குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெடுந்தீவில் இடம்பெற்றது.குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில் நினைவேந்தல் இடபெற்றது.
காலை 8.15 மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி
வேண்டி திருப்பலியும், சமநேரத்தில் மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள வீரபத்திர பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மா சாந்தி வேண்டி சிறப்பு பூஜையும் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு குமுதினி படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
நினைவுத் தூபிக்கான நினைவுச் சுடர் ஏற்றல் மற்றும் மலர் அஞ்சலி செலுத்துதல் ஆகிய நிகழ்வுகளுடன் பசுந்தீவு
ருத்திரனின் குருதியின் குமுறல்கள் என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வுகளில் நெடுந்தீவு பகுதி மதத்தலைவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகு பயணித்துக் கொண்டிருந்த வேளை இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.