223
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று முடிந்த 106வது பொன் அணிகளின் சமரின் கிண்ணத்தை புனித பத்திரிசியார் கல்லூரி அணி சுவீகரித்துக் கொண்டது.
போட்டியின் ஆரம்ப நாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணக் கல்லூரி அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கி துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி 74.4 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
அதனை அடுத்து, களமிறங்கிய யாழ்ப்பாணக் கல்லூரி அணி நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 33 ஓட்டங்களை பெற்றிருந்தது.
239 ஓட்டங்கள் பின்னடைவில் தங்களுடைய இன்னிங்ஸை இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பித்த யாழ்ப்பாணக் கல்லூரி அணி வெறும் 70 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அதனால், 202 ஓட்டங்கள் பின்னடைவிலிருந்த யாழ்ப்பாணக் கல்லூரி அணி போலாவ் ஒன் முறையில் மீண்டும் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன் போது, யாழ்ப்பாணக் கல்லூரியால் 64.4 ஓவர்கள் நிறைவில் 179 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்த நிலையில், இன்னிங்ஸ் மற்றும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்திருந்த புனித பத்திரிசியார் கல்லூரி அணி, இம்முறை யாழ்ப்பாணக் கல்லூரியை அவர்களுடைய சொந்த மைதானத்தில் வீழ்த்தி கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது.
Spread the love