இரு கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் பிரவேசித்த சீனப் பிரஜை மீண்டும் நாட்டிற்குள் பிரவேசிப்பது முற்றாக இடைநிறுத்தப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரை நாடு கடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறித்த நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் குறித்த சீன பிரஜையை கைது செய்ய அந்நாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 18 ஆம் திகதி டுபாயில் இருந்து இலங்கை சென்ற இந்த சீன பிரஜை கினி இராச்சிய கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது அது போலியானது என குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தீர்மானித்து கைது செய்தனர்.
இதேவேளை போலி கடவுச்சீட்டினூடாக நாட்டிற்குள் பிரவேசித்த சீனப் பிரஜை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் எழுத்துமூல கோரிக்கையின் பிரகாரம் விடுவிக்கப்பட்டதன் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜை, சீன அரசாங்கத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரென தெரியவந்துள்ளது.
சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிவித்தலினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி டுபாயிலிருந்து இலங்கை சென்றிருந்த குறித்த சீனப் பிரஜை, கினி நாட்டு கடவுச்சீட்டினூடாக இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த போது போலி கடவுச்சீட்டு என உறுதியான பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், அதற்கடுத்த நாள் 19 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ இந்த சம்பவம் தொடர்பில் தலையீடு செய்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி, குறித்த சீனப் பிரஜை தமது அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள வீடமைப்புத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாட்டிற்குள் பிரவேசித்ததாக தெரிவித்தார்.
அவரிடமுள்ள சீனக் கடவுச்சீட்டை கவனத்திற்கொண்டு அவரை நாட்டிற்குள் அனுமதிக்க இடமளிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கமைய விடுவிக்கப்பட்ட குறித்த சீனப் பிரஜை பின்னர் மீண்டும் கடந்த 22 ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தம்மை மீண்டும் சீனாவிற்கு அனுப்புவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் குறித்த சீனப் பிரஜை ரீட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்ததுடன் இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்றன.
இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக்க பண்டார, குறித்த நபர் சீன அரசாங்கத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரென மன்றுக்கு அறிவித்தார்.
இதனிடையே, குறித்த மனுவை மீளப்பெறுவதாக சீனப் பிரஜை சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி இதன்போது தெரிவித்தார்.
குறித்த சீனப் பிரஜை தமது நாட்டில் தேடப்படும் குற்றவாளியென சீனத் தூதரகம் அறிவித்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர் குறித்த சீனப் பிரஜையை விரைவில் நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.