பயங்கரவாதத்தின் வரையறை நீண்ட காலமாக ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது என்பதனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரிவு 3 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவினால் நேற்று வியாழக்கிழமை (06) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்யவும் வரையறைக்குள் வரும் செயல்களை தெளிவுபடுத்தவும் சுருக்கவும் குறிப்பிட்ட திருத்தங்களை பரிந்துரைக்கவும் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் மௌனமாக்குவதற்கு பயங்கரவாதத்தின் பரந்த வரையறையை அரசாங்கம் பயன்படுத்த முடியும் என ஆணைக்குழு கருதுவதாகவும் பயங்கரவாதி என அழைக்கப்படுவார்கள் என்ற பயம் காரணமாக, பொது நலன் சார்ந்த விடயங்களில் பேசவோ அல்லது தங்கள் கருத்தை வெளிப்படுத்தவோ பலர் பயப்படுவார்கள் எனவும் இது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சட்டப்பூர்வ முரண்பாடுகள் மற்றும் உண்மையான பயங்கரவாதச் செயல்களை வேறுபடுத்திப் பார்ப்பதை இந்த சட்டமூலத்தில் உள்ள வரையறை கடினமாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.