208
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் காவல்துறை விசேட அதிரடி படையினர் டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு , அதன் சாரதியை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அவ்வேளை , அவ்வீதியில் வந்த டிப்பர் வாகனத்தினை மறித்து சோதனையிட முயன்ற வேளை கடமையில் இருந்த காவல்துறை அதிரடி படையினரை மோதி விட்டு , தப்பி செல்ல சாரதி முனைந்துள்ளார். அதன் போது , அதிரடி படை வீரர் ஒருவர் காயங்களுக்கு உள்ளானார்.
அதனை அடுத்து தப்பி சென்ற டிப்பர் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதில் டிப்பர் சில்லுக்கு துப்பாக்கி சன்னம் பட்டு காற்று போனதை அடுத்து, வாகனம் மேலும் செல்ல முடியாத நிலையில் நின்ற வேளை அதிரடி படையினர் விரைந்து சாரதியை கைது செய்தனர். அதேவேளை வாகனத்தில் இருந்த இருவர் தப்பி ஓடியுள்ளனர்.
கைது செய்த சாரதியிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தமையாலேயே , தப்பி ஓட முயன்றதாக தெரிவித்துள்ளார். மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்ட சாரதியும் , மணலுடன் மீட்கப்பட்ட டிப்பர் வாகனமும் பருத்தித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , தப்பியோடிய இருவரையும் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love