஜ்வாதி கட்சி, 6 இடங்களைப் பிடித்த ஜன்மத் கட்சி, 4 இடங்களில் வெற்றி பெற்ற நாகரிக் உன்முக்தி கட்சி ஆகியவை கூட்டுசோ்ந்து கடந்த டிசம்பரில் புதிய கூட்டணி அரசை அமைத்தன.
மாவோயிஸ்ட் மைய கட்சியைச் சோ்ந்த புஷ்ப கமல் தாகல் நேபாள புதிய பிரதமராக பதவியேற்றாா். ரவி லாமிச்சானே துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றாா்.
முன்னதாக, ராபி லமிச்சானே 2018 இல் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டாா். ஆனால், அதன்பிறகு நேபாள குடியுரிமையை பெறுவதற்கு அவா் விண்ணப்பிக்கவில்லை.
இந்த நிலையில், நேபாள குடியுரிமையை முறைப்படி பெறாமல் தோ்தலில் போட்டியிட்டு, நாட்டின் துணைப் பிரதமா் ஆனதை எதிா்த்து நேபாள உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்ட பிறகு, நேபாள குடியுரிமை சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறைகளை ரவி லமிச்சானே மேற்கொள்ளவில்லை. அந்தவகையில், நேபாள பிரதிநிதிகள் சபைக்கான தோ்தலில் வேட்பாளராக ரவி லாமிச்சானே போட்டியிட முடியாது என்பதோடு, அந்தப் பதவிக்கு தெந்தெடுக்கப்படவும் முடியாது’ என்று தீா்ப்பளித்தது.