மடு காவல்துறைப் பிரிவில் உள்ள மடு 2ஆம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை(26) இரவு நேர ஆராதனை யை முடித்துக் கொண்டு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிறிஸ்தவ மத போதகர் ஆமோஸ் என்பவரின் மோட்டார் சைக்கிளை இடை மறித்த நபர்கள் அவர்களிடம் இருந்த பெறுமதியான பொருட்களை கத்தி முனையில் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-இச்சம்பவம் குறித்து மத போதகர் ஆமோஸ் மேலும் தெரிவிக்கையில்,,,
மடு 2ஆம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை(26) மாலை, மாலை நேர ஆராதனை முடித்துக் கொண்டு மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மடு சின்னப்பண்டிவிருச்சான் பகுதியூடாக தம்பனை நோக்கி சென்று கொண்டிருந்த போது தம்பனை காட்டுப்பகுதியில் உள்ள வீதி வளைவில் வைத்து இரண்டு இளைஞர்கள் முகத்தை துணியால் மறைத்துக் கட்டிக்கொண்டு வாள்களுடன் மோட்டார் சைக்கிளை இடை மறித்து பாய்ந்தனர்.
இதன் போது நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததனால் எனது மனைவிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இருவரும் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து எங்களிடம் இருக்கின்ற கையடக்க தொலைபேசி,பேஸ்,பை,மற்றும் நகைகளை தருமாறு கோரினார்கள்.
உடனடியாக அச்சத்தின் காரணமாக அவர்கள் கேட்ட அனைத்தையும் கொடுத்து விட்டேன். அவற்றை எல்லாம் பறித்துக் கொண்டு அவர்கள் காட்டில் பாய்ந்து சென்று விட்டார்கள். சம்பவம் இடம்பெற்ற போது அவ்விடத்தில் வேறு யாரும் வரவில்லை. சற்று தொலைவில் சென்ற போது வீதியில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.பின்னர் மக்களிடமும் ஏனையவர்களிடமும் குறித்த சம்பவத்தை தெரிவித்ததாக போதகர் தெரிவித்தார்.