மகாத்மா காந்தியின் எழுபத்தைந்தாவது நினைவு தினம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது. அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் அதிகாரபூர்வ வெளியீடான காந்தீயம் பத்திரிகை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனால் வெளியிடப்பட்டதுடன் முதல் பிரதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா பெற்றுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரக பிரதித் தூதர் ராம் மகேஷ், வவுனியா பல்கலைக்கழக வேந்தர் சு.மோகனதாஸ், யாழ் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், காந்தி சேவா சங்கத்தினர்,இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்