ஒன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்யும் ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், தமிழ்நாடு அரசு. மீண்டும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பியுள்ளது. குறித்த மசோதாவை இன்று மீண்டும் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த நிலையில் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 2022ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி, ‘ஒன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழ்நாட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை ஆளுநர், தமிழ்நாடு அரசிடம் கேட்டிருந்தாா். அதுகுறித்தும் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட்டது
இந்த நிலையில் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக ஒன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 8ம் திகதி அரசுக்கு திருப்பி அனுப்பிய ஆளுநர் . ஒன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9ம் திகதி நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் ஒன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதனால் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே ஒன்லைன் சூதாட்டங்களைத் தடைசெய்யும் ஒன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது