ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனா். போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மக்கள் அதிக சிரமங்களை எதிா்நோக்கியுள்ளனா்.
இந்நிலையில், 2022-ம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், அந்நாட்டில் வெடிக்காத குண்டுகளால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் அவற்றை எடுத்து விளையாடியபோதும், உலோகத் துண்டுகளை எடுத்து விற்பதற்காக சேகரித்தபோதும் இச்சம்பவம் நடந்துள்ளது என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கும் இதுபற்றிய போதிய விவரங்கள் தெரிவதில்லை என்பதறகால் நில கண்ணிவெடிகள், வெடிக்காத பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் அதுபோன்ற பிற ஆயுதங்களால், நாட்டில் குழந்தைகள் உள்பட பலர் சிக்கி உயிரிழந்து வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது